திருப்பூரில் தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் அதிமுக மாஜி எம்எல்ஏக்கள் பாஜவில் ஐக்கியம்

திருப்பூர்: திருப்பூர் வித்யாலயம் பகுதியில் பாஜ அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதை பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். பின்னர் ஈரோடு, திருப்பத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களில் கட்டப்பட்ட கட்சி அலுவலகத்தை காணொலி மூலம் திறந்த ஜே.பி. நட்டா  பேசியதாவது: பல கட்சி அலுவலகங்கள் தலைவர்களின் வீடுகளில்தான் செயல்படும்.

தலைவர்கள் காணாமல் போனால் அந்த கட்சி அலுவலகமும் காணாமல் போகும். தமிழகத்தில் மேலும் 16 இடங்களில் கட்சி அலுவலகம் திறக்கப்பட உள்ளது. இது 365 நாட்களும் 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்படும். பிரதமர் ஏழை மக்களுக்கு பணியாற்ற ஆசைப்படுகிறார். அதனால்தான் தமிழகத்தில் மட்டும் 94 லட்சம் மக்களுக்கு வங்கி கணக்கு  உருவாக்கப்பட்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில் 3 முறை ரூ.500 போடப்பட்டுள்ளது. 25 புதிய ரயில்வே திட்டங்கள் தமிழகத்திற்காக தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் தமிழகத்தின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். அதனால்தான் பல்லாயிரம் கோடி திட்டங்களை அறிவித்திருக்கிறார்.  இவ்வாறு அவர் பேசினார். சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள்  எம்எல்ஏவும், அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினருமான மாணிக்கம், அதிமுக  முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தனது ஆதரவாளர்களோடு பாஜவில் இணைந்தனர்.

பின்னர் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், கோயில் சொத்துக்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மழை வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளை கட்டித்தருவதோடு, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரோட்டில் பிளக்ஸ் பேனரால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூரில் நடைபெற்ற பாஜ மாநில செயற்குழு கூட்டத்திற்கு வந்த தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை வரவேற்று பாஜவினர் திருப்பூர்-அவிநாசி ரோடு மற்றும் பல்லடம் ரோடு முழுவதும் ரோட்டின் இருபுறமும் தலைவர்களின் படங்களுடன் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்சி கொடியை நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து கட்டி வைத்திருந்தனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக திருப்பூர் வந்தபோது சாலை ஓரத்தில் பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடிகள் கட்டப்படாததை ஒப்பிட்டு அப்பகுதி மக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

Related Stories: