நியூசியுடன் முதல் டெஸ்ட்: இந்தியா பொறுப்பான ஆட்டம்; அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் அசத்தல்

கான்பூர்:  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில்  வீரர்கள் பொறுப்பாக விளையாடியதால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 258ரன் குவித்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் அரங்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் களமிறங்கியது. அஜிங்கிய ரகானே தலைமையிலான அணியில் ஷ்ரோயாஸ் அய்யர் அறிமுக வீரரராக களமிறங்கினார். அவருக்கு டெஸ்ட் வீரருக்கான தொப்பியை முன்னாள் கேப்டன் காவஸ்கர் வழங்கினார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியிலும்  ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா அறிமுகமானார். இந்திய தரப்பில் தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், ஷூப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். கேல் ஜேமிசன் வேகத்தில் மயாங்க் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய ஷூப்மனையும் 52ரன்னில்(5பவுண்டரி, 1சிக்சர்) ஜேமிசன் வெளியேற்றினார். வழக்கம் போல் பொறுமையடன் விளையாடிய புஜாரா 26ரன் எடுத்தபோது அவரை டிம் சவுத்தீ பெவிலியனுக்கு அனுப்பினார். பொறுப்புணர்ந்து விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் ரகானே 6பவுண்டரிகளுடன் 35ரன் விளாசி ஜேமிசன்னிடம் போல்டானார். அதன் பிறகு அறிமுக வீரர் ஷ்ரேயாசுடன், ரவீந்திர ஜடேஜா இணை சேர்ந்தார். இருவரும்  அசத்தலாக விளையாடி அரைசதம் கடந்தனர். வெளிச்சமின்மை காரணமாக 84 ஓவருடன் முதல்நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்தியா முதல் இன்னிங்சில் 4விக்கெட் இழப்புக்கு 258ரன் எடுத்திருந்தது. ஷ்ரேயாஸ் 7பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 75*, ஜடேஜா 6 பவுண்டரிகளுடன் 50* ரன்னுடன் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை  தொடர்கின்றனர்.

Related Stories: