வேலை வாங்கி தருவதாக ரூ.2.16 லட்சம் மோசடி போலீஸ்காரருக்கு 3 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தேனாம்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த காவலர் ஆர்.சுப்பிரமணியம் என்பவர், விஐபி பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இவர், நாமக்கல்லை சேர்ந்த கவிதா என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுபற்றி கேட்டபோது, கவிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, கவிதா தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சுப்பிரமணியம் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சைதைப்பேட்டை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் எட்வின் ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுப்பிரமணியம் மீது குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.34 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், கவிதாவிடம் வாங்கிய பணம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்தை திரும்ப தரவேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் தீர்ப்பில் கூறியுள்ளார்.

Related Stories:

More