சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட திரு.வி.க. நகர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 7-ஆம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இதனால், பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து வருகிறது. மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று (26.11.2021) சென்னை, புளியந்தோப்பு பகுதியில், மழையால் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளையும், திரு.வி.க. நகர், 73வது வார்டு, ஸ்டீபன்சன் சாலையில் பாலப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் துரிதமாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, சிவ இளங்கோ சாலை மற்றும் பெரவள்ளூர் காவல் நிலையம் எதிரில் உள்ள பகுதிகளிலும், அசோகா அவின்யூ பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள குளத்தை சீரமைக்கும் பணியினையும் கந்தசாமி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதையும் பார்வையிட்டு மழைநீரை துரிதமாக வெளியேற்றவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.  

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தாயகம் கவி, திரு.இ.பரந்தாமன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: