ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி தலைமறைவாக இருந்த பெண் 2 ஆண்டுகளுக்கு பின் கைது: கெரோனா தடுப்பூசியால் சிக்கினார்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (46). இவரது தோழி அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா (42) என்பவருடன் சேர்ந்து கடந்த 2019ம் ஆண்டு கொடுங்கையூர் பகுதியில் தீபாவளி ஏலச்சீட்டு மற்றும் தங்க நகை சேமிப்பு திட்டத்தை நடத்தி, பொதுமக்களிடம் ரூ.78.13 லட்சம் பெற்று தலைமறைவானார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சென்னை கொடுங்கையூர் காந்தி நகரை சேர்ந்த பிரேமா உள்பட பாதிக்கப்பட்ட பலர் கூட்டாக புகார் அளித்தனர். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஈஸ்வரி மற்றும் சசிகலா ஆகியோர் ஏலச்சீட்டு மற்றும் தங்க நகை சேமிப்பு திட்டம் மூலம் மோசடி செய்தது உறுதியானது.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆக்டோபர் 20ம் தேதி ஈஸ்வரியை கைது செய்தனர். தலைமறைவான சசிகலாவை வலைவீசி தேடி வந்தனர். இந்தவேளையில், குற்றவாளியான சசிகலா, கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் அதன் மூலம் அவரை பிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் உதவியுடன், சசிகலாவின் ஆதார் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது, காஞ்சிபுரம், அரசு பள்ளியில் நடந்த முகாமில் சசிகலா, தனது ஆதார் மூலம் தடுப்பூசி போட்டது தெரிந்தது. அதைதொடர்ந்து போலீசார், கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சசிகலாவை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories: