×

இந்தியா - நியூசிலாந்து மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

கான்பூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. அதில் ரோகித் தலைமையிலான இந்திய அணி 3-0 என ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்து உலக டி20 லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்தது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன.

கடந்த ஜூன் மாதம் லண்டனில் நடந்த  டெஸ்ட் உலக கோப்பை பைனலில் இந்தியாவை தோற்கடித்த நியூசி. அணி கோப்பையை கைப்பற்றியது. அந்த தோல்விக்கும் இந்திய அணி பதிலடி தர வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கேற்ப ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய ரகானே தலைமையில் இந்திய அணி முதல் டெஸ்டில் களமிறங்குகிறது. கோஹ்லி உள்பட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தாலும்... புஜாரா, அஷ்வின்,  அகர்வால், ஜடேஜா, இஷாந்த், உமேஷ், சாஹா ஆகியோரின் அனுபவம் கை கொடுக்கும் என நம்பலாம்.

இவர்களுடன் இளம் வீரர்கள்  அக்சர், கில், சிராஜ் ஆகியோரும் திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். அதிரடி வீரர்கள் ஷ்ரேயாஸ், சூரியகுமார், ஸ்ரீகர் பரத்  அறிமுக வீரர்களாக அசத்த உள்ளனர். டி20 தொடரில் இருந்து விலகி ஓய்வில் இருந்த கேன் வில்லியம்சன், டெஸ்ட் தொடரில்  களமிறங்குவது அந்த அணிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. நீண்ட நாட்களுக்கு  பிறகு ராஸ் டெய்லர் களம் காண்பது கூடுதல் பலம். மூன்று ஸ்பின்னர்களுடன் நியூசி. பந்துவீச்சு வியூகம் அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

தொடரில் முந்த இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த டெஸ்ட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். இந்தியா: ரகானே (கேப்டன்), அகர்வால், ஆர்.அஷ்வின், கர் பாரத், ஷ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், அக்சர் படேல், பிரசித் கிருஷ்ணா, செதேஷ்வர் புஜாரா, விரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் ஷர்மா, ஷுப்மன் கில், உமேஷ் யாதவ், சூரியகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ். நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளன்டெல், கைல் ஜேமிசன், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, மிட்செல் சான்ட்னர், வில்லியம் சாமர்வில்லி, டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், நீல் வேக்னர், வில் யங்.

நேருக்கு நேர்...
* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 டெஸ்டில்  நியூசி. 3 - 2 என முன்னிலை வகிக்கிறது.
* டெஸ்ட் உலக கோப்பை பைனல் உள்பட  இந்தியா - நியூசிலாந்து இடையே 22 டெஸ்ட் தொடர்கள் நடந்துள்ளதில், இந்தியா 11 - 7 என முன்னிலை வகிக்கிறது. 4 தொடர்கள் டிராவில் முடிந்தன.
* மொத்தமாகல் 60 டெஸ்டில் மோதியுள்ளதில் இந்தியா 21 வெற்றி, நியூசி. 13 வெற்றி பெற்றுள்ளன (26 டெஸ்ட் டிரா).

* இந்திய மண்ணில் விளையாடிய 34 டெஸ்டில், நியூசிலாந்து 2ல் மட்டுமே வென்றுள்ளது (நாக்பூர் 1969-70; மும்பை 1988-89).
* டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய ஆப் ஸ்பின்னர் என்ற ஹர்பஜனின் சாதனையை (417 விக்கெட்) முறியடிக்க, ஆர்.அஷ்வினுக்கு இன்னும் 5 விக்கெட் மட்டுமே தேவை.
* கபில், ஜவகல், ஜாகீர், இஷாந்த் ஆகியோரை தொடர்ந்து, சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய 5வது இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற உமேஷ் யாதவுக்கு இன்னும் 4 விக்கெட் தேவை.

இறைச்சி சர்ச்சை: பிசிசிஐ மறுப்பு
நியூசி. டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடக் கூடாது. ஹலால் செய்யப்பட்ட உணவுகளைதான் சாப்பிட வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைத்தளங்களில் இந்த பிரச்னை பெரிதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், ‘வீரர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. அவர்கள் விரும்பும் உணவை சாப்பிடலாம். இதற்கு முன் அப்படி விதி இருந்ததா என்பது தெரியாது. இப்போது எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக  வெளியான தகவல் வெறும் வதந்திதான்’ என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

Tags : India ,New Zealand , The first Test between India and New Zealand starts today
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...