புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவல் எதிரொலி: 6 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு பிரிட்டன் தடை

பிரிட்டன்: புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதை ஒட்டி 6 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. அவ்வகையில், புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அண்டை நாடுகளான போத்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்த வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது. இந்த புதிய வகை வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது; தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆகிய தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு இன்று பிற்பகல் முதல் நடைமுறைக்கு வருகிறது. கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது. எனினும், இந்த 6 நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோர், அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related Stories: