×

செல்லுலாய்ட் பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி

படபடக்கும் அழகிய கண்கள், குறும்பு கொப்பளிக்கும் முகமும், சிரிப்பும், புன்சிரிப்போ கலகலவென்ற சிரிப்போ ஏதானாலும் பார்க்கும் அனைவரையும் கொள்ளை கொண்டு விடுவார். அவர் காலத்து இளைஞர்களை எப்போதும் கனவினில் மிதக்கவும் சஞ்சரிக்கவும் வைத்தவர். அதற்குக் கொஞ்சமும் குறையாமல் இளம் பெண்களையும் அவர் அணிந்து நடித்த உடைகள், அணிமணிகள் வாயிலாகக் கவர்ந்து இழுத்தவர். அவர் கொஞ்சிப் பேசும் அழகுக்கே மீண்டும் மீண்டும் அவரது படங்களை தேடிச் சென்று பார்த்து ரசித்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. அவரது நடை அழகு சொல்லில் வடிக்க இயலாதது. 50களில் நடிக்க ஆரம்பித்து மணி விழா கண்டவர்.

அவர்தான் அழகு தேவதையாய் வலம் வந்த சரோஜாதேவி. கன்னடம் தாய்மொழி என்றாலும், மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தமிழில் பேசி நடித்தவர். ஆரம்ப காலங்களில் இவர் நடித்த படங்களின் உதவி இயக்குநர்கள், வசனகர்த்தா என அனைவரையும் இந்த கொஞ்சு மொழிப் பிரச்சனையால் திண்டாட வைத்தவர். கச்சா பிலிம்களையும் கணக்கில்லாமல் செலவிட வைத்து ஏகப்பட்ட டேக் வாங்கியவர். ஆனால், யாரும் இவர் குறித்துப் பெரிதாகக் குறைகள் சொல்ல இயலாதவாறு தன் நடிப்பால் ஆளுமை செலுத்தியவர். இவ்வளவு பேரும் புகழும் பெற்றவர் தமிழில் நடித்த படங்களின் எண்ணிக்கை நூறினைத் தாண்டவில்லை. இப்போதும் புகழ் மிக்க நட்சத்திரமாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறார் சரோஜாதேவி. அப்போதைய புகழ் மிக்க நட்சத்திரங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.

ராஜேந்திரன் என சம காலத்தில் அனைவருடனும் இணைந்து நடித்தவர். எம்.ஜி.ஆர். படங்களில் நடித்ததன் மூலமே பெரும் புகழை அறுவடை செய்தார் என்றால் மிகையில்லை. எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசமும் தமிழ்த் திரையுலகில் அவருக்கிருந்த பிரபலமான பேரும் புகழும் சரோஜா தேவியின் வெற்றிக்கும் வித்தாக அமைந்தன. எம்.ஜி.ஆர். ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக மாறவும் அதுவே அவருக்கு உதவியது.
கர்நாடகத்தில் பிறந்து, கன்னடப் படங்களில் நடிக்க ஆரம்பித்தவர், தமிழில் நடிக்க வந்த பின்னரே கொண்டாடப்படும் நடிகையாக மாறினார். கன்னடம், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்திருந்தாலும் தமிழில்தான் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்தார்.

அதற்கடுத்ததாக கன்னடப் படங்கள். அதிலும் குறைவாகத் தெலுங்கு, இறுதியாக இந்தி என அனைத்து மொழிகளிலும் 200 படங்களுக்குள்தான் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து இவரது பல படங்கள் நூறு நாட்கள் ஓடிக் கடந்தவையாகவும் வெள்ளி விழாப் படங்களாகவும் இருந்ததால்
புகழின் உச்சத்திலேயே எப்போதும் இருக்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது. 50களில் தொடங்கி 70கள் வரை நல்ல கதையம்சம் கொண்ட பல படங்கள்
இவருக்கு வாய்த்ததும் பெரும் பேறு. போலீஸ்காரர் மகளாகப் பிறந்தவர்  அன்றைய மைசூர் சமஸ்தானத்தில் (சமஸ்தானங்களின் ஒழிப்புக்குப் பின்னர் இப்போது அது பெங்களூரு என்று மாறி விட்டது). பைரப்பா - ருத்ரம்மா தம்பதியினரின் நான்காவது மகளாக 1938 ஜனவரி 7 ஆம் தேதி பிறந்தவர் ராதா தேவி. ஆம், அதுதான் அவரது அசல் பெயர். தந்தையார் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட காவல்துறையில் போலீஸ்காரராகப் பணியாற்றியவர்.

அம்மா குடும்ப நிர்வாகம் முழுவதையும் கையில் எடுத்துக்கொண்டு அதில் கவனத்தைச் செலுத்தியவர். இவருக்கு முன்னதாக மூன்று பெண் குழந்தைகள் இருந்ததால், ஆண் குழந்தையின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இவர் வேண்டாத குழந்தையாகவே வேண்டாவெறுப்பாக வளர்க்கப்பட்டார். இவருடைய தாத்தா மாயண்ணா கவுடா முற்றிலும் இந்தப் பெண் குழந்தையை வெறுத்து ஒதுக்கியதுடன், யாருக்காவது தத்து கொடுத்து விடச் சொல்லி தன் மகனை வலியுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறார். ஆனால், தந்தையின் ஆதரவு ராதா தேவிக்கு முழுமையாகக் கிடைத்தது. இவருக்கு மூன்று மூத்த சகோதரிகளும் ஒரு இளைய சகோதரியும் உண்டு. ஐந்து குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பதால், அம்மா இவருக்கு தலைமுடியை கிராப் செய்து ஆண் குழந்தை போல் உடை உடுத்தி ஒரு பையனைப் போலவே நடத்துவாராம்.

சிறு வயதில் பாடுவதில் நல்ல ஆர்வம் இருந்ததால், பாட்டு கற்றுக் கொண்டார். சினிமாப் பாடல்கள், அதிலும் இந்திப் பாடல்களைப் பாடுவதில் பெரு விருப்பம் அந்த வயதிலேயே இருந்திருக்கிறது. அதிலும் நடிகை பீனா ராய் நடித்த ‘அனார்கலி’ இந்திப் படத்தின் பாடல்களை எப்போதும் பாடிக் கொண்டிருப்பாராம். அப்படித்தான் பள்ளிப் பருவத்தில் விழாக்களில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அனைத்துப் பள்ளிகளின் மாணவிகளுக்கான போட்டியில் பாட, அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் பிரபல கன்னட நடிகர் ஹொன்னப்ப பாகவதர். புனித தெரசா பள்ளி மாணவியான ராதா தேவி பாடிய ‘யே ஜிந்தஹி ஹே’ இந்திப் பாடல் அனைவரையும் கவர்ந்தது. தலைமை தாங்கிய ஹொன்னப்ப பாகவதர், ராதா தேவியின் தாயாரிடம், ‘உங்க பொண்ணு நல்லா பாடுறா, சினிமாவில் பாட வைக்கலாம்.

நாளை அழைத்து வாருங்கள்’ என்று சொல்லி விட்டுப் போக அம்மா ருத்ரம்மா ஆனந்தத்தின் எல்லைக்கே போய் விட்டார். மகளை அழைத்துக்கொண்டு போகவே, பள்ளி மாணவியாக சீருடையில் பார்த்த பெண்ணா இது என்று அசந்து போய் விட்டார் பாகவதர். ராதா தேவியின் சௌந்தர்யமான அழகு பாடுவதை விட அவரை நடிக்கவே வைக்கலாம் என்று அவருக்குத் தோன்றி விட்டது. இப்படித்தான் திரையுலக வாய்ப்பு ராதா தேவியை வந்தடைந்தது. ‘மகாகவி காளிதாஸ்’, ‘பஞ்ச ரத்தினம்’, ‘ஸ்ரீராம பூஜா’ என அடுத்தடுத்து மூன்று கன்னடப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ராதா தேவி சினிமாவுக்காக சரோஜா தேவி ஆனார். மின்னும் தாரகைகளுக்கு மத்தியில் ஓர் ஒளி மிக்க நடன நட்சத்திரம் சரோஜா தேவி நடிக்க வந்த 50களின் காலகட்டத்தில் பெரும் புகழுடன் உச்சத்தில் இருந்த நட்சத்திரங்கள் அஞ்சலி தேவி, பானுமதி, சாவித்திரி, பத்மினி போன்றவர்கள் அசாத்தியமான நடிப்பாற்றல் மிக்கவர்களும் கூட.

அவர்களுடன் எம்.என்.ராஜம், விஜயகுமாரி, அவ்வப்போது தமிழிலும் வந்து நடித்து விட்டு செல்லும் வைஜெயந்தி மாலா, ஜமுனா என பல நட்சத்திரங்கள். அந்த நேரத்தில்தான் கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்து சேர்கிறார் சரோஜாதேவி. பிற நடிகைகளைப் போல் முறையாக நடனம் பயின்றவர் இல்லை, நாடகங்களில் நடித்து பண்பட்ட அபாரமான நடிப்புத் திறன், நல்ல பளிச்சிடும் நிறம், உயரம், என எதுவுமே இல்லாமல் தமிழ்த் திரையைத் தன் வசமாக்கியவர். ஆரம்ப காலத்தில் தமிழில் வரிசையாக இரண்டு மூன்று படங்களிலும் நடனம் ஆடும் வாய்ப்புதான் கிட்டியது. பீம்சிங் இயக்கிய ‘திருமணம்’ படத்தில் ஒரே ஒரு நடனம். நாட்டிய உலகில் பல்வேறு விதமான நடனங்களால் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த கோபி கிருஷ்ணா, பிஞ்சு வயதிலிருந்து பரதத்தில் சிறந்த குமாரி கமலா என இருவரும் அப்படத்தில் நடனமாடியிருக்கிறார்கள்.

சரோஜா தேவியும் அப்படத்தில் ஒரு நடனத் தாரகை என்றால் நம்ப முடிகிறதா? வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்லாமல், அபாரமான திறமையும் ஒளிந்திருந்ததாலேயே அவரால் துணிச்சலுடன் நடனமாடவும் முடிந்தது. பூலோக ரம்பை, திருமணம் இரு படங்களிலும் நடனம் மட்டுமே அவரது பங்களிப்பு. தமிழில் நல் வாய்ப்பு நல்கிய நல்ல மனிதர்கள் தமிழ்த் திரையின் முதல் கனவுக்கன்னியாகக் கொண்டாடப்பட்டவர் டி.ஆர்.ராஜகுமாரி. அவரை தன்னுடைய ‘கச்ச தேவயானி’ தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் தமிழ்த்திரையின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான கே.சுப்பிரமணியம். அதே படத்தைக் கன்னடத்தில் எடுப்பதற்காக நாயகியைத் தேடியபோது, கன்னடப் படம் ஒன்றின் மூலம் இயக்குநரின் கண்களில் தென்பட்டவர் சரோஜாதேவி.

கருப்பு நிறம் கொண்ட பெண்களையும் நாயகிகளாக்க முடியும் என்று நிரூபித்தவர் அவர். சரோஜா தேவியை தன் கன்னடப் படத்துக்கு நாயகியாக்கி விட முடிவு செய்தார். நேரிலும் அவரை சந்தித்து தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். அத்துடன் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் இந்தப் பெண்ணுக்குக் கிடைக்கும் என்றும் திடமாக நம்பினார். அதனால், சென்னை வந்தால் நிறையப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று பெங்களூரிலிருந்து சென்னை வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். கே.சுப்பிரமணியம் மீதும் அவருடைய பேச்சின் மீதும் நம்பிக்கை இருந்ததால், சரோஜாதேவியின் தாயார் தன் மகளை அழைத்துக்கொண்டு சென்னை வந்தார். ‘கச்ச தேவயானி’ கன்னடப் பதிப்பு படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.  

இந்த வேளையில் மூன்றாவது தமிழ்ப்பட வாய்ப்பு சரோஜாதேவிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் காத்திருந்தது. ஆம், நல்வாய்ப்பு என்பது எந்த இடத்திலும் எவர் ரூபத்திலும் வரும் என்பதற்கு இச்சம்பவமே சாட்சி. சின்ன அண்ணாமலை பல்துறை வித்தகர். திரைப்படக் கதாசிரியர், பட
அதிபர், அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. அவர் கடற்கரையில் காற்று வாங்க வந்தவர், அங்கு எதிர்பாராத விதமாக நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தைச் சந்திக்கிறார். அவருடன் மற்றொரு இளம் பெண்ணும் இருக்கிறார். அந்தப் பெண்ணின் துறு
துறுப்பான முகமும் அலைபாயும் கண்களும் சின்ன அண்ணாமலையை ஈர்த்தன.

அந்தப் பெண் யாரென்று வினவ, ‘அப்பா, எடுக்கும் கன்னடப் படத்தில் இந்தப் பொண்ணு நடிக்கறா, தமிழ்ப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைச்சாலும் நடிப்பா; நீங்க அடுத்து எடுக்கப்போற படத்துல ஏதாவது வாய்ப்புக் குடுங்க’ என்று பத்மாவிடமிருந்து பதில் வருகிறது. அதை மனதுக்குள் இருத்திக்கொண்ட சின்ன அண்ணாமலை, பத்மாவின் தந்தையும் இயக்குநருமான கே.சுப்பிரமணியத்தைத் தொடர்புகொண்டு அந்தப் பெண் பற்றி மேலும் விசாரித்துத் தகவல் அறிகிறார். வாய்ப்புக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையும் அவருக்குள் எழுகிறது. அதைத் தொடர்ந்து சின்ன அண்ணா
மலையின் அழுத்தமான சிபாரிசு மூலம், ‘பி.ஆர்.பந்துலு தயாரித்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடனத்துடன் வசனமும் பேசக்கூடிய ஒரு சிறு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அழகு, இளமை இரண்டுக்கும் தேவதைகளான மோகினிகள் இருவர், அழகு பெரிதா, இளமை பெரிதா என ஆடிப் பாடுவதாக அப்பாடல் காட்சி அமைந்தது.

‘அழகினிலே… யௌவனமே’ என்ற அந்தப் பாடலும் பிரபலமானது. சரோஜாதேவிக்கு அது சிறு வேடம்தான் என்றாலும், படத்தின் நாயகனான சிவாஜிக்கும், படத்தின் கதையிலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமைந்தது. தாய், தந்தை இருவரும் சுயரூபம் பெற வேண்டி தன் இளமையையும் அழகையும் அந்த தேவதைகளுக்கு தானம் அளிப்பதாகக் கதை நீண்டு செல்லும். கட்டுடல் கொண்ட இளைஞன் கஜேந்திரன், அழகையும் இளமையையும் பறி கொடுத்து வயோதிகனாக, உடல் தளர்ந்து தடுமாறும் நிலை. சிவாஜியும் மிக அற்புதமாக அந்த வேடத்தைச் செய்தார். சரோஜாதேவிக்கும் இப்படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது. தமிழ்ப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு சின்ன அண்ணாமலை மூலம் அவருக்குக் கிடைத்தது. இதே படம் கன்னடத்திலும் ‘ரத்னகிரி ரஹஸ்யா’ என்ற பெயரில் வெளியானது.

அதிலும் சரோஜாதேவியே இந்த வேடத்தைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடனமாடும் வாய்ப்பு மூலம் அவருக்கு 250 ரூபாய் ஊதியம் பெற்றுத் தந்தது. விஜயா - வாஹினி படப்பிடிப்புத் தளத்தில் ‘கச்ச தேவயானி’ படப்பிடிப்பு தொடங்கியது. உணவு இடைவேளையில் பக்கத்து செட்டில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தவர், இயக்குநர் சுப்பிரமணியத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். அங்கு அமைதியாக உட்கார்ந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சரோஜா தேவியைப் பார்த்துக்கொண்டே போனார். கே.சுப்பிரமணியத்திடம் அந்தப் புதுமுக நடிகை பற்றி விசாரித்தார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்புவதற்கு முன்பாக சரோஜாவிடம் நெருங்கி வந்து, ‘நல்லா இருக்கியாம்மா?’ என்று கன்னடத்தில் குசலம் விசாரித்து விட்டுப் போனார்.

அவர் வந்தபோது செட்டில் ஒரு புது வெளிச்சம் பரவுவதை நாயகி உணர்ந்தார். அங்கிருந்த அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தியதைப் பார்த்துக் கொண்டிருந்த புதுமுகம் சரோஜா, இயக்குநரிடம் ‘அவர் யார் சார்?’ என்று விசாரித்தார். இயக்குநர் சொன்ன பதில் புதுமுக நடிகையைத் தூக்கி வாரிப் போட வைத்தது. ஆம், அங்கு வந்து நடிகையிடம் குசலம் விசாரித்து விட்டுச் சென்றவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அப்போது அவருடைய ‘நாடோடி மன்னன்’ படத்தின் படப்பிடிப்புதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

1957 தொடங்கி 67 வரை சரோஜா தேவியின் சாம்ராஜ்யம் தமிழ்த் திரையுலகில் கோலோச்சுவதற்கு அடித்தளம் இட்டவர் எம்.ஜி.ஆர். என்பது அந்தக் கணத்தில் சரோஜாதேவி மட்டுமல்ல, யாருமே எதிர்பார்க்காத ஒரு ஆச்சர்யகரமான திடீர் திருப்பம். அதன் பின் தமிழில் அவருக்குக் கிடைத்த வாய்ப்பு சரோஜாதேவியின் திரையுலக வாழ்க்கையையே முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அவரைப் புகழேணியில் ஏற்றி வைத்ததுடன் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அடுத்த இதழிலும் அபிநய சரஸ்வதி தொடர்வார்.

(ரசிப்போம்!)

சரோஜாதேவி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்:

திருமணம், தங்கமலை ரகசியம், பூலோக ரம்பை, மனமுள்ள மறுதாரம், நாடோடி மன்னன், சபாஷ் மீனா, செங்கோட்டை சிங்கம், தேடி வந்த செல்வம், இல்லறமே நல்லறம், பாகப்பிரிவினை, கல்யாண பரிசு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, ஓடி விளையாடு பாப்பா, பிரெசிடெண்ட் பஞ்சாட்சரம், வாழ வைத்த தெய்வம், எல்லோரும் இந்நாட்டு மன்னர், யானைப்பாகன், இரும்புத்திரை, கைராசி, பார்த்திபன் கனவு, விடிவெள்ளி, மணப்பந்தல், பாலும் பழமும், பனித்திரை, திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, குடும்பத்தலைவன், ஆடிப்பெருக்கு, வளர்பிறை, பாசம், பார்த்தால் பசி தீரும், மாடப்புறா, ஆலயமணி, தாயைக் காத்த தனயன், இருவர் உள்ளம், பெரிய இடத்துப் பெண், குலமகள் ராதை, பணத்தோட்டம், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், கல்யாணியின் கணவன், வாழ்க்கை வாழ்வதற்கே, பணக்காரக் குடும்பம், தாயின் மடியில், படகோட்டி, தெய்வத்தாய், பாசமும் நேசமும், புதிய பறவை, என் கடமை, ஆசை முகம், எங்க வீட்டுப் பிள்ளை, கலங்கரை விளக்கம், தாயும் மகளும், நான் ஆணையிட்டால், நாடோடி, தாலி பாக்கியம், பறக்கும் பாவை, அன்பே வா, பெற்றால்தான் பிள்ளையா, பெண் என்றால் பெண், அரச கட்டளை, பணமா பாசமா, என் தம்பி, தாமரை நெஞ்சம், அன்பளிப்பு, தங்க மலர், அஞ்சல் பெட்டி 520, ஐந்து லட்சம், குலவிளக்கு, ஓடும் நதி, மாலதி, கண்மலர், சிநேகிதி, உயிர், தேனும் பாலும், அருணோதயம், சக்தி லீலை, பத்து மாத பந்தம், ஸ்ரீசாமுண்டீஸ்வரி மகிமை, எல்லையம்மன், பூவுக்குள் பூகம்பம், ஒரே தாய் ஒரே குலம், தாய் மேல் ஆணை, தர்ம தேவன், பொன் மனச் செல்வன், பாரம்பரியம், ஒன்ஸ்மோர், ஆதவன்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்

Tags : women ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது