கற்பித்தல் என்னும் ‘கலை’

நன்றி குங்குமம் தோழி

‘‘கலைகளை கற்றுத்தேர்’’ என்று நாம் பிள்ளைகளுக்கு ஆசி வழங்குவதுண்டு. அத்தகைய கற்றுத்தருதலும் ஒரு சிறந்த ‘கலை’ என்றுதான் நினைக்க முடிகிறது. நாம் சொல்லித்தர வேண்டியதை கற்றுத்தர வேண்டியதை மாணவர்களிடையே பிள்ளைகளிடையே திணிக்காமல் மனதில் புகுத்துதல் என்பது மிகச்சிறந்த ஆற்றல் மிக்கக் கலை. அதிலும் அவர்கள் அதை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுவிட்டால், அது கற்றுத்தருபவரின் முழு வெற்றியாகும். அத்தகைய வெற்றி மிக எளிதில் கிடைக்குமாவென்றால், அதற்கு நாம் முழுவதும் மனதை ஈடுபடுத்திக்கொண்டும், நம்மை அர்ப்பணித்துக் கொண்டும், தியாக மனத்தோடு செயல்படுதல் முக்கியம்.  

தொழிற்படிப்புப் படித்துவிட்டால் மட்டும் அது சாத்தியம் என்று சொல்லிவிட முடியாது. நம் ஈடுபாடும், அக்கறையும், நினைத்ததை குறிப்பிட்ட ஒரு பிள்ளையிடம், மனதில் ஏற்றவும் நாம் சந்தோஷமாக செயல்பட வேண்டும். அத்தகைய பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானம் இவற்றைப் பொறுத்து நம்

வெற்றியின் ரகசியம் புலப்படும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மனங்கள் இருக்கும்பொழுது, குழந்தைகள் மனம் கள்ளம், கபடமற்ற, ஒளிவு மறைவில்லாத, அன்புக்கு மட்டும் கட்டுப்படும் மனம் என்றால் அது உண்மைதான். நாம் அறிந்தவற்றை அவர்கள் அறிந்திருக்க வேண்டியதில்லை. அறிய வைப்பது மட்டுமே நம் நோக்கமாக இருக்க வேண்டும். கற்றுத்தருபவர்கள் ஆசிரியர்கள்தான்.

ஆனால் எத்தனை பேரால் பிள்ளைகள் மனதில் இடம் பிடிக்க முடிகிறது? ‘‘அப்பாடா! இன்னிக்கி வகுப்பு போச்சு’’ என்று குஷியுடன் முழங்கும் குரல்களை மட்டுமே தான் கேட்க முடிகிறது. ‘‘ஐயோ, இன்னிக்கு நான் விடை சொல்லியே தீருவேன் என்று நினைத்தேன், வகுப்பு போய் விட்டதே!’’ என்று ஆதங்கப்படும் எத்தனைப் பிஞ்சு உள்ளங்களைப் பார்த்திருக்கிறோம். இரண்டிற்குமான வித்தியாசம் நமக்கு நன்றாகவே புரிகிறது. வகுப்பை விரும்பாத அல்லது குறிப்பிட்ட பாடத்தை விரும்பாத சில உள்ளங்கள் முதல் வகையான வாக்கியத்தைப் பயன்படுத்துகின்றனர். வகுப்பையோ குறிப்பிட்ட பாடத்தையோ மிகவும் விரும்பும் உள்ளங்கள் இரண்டாம் வகையான வாக்கியத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அனைவரையும் வசப்படுத்த வேண்டுமானால், ‘கற்பித்தல்’ என்னும் கலை நம்மிடம் குடிகொண்டிருக்க வேண்டும். பிள்ளைகளிடமிருந்தும் நாம் சிலவற்றை தெரிந்துகொள்ள வேண்டும். ‘‘அவர்களுக்குக் கற்பித்தல் தானே நம் தொழில், அவர்களிடம் நாம் என்ன எதிர்பார்ப்பது?’’ என்று நினைத்தால் நம் தொழிலின் முழு அனுபவம் கிடைக்காமல் போகும். ‘கோல் எடுத்தால் குரங்காடும்’ என்று சொல்வதற்கு பயன்படுத்துவதை நடைமுறைப்படுத்தல் என்பது ஒரு தரமற்ற செயலாகும். அன்பினால் சாதிக்க முடியாததை எதைக்கொண்டும் சாதித்துவிட முடியாது. அன்பு நமக்கு நிறைய மாணவ மணிகளை நண்பர் போன்று உருவாக்கித் தருகிறது. மனம் விட்டு அவர்களை திறந்து பாராட்டினால் இழக்கப் போவது எதுவுமில்லை.

கற்றுத்தருபவர்கள்தான் ‘குரு’ என்கிற ஸ்தானத்தை அடைகிறார்கள். ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற இடத்தில் தாய் தந்தைக்கு அடுத்து குருவுக்குத்தான் முதலிடம். ஆகவே கற்றுத்தருபவர்கள் தங்களை இரண்டாவது பெற்றோராக நினைத்துக் கொள்ளலாம். வீட்டில் பெற்றோர் இரண்டாவது குருவாக இருக்கிறார்கள். கற்றுத் தருபவர்கள் என்னும் ஆசிரியர்கள் நன்கு படித்து, தொழிற்கல்வி முடித்து பின்னர் கற்றுத்தர வருகிறார்கள். ஆனால் பிள்ளைகள் ஒன்றுமறியாதவர்கள். அவர்களுக்கு கல்வியறிவு மட்டுமல்லாது, சமூகத்தில் வாழக் கற்றுக்கொடுப்பது, வரும் பிரச்னைகளை எதிர்கொள்வது, எதிர்காலத்தில் ஒரு நல்ல ‘குடிமகனாக’ வாழச் செய்வது, பெரியவர்களை மதிப்பது போன்ற அனைத்தும்

ஆசிரியரிடம் உள்ளது.

மொத்தத்தில் ‘நாளைய இந்தியக் குடிமக்கள்’தான் இன்று ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். அவர்கள் சிறந்து விளங்கும்பொழுது அதன் பெருமை முழுவதும் ஆசிரிய சமூகத்தைத்தான் சேரும். அப்படிப்பட்ட தியாகத்தொழில் கற்பித்தல் என்பது. அதனால்தான், அதை ‘கலை’யோடு ஒப்பிடுகிறார்கள். சுமார் நாற்பதாண்டுகள் உயர்நிலைக்கல்வி மேல்நிலை பயிலும் மாணவர்கள் வரை போதித்து, பழகி, நண்பர்களாக்கிக் கொண்டு, அவர்களுக்கு தனிப்பட்ட அறிவுரை, ஆலோசனைகளையும் வழங்கி வருவதன் மூலம், ‘‘நான் பெற்ற இன்பம் அனைவரும் பெறலாமே!’’ என்கிற எண்ணத்தில், சில ருசிகரமான நிகழ்வுகளையும், ஞாபகங்களையும் இத்தொடர் மூலம் பகிர நினைக்கிறேன்.

அப்பொழுதெல்லாம் பிள்ளைகளுக்கும், ஆசிரியைகளுக்குமான தொடர்பில் இடைவெளி அதிகம். ஓரளவு பட்டப்படிப்பு முடித்து, தொழிற்கல்வி முடித்து வேலையில் இருபத்திரண்டு வயதில் குறைந்தபட்சமாக சேர முடிந்தது. பதினோறாம் வகுப்புதான் எஸ்.எஸ்.எல்.சி. என்று இருந்தது. பதினோறாம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளோடு புதிதாக சேர்ந்த ஆசிரியை அல்லது ஆசிரியரைப் பார்த்தால் வயதளவில், கிட்டத்தட்ட ஒரு மூத்த சகோதரி அல்லது சகோதரன்போல காணப்படுவார். அதனால்தான், இதைத்தவிர்க்க ஆசிரியர்களுக்கான உடையும் தனி. வீட்டிலும், வெளியிலும் எப்படிக் காணப்பட்டாலும் பள்ளிக்குச் செல்லும் பொழுது சிலவிதமான பள்ளி விதிகளுக்கும் உட்பட்டு நடப்பது அவசியம். படிப்பு மட்டும் கற்றுத்தராமல், பெரியவர்களிடையே நடந்துகொள்ளும் முறை, அவர்களை நேரம் தவறாமல் நடக்கச் செய்வது, உணவருந்தச் செய்வது, சுத்தமாக இருக்கச் செய்வது, விட்டுக்கொடுத்துப் பழகுவது ஆகிய அனைத்தும் இன்றும் கற்பிக்கப்படுகிறது.

அப்பொழுது, சில பள்ளிகளில் இவற்றை செயல்படுத்துவதற்காகவே, மதியம் உணவு சமைத்து வழங்கப்பட்டது. பிள்ளைகள் பள்ளியில் சேரும்பொழுது, பெற்றோர்கள் உணவிற்கும் சேர்த்து பணம் செலுத்தி விடுவார்கள். அதற்கான ஒரு துறை, தினமும் பிள்ளைகளுக்கான பாரம்பரிய உணவு பதார்த்தங்களை தயார் செய்வர். ஆசிரியைகள் குழுக்களாகப் பிரிந்து, மாதத்தில் ஒரு வாரம் பிள்ளைகளுக்குப் பரிமாற வேண்டும். எந்த ஒரு பாரபட்சமுமின்றி, அனைவருக்கும் வாய்ப்பு வந்து சேரும். அந்தப் பரிமாறும் நேரம், இன்று நினைத்தாலும் மனதைத் தொடும். திருமணம் ஆகாவிட்டால் கூட, நாம் எத்தனை பிள்ளைகளுக்கு ஒரு தாய் போல் பாசத்தைத் தந்திருக்கிறோம். ஆக ஒரு ஆசிரியை தாயாக நடக்க வேண்டும் என்பதற்கு இதைவிட ஒரு நடைமுறைக் கல்வி இருக்குமா என்பது சந்தேகம்.

அப்பொழுது பிள்ளைகள் ‘மிஸ் மிஸ்’ என்று கூவி, நம் கையால் உணவு கேட்பது, அவர்கள் நம்மைத் தாய் போன்று நினைக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும். சமயங்களில், நேரத்திற்கு அவர்கள் சாப்பிட முடியாமல் போகும். அப்பொழுதெல்லாம் நாங்கள் அப்புறம் சாப்பிடலாம் என்று நினைத்து பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டு, ஆசுவாசப்படுத்தி வகுப்பிற்கு அனுப்பி வைப்பதுண்டு. அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால், பெற்றோருடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்குவோம். பொதுவாக, எளிதில் தரக்கூடிய மருந்துகளை கைவசம் வைத்திருப்போம். எவ்வளவு தூரம் நாங்கள் உதவ முடியுமோ அவ்வளவு உதவியும் செய்யக் காத்திருப்போம். படிப்பில் அவர்கள் மந்தமாக இருக்கலாம், ஆனாலும் எங்களின் நோக்கம் நல்ல மாணவர்களை எதிர்காலத்திற்காக உருவாக்குவதுதான்.

படிப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்தால், அது அவர்களின் குறையல்ல. குடும்ப சூழல். விரல்கள் ஐந்தும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அதுபோல் மாணவர்கள் எல்லோரும் ஒன்றுபோல் இருக்க முடியாது. அவர்களின் பின்னணி, குடும்ப சூழல், வீட்டுச்சுற்றுப்புறம் இவற்றை அலசி

ஆராய்ந்தால், அவர்களின் மனநிலை புரிந்து, ஆலோசனை தரலாம். முதலில் நாம் ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் குழந்தைப் பருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப் பருவம் அனைத்தையும் கடந்துதான் ஒரு தொழிலுக்கு - வேலைக்கு வருகிறோம். அதிலும் மாணவர்கள் மனதில் அறிவை வித்திடும் ஒரு புனிதமான நோக்கத்தில் பயணிக்கிறோம் என்று நினைத்தால் எவ்வளவு ஒரு பாக்கியம்? ‘பசுமரத்தாணி’போல் பதிய வேண்டுமென்றால், நம் புலமையை அதற்கேற்றபடி தீட்டிக்கொள்வதே நல்லது.

இதைக் குறிப்பிடும்பொழுது, நாம் மற்றொன்றையும் யோசிக்கலாம். சில குழந்தைகள் சொல்லி முடிப்பதற்குள் புரிந்துகொண்டு விடுவார்கள். அவர்கள் கற்பூரம் என்று சொல்லலாம். சிலர் நன்கு விளக்கிய பின் புரிந்துகொள்வர். நன்கு திரித்து ஏற்றும் விளக்காகக் கொள்ளலாம். எவ்வளவு சொல்லியும் புரியவில்லையென்றால், ‘திரிநூல்’ ஈரமோ அல்லது எண்ணெயில் நீர் கலந்து விட்டதோ எனக்கொள்ளலாம். அதை சிறிது பக்குவப்படுத்தினால் அதுவும் சுடர்விட்டு அழகுற எரியும். அவர்களையும் சிறிது சிறிதாக கற்பூர நிலைக்குக் கொண்டுவரலாம். அத்தகைய ‘மேஜிக் பவர்’ கற்றுத் தருபவர் கையில்தான் உள்ளது. வேறு யாராலும் சாத்தியப்படாது. அதற்கு நாம் முதலில் பிள்ளைகள் அல்லது மாணவர்கள் மனநிலையைப்புரிந்து கொள்ளுதல் அவசியம். சிறு பிள்ளைகளாக இருக்கும்பொழுது அனைத்தும் குழந்தைகள்தான்.

குழந்தைகள் எது செய்தாலும் நமக்கு சந்தோஷம்தான். அத்தகைய குழந்தைப்பருவம் என்பது இனிமையான காலகட்டம். அவர்கள் வளர வளரத்தான் படிப்பின் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிய வரும். எளிதில் மேலோட்டமாக எதையும் புரிந்துகொண்டு விட்டால் விரும்பிப் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். பாடம் சிறிது அழமாக சிந்திக்க வைக்கக் கூடியதாக இருந்தால், சிரமப்பட்டு அதை யோசித்துப் படிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியாக ஒரு சிலரைக் கண்டதில் சில விஷயங்கள் புரிந்தன. அதாவது, சுலபமான கேள்வியிலும் ஒரு வார்த்தை மட்டும் படித்து எழுதினால் போதும் என்றால் முதல் மதிப்பெண் எடுப்பர்.

அதே, புரிந்து விடையைத் தரவேண்டுமானால் மிகவும் சிரமப்பட்டனர். எங்கே, யார், எப்பொழுது போன்ற கேள்விகளுக்கு ஒரு வரி போதும். எப்படி, ஏன் போன்றவற்றிற்கு ‘நிறைய எழுத வேண்டுமோ? என்ற அங்கலாய்ப்பு. அதனால்தான், கற்றுத்தருபவர் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொண்டால், எதையுமே கதை வடிவில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். இடையிடையே மனதில் பதிய வைக்கும்பொருட்டு, அன்றாட நிகழ்வுகளை எடுத்துக்கூறி நம்முடன் நண்பர்களாக்கிக் கொண்டு கலந்துரையாடலாம். ஒருமுறை விடுமுறை நிகழ்வை, எழுதி வரச்சொல்லி பரிசளிப்பதாகக் கூறியிருந்தேன். ‘நாளைக்குக் கொண்டு வருவேன்’ என்று ஒரு மாணவன் தினமும் தள்ளிக்கொண்டே போனான். அவனைத் தனியே அழைத்துப் பேசி, தட்டிக்கொடுத்து காரணம் கேட்டேன்.

அவன் சொன்னான்-‘‘மிஸ், எங்கப்பா வீட்டுக்குக் காசு தரமாட்டார். அவர் நடவடிக்கையால எங்க அம்மா நொந்து போயிட்டாங்க, அம்மா கட்டடம் கட்டும் வேலைக்கு ‘சிமென்ட்’ தூக்கறாங்க! வாரா வாரம் சனிக்கிழமைதான் அவங்களுக்குச் சம்பளம் வரும். இந்த சனிக்கிழமை சம்பளம் வாங்கி, நோட்டு வாங்கித் தருவாங்க! நான் கண்டிப்பா எழுதிண்டு வந்துடுவேன் மிஸ்! ஒரு வாரம் கழிச்சுன்னு எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னுதான் ‘நாளைக்கி’ -‘நாளைக்கி’ அப்படின்னு சொன்னேன் மிஸ்! மன்னிச்சுடுங்க மிஸ்! ப்ளீஸ்! என்றான். என்னால் கண்ணீர்தான் வடிக்க முடிந்தது.

(பாடம் தொடரும்!)

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

Related Stories: