கேரளாவில் மீண்டும் ஜிகா வைரஸ்: மக்கள் பீதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே கடந்த 4 மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் ஜிகா வைரஸ் நோயும் பரவியது. 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சையின் பலனாக அனைவரும் குணமாகி வீடு திரும்பினர். இந்நிலையில் நேற்று கோழிக்கோட்டில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் கோழிக்கோடு வந்த ஒரு பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில், அவருக்கு ஜிகா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிகா வைரஸ் பரவியதை தொடர்ந்து கோழிக்கோட்டில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார துறை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் ஜிகா வைரஸ் மீண்டும் மீண்டும் பரவி வருவது அடுத்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More