முதல் டெஸ்ட்: இலங்கை வெற்றி

காலே: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் காலே நகரில்  நவ.21ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இலங்கை 386 ரன்னுக்கும், வெ.இண்டீஸ் 230ரன்னிலும் ஆட்டமிழந்தன. அதனையடுத்து 156 முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 191ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதனால் 347ரன் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வெ.இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 52ரன் எடுத்த நிலையில் நேற்று காலை கடைசிநாள் ஆட்டத்தை தொடங்கியது.

விரைவில் ஆட்டத்தை முடித்து விடலாம் என்ற இலங்கையின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. களத்தில் இருந்த நெக்ருமா போன்னர் 18*, ஜோஷ்வா டா சில்வா 15* ரன்னுடன் நிதானமாக விளையாடி இலங்கையின் பொறுமையை சோதித்தனர். அரை சதம் விளாசிய ஜோஷ்வா 54ரன்னில் வெளியேறினார். உணவு இடைவேளைக்கு பிறகு மற்றவர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்க, வெ.இண்டீசின் 2வது இன்னிங்ஸ் 79ஓவரில் 160ரன்னுக்கு முடிந்தது. அதனால் இலங்கை 187ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. வெ.இண்டீசின் போன்னர் 68* ரன்னுடன் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் லசித் 5, மெண்டீஸ் 4 விக்கெட் எடுத்தனர்.

Related Stories: