×

ஏரோபிக்ஸ் செய்யலாம்... ஹெல்த்தியா இருக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

கார்டியோ, ஃபிட்னெஸ், ஸ்டாமினா போன்ற வார்த்தைகள் இன்றைய டெக் உலகில் நாம் அடிக்கடி கேட்கக்கூடிய வார்த்தைகள். இவ்வார்த்தைகளை கடந்து வராதவர் எவரும் இல்லை என்ற அளவுக்கு இன்றைக்கு உடல்நல விழிப்புணர்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், எதையும் ‘வருமுன் காப்போம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப சில உடற்பயிற்சிகள் ‘உடல் நலக் கேடயங்களில்’ ஒன்றாக முன்னிலையில் உள்ளது. என்னதான் உடற்பயிற்சியில் பல்வேறு வகைகள் இருந்தாலும், அவற்றில் அனைவரும் விரும்பும் ‘ஏரோபிக்ஸ்’ வகைகள் பற்றி அறிந்துகொண்டு பயிற்சி செய்து, பிறந்துள்ள புத்தாண்டை புது வலிமையுடன் கொண்டாடுதல் சிறப்பு எனச் சொல்லலாம் என்கிறார் இயன்முறை மருத்துவரான கோமதி இசைக்கர்.

அதென்ன ஏரோபிக்ஸ்?

சிறிது நேரம் நடந்தாலே மூச்சு வாங்குகிறதா? காலையில் உடலில் இருக்கும் புத்துணர்வு மாலை வீடு திரும்பும் வரை இல்லையா?
4 அடி ஓடிச்சென்று பேருந்தும் ரயிலும் பிடிக்க முடியாத அளவுக்கு மூச்சு வாங்குகிறதா? உங்களின் ‘தாங்கும் ஆற்றல்’ (Endurance) குறைவாக உள்ளது என்று அர்த்தம். அப்படி குறைவாக இருக்கும் தாங்கும் ஆற்றலை ஒருவரது உடலில் அதிகப்படுத்த உதவும் பயிற்சியே ‘கார்டியோ’ என்று சொல்லக்கூடிய ‘ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி’ ஆகும்.

எதெல்லாம் ஏரோபிக்ஸ்?

ஒருவர் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வதன் மூலமாகவும், ஸ்கிப்பிங், நீச்சல் பயிற்சி, ஜாகிங், ரன்னிங் போன்றவற்றின் மூலமாகவும், மிதிவண்டி ஓட்டுவதன் மூலமாகவும் எளிதாக ஏரோபிக்ஸ் செய்யலாம். அத்தோடு ஜூம்பா, நடனம், உடற்பயிற்சி நிலையங்களில் உள்ள நிலையான மிதிவண்டி, எர்கோமீட்டர் போன்ற சாதனங்கள் மூலமாகவும், இயன்முறை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகள் மூலமாகவும் ஒருவர் ஏரோபிக்ஸ் செய்யலாம்.

யார் யார் செய்யலாம்?

19 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தகுந்த இயன்முறை மருத்துவரின் ஆலோசனை மூலம் ஏரோபிக்ஸ் செய்யலாம். அத்தோடு, 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் விரும்பும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனை படி மிதமான அளவு நீச்சல், மிதிவண்டி, நடனம் போன்றவற்றின் மூலமாக
ஏரோபிக்ஸ் செய்யலாம்.

பலன்கள் பலவிதம்

* உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் தேவையான ’happy hormones’ போன்ற ரசாயனங்கள் ஏரோபிக்ஸ் மூலம் சுரப்பதால் நாள் முழுவதும் உடலும், மனமும் உற்சாகமாக இயங்கும். அத்தோடு மன அமைதியும், தெளிவும் இருக்கும்.

* 45 நிமிடங்களுக்கு மேல் செய்வதினால் உடல் பருமன் குறையும், பசியின்மை குணமாகும்.

* இருதய நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பக்கவாதம் போன்ற நோய்களை தள்ளிப்போடலாம்.

* இருதயம் பலமடையும், மாதவிடாய் கோளாறுகள் சீராகும்.

*  PCOD போன்ற பெண்கள் சார்ந்த உடல் நலக்கோளாறுகளும் குணப்படுத்தலாம். வராமலும் தடுக்கலாம்.

* தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தம், படப்படப்பு குறையும். மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுபவர் இதனால் அதிக பலன் பெறுவர்.

* மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். இவற்றோடு தசைகள், எலும்பை சுற்றியுள்ள மற்ற திசுக்கள் பலம் அடையும். அதனால் உடலில் வலி, சுளுக்கு, எலும்பு முறிவு போன்றவை வராமல் தடுக்கலாம்.

* உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து முகம் பொலிவுடனும், இளமையாகவும் இருக்கும்.

* சுவாசப்பை சுத்தமாகி, அதிக பிராணவாயுவை எடுத்துக் கொள்ள உதவும்.

 
சில சிறப்பு பலன்கள்

‘ஏரோபிக்ஸ்’ பயிற்சிகளுடன், தசைகள் வலுப்பெறும் பயிற்சிகளும் இயன்முறை மருத்துவர் துணையுடன் செய்து வந்தால் மாரத்தான், மிதிவண்டி, நீச்சல் போன்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு ஒருவரால் மிக எளிதில் வெற்றியை பெறமுடியும். மேலும், சாகச விளையாட்டுகளான மலை ஏறுதல், படகு சவாரி செய்தல் போன்ற செயல்களிலும் சுலபமாக ஈடுபட்டு இலக்குகளை அடையலாம்.

அதற்கு முன்...

ஏரோபிக்ஸ் பயிற்சிகளை ஒருவர் தொடங்கும் முன் இயன்முறை மருத்துவர் முதலில் அவரது உடல் தசைகளை, உடல் ஆற்றலை முழுமையாக சோதனை செய்வார். அதில் ஒருவரது வயது, தாங்கும் ஆற்றல், முன்னரே இருக்கும் உடல் கோளாறு போன்றவற்றை கருத்தில் கொண்டு அதற்கேற்பவே ஏரோபிக்ஸ் பயிற்சிகளை தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்வார்கள். அதனால், இயன்முறை மருத்துவரின் அறிவுரையின்றி வீட்டிலே பயிற்சி செய்வது, இயன்முறை மருத்துவர் இல்லாத உடற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி செய்வது போன்றவை வலி மற்றும் தசைக் கோளாறுகளை வரவழைக்கும். எனவே இயன்முறை மருத்துவரின் ஆலோசனையோடு ‘ஏரோபிக்ஸ்’ பயிற்சிகளை செய்வது மிக அவசியம் என்பதை கருத்தில் கொண்டு ஏரோபிக்ஸ் மூலம் கிடைக்கும் பலன்களை அனைவரும் பெற்று வலிமையாக வாழ என் வாழ்த்துகள்.

Tags : Helthia ,
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!