போதையில் நடுரோட்டில் ரகளை ஏட்டு சஸ்பெண்ட்: நண்பர்கள் கைது

சென்னை: புளியந்தோப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லாரன்ஸ் (25), காசிமேட்டை சேர்ந்த சந்தோஷ் (21), காசிமேடு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் விமல்குமார் (43) ஆகிய மூவரும், புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள ஒரு பிரியாணி கடை முன்பு பிளாட்பாரத்தில் இரவு 12 மணி அளவில் அமர்ந்து மது அருந்திவிட்டு, கடும் ரகளையில் ஈடுபட்டனர். இவர்களை தட்டிக் கேட்டவர்களை கத்தியால் குத்தவும் முயன்றுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், கீழ்ப்பாக்கம் தலைமை காவலர் வேல்ராஜ் அங்கு விரைந்து விசாரித்தபோது, அவரையும் மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

மேலும், தலைமை காவலர் விமல்குமார், நானும் ஒரு காவலர்தான், என போதையில் ரோந்து பணியில் இருந்த வேல்ராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர், லாரன்ஸ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் பிடித்து வழக்கு பதிவு செய்து, அவர்கள் வைத்திருந்த கத்தியையும் பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தார். அங்கிருந்த தப்பிய தலைமை காவலர் விமல்குமாரை சஸ்பெண்ட் செய்து சென்னை வடக்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் துரைக்குமார் உத்தரவிட்டார்.

Related Stories:

More