முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தவும், பராமரிக்கவும் கேரள அரசு அனுமதி தர வேண்டும்!: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு..!!

டெல்லி: முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தவும், அணையை பராமரிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தை பொறுத்தமட்டில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என்று கேரள அரசும், கேரளாவை சேர்ந்த சிலரும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் நிலுவையில் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும். அதுமட்டுமின்றி வல்லக்கடவு என்ற இடத்தில் இருந்து முல்லைப்பெரியாறு அணை வரை செல்லக்கூடிய காட்டுப்பகுதியில் உள்ள சாலைகளை செப்பலிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி முல்லைப்பெரியாறு அணை பகுதியில் உள்ள சுமார் 15 மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி கொடுத்தது. அதன் பிறகு அனுமதியை திரும்பப்பெற்றுக்கொண்டது.

கேரள அரசின் இத்தகைய நடவடிக்கையால் முல்லைப்பெரியாறு  அணை பகுதியில் இடைஞ்சலாக உள்ள மரங்களை வெட்ட முடியாத சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தவும், அணையை பராமரிக்கவும், இடைஞ்சலாக உள்ள மரங்களை வெட்ட அனுமதிக்கவும், முல்லைப்பெரியாறு அணையை ஒட்டியுள்ள வல்லக்கடவு, முல்லைப்பெரியாறு மலைச்சாலையை சீரமைக்கவும் இதற்கான உத்தரவை கேரள அரசுக்கு பிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அச்சமயமே தமிழக அரசின் கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் செவிசாய்க்குமா? என்பது தெரியவரும்.

Related Stories:

More