ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்த 40 கிலோ குட்கா பறிமுதல்: பெரம்பூரில் 2 பேர் கைது

பெரம்பூர்: ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்த 40 கிலோ குட்கா பொருள் பெரம்பூர் ரயில்நிலையத்தில் பறிமுதல்  செய்யப்பட்டது. இதுதொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்தவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெங்களூருவில் இருந்து பெரம்பூருக்கு  ரயில் மூலம் குட்கா கடத்தி வரப்பட்டு, வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுவதாக செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று காலை 8  மணி அளவில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் ரயில்வே நிறுத்தத்தில் நின்றது. அதிலிருந்து இறங்கிய பயணிகளை போலீசார் கண்காணித்தனர். இறங்கினர்.

அப்போது சந்தேகப்படும்படி 2 கைப்பையுடன் வந்த இருவரை இன்ஸ்பெக்டர் ஐயப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உள்ளிட்ட போலீசார் மடக்கி விசாரித்தனர்.  அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த கைப்பையை திறந்து பார்த்தபோது அதில் குட்கா இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கொளத்தூர் அஞ்சுகம் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தன்பாத்கிரி  (38), ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் பகுதியை சேர்ந்த சக்திசிங் (50) என்பதும் தெரியவந்தது. 20 நாட்களுக்கு முன்பு கொளத்தூர் வந்த சக்திசிங், தன்பாத்கிரி வீட்டில் தங்கியுள்ளார்.

இருவரும் வாரம் ஒருமுறை பெங்களூரு சென்று குட்கா வாங்கி ரயில் மூலம் பெரம்பூர் கடத்தி வந்துள்ளனர். பின்னர், அவற்றை வீட்டில் பதுக்கிவைத்து சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து  வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்துள்ளனர். ரயில் வரும்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கினால் அதிகப்படியான கெடுபிடி இருக்கும் என்பதால் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்குவதை வழக்கமாக வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 40 கிலோ குட்கா பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: