×

இரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள் குறித்த இரண்டாவது உச்சி மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு


டெல்லி : புதுடெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியாவில் உள்ள இரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள் குறித்த இரண்டாவது உச்சி  மாநாட்டில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.

இரண்டாவது உச்சி  மாநாட்டில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார் விவரம் வருமாறு

காலை வணக்கம் !!!

இம்மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஒன்றிய மற்றும் பிற மாநிலங்களின் அமைச்சர் பெருமக்களே, மூத்த அதிகாரிகளே மற்றும் தொழில் பிரதிநிதிகளே !

     இன்று, ஒன்றிய அரசின் இரசாயன மற்றும் உரங்கள் துறை சார்பில் நடைபெறும் இந்த உலகளாவிய இரசாயன மாநாட்டில் நடைபெறவுள்ள விவாதத்தில் நானும் பங்கேற்பதில் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

     தொழில் புரிவதற்கான சுற்றுச் சூழல்  சிறந்து விளங்கிட, எங்கள் அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை இந்த மாமன்றத்தின் முன் எடுத்துரைக்க எங்களுக்கு இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு அளித்தமைக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் சார்பில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     மிகவும் முற்போக்கான மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட  தமிழ்நாடு,  அகில இந்திய அளவில் இரண்டாம் நிலை வகிக்கிறது,  அது மட்டுமல்ல,  மொத்த மாநில உள்நாடு உற்பத்தி (GSDP) யில், அகில இந்திய அளவில், தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

     இரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல் துறைகள் மட்டுமின்றி, அனைத்து துறைகளும் செழித்தோங்கும் வகையில், சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை எங்கள் மாநிலம் வழங்குகிறது.

     கோவிட் தொற்றினால் ஏற்பட்ட இக்கட்டான பொருளாதாரச் சூழ்நிலையிலும் கூட, ஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் முதலீடுகளை ஈர்த்து, இந்தியாவிலேயே அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இது, முதலீட்டாளர்கள் எங்கள் மாநிலத்தின் மீது எந்த அளவிற்கு நம்பிக்க வைத்துள்ளார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

     நல் ஆளுமைக்குறியீட்டில் நாங்கள் அகில இந்திய அளவில் முதலிடத்தில் இருந்திடினும், அதோடு நாங்கள் திருப்தி அடைந்து விடவில்லை.  மாநிலத்தில் வணிகம் புரிந்திடும் சூழ் நிலையை மேலும் சிறப்புற மேம்படுத்திட அரும்பாடு பட்டு உழைத்து வருகிறோம்.

     இரண்டு தினங்களுக்கு முன்புதான், 35,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட முதலீடுகள் மற்றும் 75,000 த்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்  என்ற வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.  இது, முதலீட்டாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள பெரும் நம்பிக்கையை உலகிற்கு வெளிப்படுத்துகிறது.

     கடல் சார்ந்த நிலப்பரப்பு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.  அது மட்டுமின்றி, 5 பெரிய வணிகத் துறைமுகங்கள், 4 சர்வதேச விமான நிலையங்கள், 32 ஜிகா வாட்ஸ் நிறுவப்பட்ட எரிசக்தி, தொழில் நுட்பக் கொள்கைகள், வணிகம் புரிவோரின் தேவைகளைப் புரிந்து கொண்டு செயல்படும் அரசாங்கம், ஆகிய சிறந்த கட்டமைப்புகளை வழங்கி, தமிழ் நாட்டிற்கு முதலீடு மேற்கொள்ள விரும்புவோர் அனைவருக்கும், அவர்களின் தொழில்களை மேம்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

     உலகப் பொருளாதாரத்தையே இருட்டடிப்பு செய்து, வணிக உலகத்தை வெகுவாக பாதித்த கோவிட் சூழ் நிலையிலும், எங்களது அரசாங்கம், அத்தியாவசிய சேவைகள், தொழிற்சாலைகள், ஏற்றுமதி மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஆகியவை தடையின்றி இயங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது.

     மாநிலத்தில் உள்ள உற்பத்தித் துறையின் வளர்ச்சித் திறன் மற்றும் பெருமளவில் இருக்கும் உள்நாட்டுத் தேவைகள் ஆகியவற்றை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளும் வகையில், எங்கள் மாநிலத்தின் தொலைநோக்குப் பார்வையினை ஒன்றிய அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைத்து செயல்படுகிறோம்.   2030ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் மாபெரும் இலட்சியம்.  ஒவ்வொரு தொழிலுக்கும், இரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தான் மூலப்பொருள் என்பதை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். எங்கள் மாநிலம்,  தொழில் மயமாக்கப்பட்டதற்கும், உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தில் மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்ததற்கும், இத் துறையின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் உள்ளது.

     தமிழ்நாட்டில், வலுவான இராசயனத் தொழில் சுற்றுச் சூழல் உள்ளது. தமிழ்நாட்டில், 2500 க்கும் மேற்பட்ட இரசாயனத் தொழிலகங்கள் உள்ளது. இதன் பொருட்டு, அகில இந்திய அளவிலான இரசாயன உற்பத்தியில், தமிழ்நாடு 3வது பெரிய பங்களிப்பாளராகவும் விளங்குகிறது.  

     இந்தத் துறையின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த எங்கள் அரசு, சிறப்பு இரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள் துறையை வளர்ந்து வரும் துறைகளாக வகைப்படுத்தியதோடு மட்டுமின்றி, கூடுதல் சலுகைகள் மூலம் நிதி உதவியினை நீட்டித்திடவும் வழிவகை செய்துள்ளது.  தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய நகரங்களில் 3 பெரிய பெட்ரோ கெமிக்கல் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளது.  இத்துறையில் உள்ள தொழிலகங்களுக்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்களின் விநியோகத்தை உறுதிப் படுத்தி, பெட்ரோ கெமிக்கல் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக, தமிழ்நாட்டினை வலுப்படுத்தி,  நிலைநிறுத்திட இந்த பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் உறுதி செய்யும்.

     மேற்கூறிய பெட்ரோ கெமிக்கல் திட்டங்கள், சிறிய மற்றும் பெரிய அளவிலான கீழ்நிலை விநியோகம் தொடர்பான முதலீட்டு வாய்ப்புகளுக்கான மகத்தான சாத்தியக் கூறுகளை வழங்குவதன் மூலம், இத்துறையில் எங்கள் வளர்ச்சி உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டப்படுகிறது.

     இந்தச் சிறப்பான சுற்றுச் சூழலை மேம்படுத்திட நாங்கள் கீழ்க்கண்ட சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்:-

1. பியாஸ்டிக் உற்பத்தி மற்றும் அதற்கான சுற்றுச் சூழல், உதிரிபாகங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்திடும் வகையில், சென்னைக்கு அருகில் 306 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு பாலிமர் பூங்காவை நிறுவி உள்ளோம்.

2. மேலும், மாநிலத்தில் மருந்துப் பொருட்களுக்கான தொழிற் பூங்கா ஒன்றும் ஜவுளிப் பொருட்களுக்கான தொழிற் பூங்கா ஒன்றும் அமைத்திட திட்டமிடப்படுள்ளது.

3. நாடு முழுவதும் மூலப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், சுற்றுச் ழுழலை பலப்படுத்தும் விதமாகவும், நாடு முழுவதும் நகர எரிவாயு விநியோகக் குழாய்கள் நிறுவிட தமிழ்நாடு அரசு, பெரு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

4. பல்வேறு மாவட்டங்களில் TTRO மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுவதன் மூலம், தொழிலகங்களுக்கான நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.

5. எங்கள் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அனைத்து இரசாயன சங்கங்களுடனும் தொடர்ந்து ஆலோசனைகள் மேற்கொண்டு, இத்தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

6. மாநிலம் முழுவதும் நில வங்கிகளைப் பலப்படுத்தி, புதிய தொழில் மண்டலங்கள் உருவாக்குவதோடு மட்டுமின்றி, மின்னணுவியல், உணவுப் பதப்படுத்துதல், மரச்சாமான்கள், இரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கான நிலத் தொகுப்பு அமைத்திடவும் (Sector Specific Industrial Parks) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

7. எங்கள் அரசு, பெரும்பாலான நிறுவனங்களுக்கு தடையில்லா மின்வாரம் வழங்கி வருகின்றது. மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளான சூரிய சக்தி மற்றும் காற்றாலை எரிசக்திகள் மூலம், எங்கள் மின் உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தூய்மையான எரிசக்தியையும் வழங்கிட முனைப்புடன் பணியாற்றி வருகிறோம்.

8. சமீபத்தில், நாங்கள் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச்சாளர இணைய தளம் 2.0 துவக்கி வைத்துள்ளோம். இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு நூற்றிற்கும் மேற்பட்ட சேவைகளை அளித்து, தேவையான அனுமதிகள் அனைத்தும், காலக்கெடுவிற்குள் வழங்கப் படுவதை உறுதி செய்து தருகிறோம். 2 நாட்களுக்கு முன்பு, இதன் கைபேசி செயலியையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

9. தொழில் நண்பன் (Biz Buddy) என்ற ஒரு குறைதீர் இணைய தளத்தினையும் நிறுவி உள்ளோம். இதன் மூலம், எந்த ஒரு அரசாங்கத் துறையிடம் சிக்கல்களோ, தாமதங்களோ ஏற்பட்டாலும், தொழிலகங்கள் இந்த உதவி அழைப்பு முறையைப் பயன்படுத்தி, தீர்வு காண இயலும் என்ற வகையில்  இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நன்றி நவிலல்:

     இந்த மாநாடு, இங்கே கூடியுள்ள அனைத்து இரசாயனத் தொழிலகங்களுக்கும் பெரும் பயன் அளிக்கும் என்று நம்புகிறேன். மேலும், இத்துறையில் முதலீட்டாளர்களை. எங்கள் மாநிலத்தில் அமையப் பெற்றுள்ள சிறந்த சுற்றுச்சூழலை நன்கு பயன்படுத்தி உங்களது புதிய மற்றும் விரிவாக்கத் திட்டத்தினை தமிழ்நாட்டில் நிறுவிடுமாறு, இந்தத் தருணத்தில்  அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.

     இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைக் கூறி, விடைபெறுகிறேன்.

Tags : Minister ,Gold Southern ,Summit ,Chemical and Petrochemicals , பெட்ரோகெமிக்கல்ஸ்
× RELATED தேசிய அளவிலான ஆக்சுவேரியல்...