×

மாட்டுச்சாண காரில் மாப்பிள்ளை அழைப்பு

நன்றி குங்குமம் தோழி

கிராமங்களில் உள்ள மண் குடிசைகளில் மாட்டுச்சாணத்தை சுவரில் ஒட்டி வைத்திருப்பர். அந்த சாணம் காய்ந்து எருக்களாக மாறியதும் அவற்றை அடுப்பில் விறகுக்கு பதிலாக பயன்படுத்துவது நடைமுறையில் இருந்தது. அவ்வாறு சாணம் ஒட்டப்பட்ட வீடுகள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் என்கிறது ஆய்வு. இதே நடைமுறையை பின்பற்றியுள்ளார் டாக்டர் ஒருவர். அதுவும் தனது மகளின் திருமணத்தில். மாட்டுச்சாண கோட்டிங் செய்யப்பட்ட காரில் மாப்பிள்ளையையும் பெண்ணையும் அழைத்து வந்ததுடன் அது தொடர்பான வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் பரப்பி வைரலாக்கியுள்ளார்.  

திருமணம் என்றாலே அலங்காரமும் ஆடம்பரமும் என்றாகி விட்ட நிலையில் மாட்டுச்சாணம் பூசிய காரில் மாப்பிள்ளை அழைப்பா என முகம் சுளிக்காதீர்கள்.  மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த டாக்டர் நவ்நாத் டுதால் என்பவர் தான் தனது மகளின் திருமணத்திற்கு இந்த அதிரடி மாப்பிள்ளை அழைப்பை செய்துள்ளார். ஹெலிகாப்டரில் திருமணம், நீருக்கடியில் திருமணம், மலை உச்சியில் திருமணம் என பல்வேறு சுவாரஸ்யமான திருமணம் நடந்துள்ள நிலையில் இதுவும் ஒரு மாறுபட்ட முயற்சி என்கிறார் டாக்டர் நவ்நாத் டுதால்.

சமீபத்தில் நடந்த  தனது மகளின் திருமணத்திற்காக வாங்கிய புதிய டாடா இன்னோவா காரை மாட்டுச் சாணத்தை கொண்டு முழுக்க பூசியுள்ளார். அந்த கார் அதற்கு பின் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.  மாப்பிள்ளை அழைப்பை மட்டுமின்றி மணப்பெண்ணான தனது மகளையும் அந்த காரிலேயே அழைத்து வந்து, திருமணமும் நடத்தினார். இது தொடர்பாக டாக்டர் நவ்நாத் டுதால் கூறுகையில் `மாட்டுச் சாணத்தின் நன்மைகளை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்கும், அதன் பயன்பாட்டை பிரபலப்படுத்துவதற்கும்  இந்த யுக்தியை கையாண்டேன்.

உலக வெப்பமயமாதல் காரணமாக உயிர்களுக்கு ஆபத்துகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பசுக்களின் பங்கு முக்கியமானது. மாட்டுச் சாணத்தால் கேன்சரை குணப்படுத்த முடியும். மனித உடலில் உள்ள  நோய்களை  விரட்டும் திறனும் மாட்டுச்சாணத்துக்கு உண்டு. காரில் சாணத்தால் ‘கோட்டிங்’ செய்தால், கார் கேபினின் வெப்பநிலை குறையும் என்பதுடன்  செல்போன் கதிர்வீச்சில் இருந்தும் நம்மை காப்பாற்றும். திருமணத்திற்கு பயன்படுத்திய பிறகும் அந்த காரை அப்படியே விட்டுவிடாமல், தினமும் நீரால் சுத்தம் செய்து மறுபடியும் சாணத்தால் கோட்டிங் செய்வது தொடரும்’’ என்றார் டாக்டர் நவ்நாத் டுதால்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags : groom ,
× RELATED வீரர்களுக்காக தீபம் ஏற்றுங்கள்: மோடி அழைப்பு