கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை; இத்தாலி அரசு அதிரடி.!

ரோம்: ‘‘மக்கள் அனைவரும் வரும் டிச.6ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வருவதற்கு அனுமதியில்லை’’ என தடை விதித்து இத்தாலியில் அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவின் முதல் அலையில் இத்தாலி கடுமையாக  பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரை இத்தாலியில் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. உலகம் முழுவதும் மக்கள் இந்த தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.

பெரிதும் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட கொரோனாவின் 2வது அலையில் இருந்து, பெரும்பாலான நாடுகள் தப்பிப் பிழைத்தன. தற்போது கொரோனாவின் அடுத்த அலை குறித்த அச்சம் நீடிக்கும் நிலையில், மக்கள் அனைவரும் அவசியம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என இத்தாலி அரசு அறிவித்தது. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும், இத்தாலியில் ஏனோ மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மெத்தனமாக உள்ளனர். இதையடுத்து இத்தாலி அரசு தற்போது கடுமையான நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. ‘‘வரும் டிச.6ம் தேதிக்குள் மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வீடு, வீடாக கணக்கெடுக்க உள்ளோம். 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் வரும் 6ம் தேதிக்கு பின்னர் சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வருவதற்கு அனுமதியில்லை.

பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் அவர்களுக்கு அனுமதியில்லை’’ என்று தடை விதித்து, நேற்று அந்நாட்டு பிரதமர் மரியோ டிராகி அறிவித்துள்ளார். ‘‘இத்தாலியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் நீடிக்கிறது. இதற்கு மக்கள் தடுப்பூசிகளை முறையாக போட்டுக் கொள்ளாததே காரணம்.  தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், போலீசார் மற்றும் ராணுவத்தினர் என பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எல்லை நாடுகளிலும் நிலைமையை கண்காணித்து வருகிறோம். அந்நாடுகளில் இருந்து இத்தாலிக்கு வருபவர்கள், கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே , அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றும் பிரதமர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: