பாஸ்ட் புட் கடையில் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க நண்பர்களுக்குள் கடும் மோதல்: ஒருவருக்கு சரமாரி வெட்டு; சினிமா பாணியில் பரபரப்பு

பெரம்பூர்: வியாசர்பாடி, பி.வி.காலனி, 30வது தெருவை சேர்ந்தவர் விஜய் (25). இவர், நேற்று முன்தினம் இரவு, தனது நண்பர்களான பெரம்பூர் பாரதி சாலையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (26) மற்றும் மணி (எ) குள்ளமணி (28) ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். பின்னர், இவர்கள் மூவரும் வியாசர்பாடி எம்.பி.எம் தெருவில் உள்ள பாஸ்ட் புட் கடைக்கு சென்றனர். அங்கு சாப்பிட்டு முடித்தவுடன் யார் பணம் கொடுப்பது என்பதில் மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால், கடையில் இருந்த பொருட்களை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒருகட்டத்தில், கோபாலகிருஷ்ணன் மற்றும் குள்ளமணி ஆகியோர், பாஸ்ட் புட் கடையில் இருந்த இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து  விஜய்யை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த எம்கேபி நகர் போலீசார், விஜய்யை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குள்ளமணியை தேடி வருகின்றனர். சின்ன தம்பி, பெரிய தம்பி திரைப்பட பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்  பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியது.

Related Stories:

More