பெட்ரோல் - டீசல் விலையை தாண்டியது தக்காளி விலை... சில்லறை விற்பனையில் கிலோ ரூ.160ஐ தாண்டியது!!

சென்னை: மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக, கோயம்போடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தக்காளி விலை ரூ.140க்கு எகிறியது. வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 26ம் தேதி தொடங்கி, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை காரணமாக, தமிழகம் முழுவதும் பயிர்கள் நீரில் மூழ்கியது. காய்கறிகள் அழுகி ேபானது. இதனால், விளைச்சல் என்பது கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதேபோன்று கர்நாடகா, ஆந்திராவிலும் வெள்ள பாதிப்பு காரணமாக விளைச்சல் இல்லை. இதனால், தமிழகத்திற்கு காய்கறி வரத்தும் வெகுவாக குறைந்தது. குறிப்பாக, தினமும் 450 லாரிகள் வரை காய்கறி வரத்து இருந்த நிலையில் தற்போது பாதியாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக காய்கறி விலை கடந்த ஒரு வாரமாக விலை அதிகரித்து காணப்பட்டது. தக்காளி விலை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்ைத தொட்டது. அதாவது, ஒரு கிலோ தக்காளி ரூ.15க்கு விற்கப்பட்டது. தற்போது வரத்து குறைந்ததால் கிலோ ரூ.140 வரை விற்கப்பட்டது. சில்லறை விற்பனையில் ஏரியாவுக்கு தகுந்தாற்போல் கிலோ ரூ.160 வரை விற்பனையாகி வருகிறது. தக்காளி விலை மட்டுமன்றி வரத்து குறைவால் மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர தொடங்கியுள்ளது.  பீன்ஸ் கிலோ 90 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் கிலோ 120 ரூபாய்க்கும், அவரைக்காய் ரூபாய் 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேசமயம் சென்னையில் பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூபாய் 79 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை உட்பட பிற மாவட்டங்களில் உள்ள 65 பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. பசுமை கடைகளில் விற்க ஒரு நாளைக்கு 15 டன் தக்காளியை கொள்முதல் செய்ய கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.

Related Stories: