×

பதிப்பகத் துறையில் கால் நூற்றாண்டு

நன்றி குங்குமம் தோழி

இணையதளங்களும், சமூகவலைத் தளங்களும், செல்போன்களும் இளைஞர்களை ஆக்கிரமித்துவிட்ட இந்த காலத்தில் புத்தகம் படிக்கும் ஆர்வம் மெல்ல குறைந்துவருகிறது. இன்ஸ்டாகிராமும், டிக்டாக்குகளும் இளைஞர்கள் மற்றும்  இளம்பெண்களின் பொழுதுகளை களவாடும் தளமாக மாறிவிட்டது. புத்தகம் என்றாலும் ஃபேஸ்புக் என்றாகி விட்ட நிலையில் ஒரு பெண்மணி 22 ஆண்டுகளாக பதிப்பகத்துறையில் அசத்தி வருகிறார். கடந்த 1997ம் ஆண்டு தொடங்கிய விஜயராஜேஸ்வரி பதிப்பகம் மூலம் இதுவரை 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டு சாதனை செய்துள்ளார். மாணவர்களுக்கான சிறுகதைகள், மனித முன்னேற்றத்துக்கு வழிகாட்டி நூல்கள் போன்றவற்றுக்கு முன்னுரிமை தந்து தனது புத்தக வெளியீட்டாளர் பணியை செவ்வனே செய்து வருகிறார் சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி.

விஜய ராஜேஸ்வரி என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். எம்.ஏ(பொருளாதாரம்) பி.எட், நூலக அறிவியல் பட்டம் என பல்வேறு பட்டங்கள் பெற்றுள்ள இவர் இல்லத்தரசி பணியையும் செவ்வனே செய்துவருகிறார். பதிப்பகத் துறையில் கால் நூற்றாண்டை நெருங்கும் ராஜேஸ்வரி தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ‘‘எனது கணவர் எழுத்தாளர் மற்றும் அவர் ‘வளரும் அறிவியல்’ என்ற இதழின் ஆசிரியராக உள்ளார். அவரின் அந்த இதழை நான் தான் அச்சிட்டு வெளியிட்டு வருகிறேன். அன்றாட அறிவியல் நிகழ்வுகளை தமிழில் தரும் ஒரே இதழ் இந்த ‘வளரும் அறிவியல்’ என்பதுடன் டெல்லியில் உள்ள ஐ.எஸ்.எஸ்.என் என்ற பன்னாட்டு பதிப்புரிமையும் பெற்றுள்ளது.

இது தவிர 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டு அவற்றை பல்வேறு புத்தக கண்காட்சியிலும், நூலகங்களுக்கும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறேன். இது தவிர valarum ariviyal.com என்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறேன். நம்மூர்களில் சில நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும்போது ஊழியர்களாக நியமிக்கப்பட உள்ளவர்களின் ஜாதகங்களை தங்கள் நிறுவனத்தின் ஜாதகத்துடன் ஒப்பிட்டு பார்த்து வேலைக்கு அமர்த்துவது போன்று ஜப்பானில் ஒரு யுக்தியை பின்பற்றுகிறார்கள். அதாவது வேலைக்கு விண்ணப்பம் அளிக்கும் போது அதில் அவர்களின் ரத்த பிரிவு குறிப்பிடாமல் இருந்தால், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பரிசீலணைக்கு கூட எடுத்துக் கொள்ளப்படாது.

இது போன்ற அறிவியல் பூர்வ தகவல்கள் எனது இணையதளத்தில் நிரம்பி வழிகிறது. தவிர காற்று மாசுவால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வரும் சென்னையில் மின்சார ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததா? நாசாவின் கண்டுபிடிப்பு? விஞ்ஞானியாக என்ன செய்யவேண்டும்? இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவராக என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற கருத்துக்கள் இணையதளத்திலும் நான் வெளியிடும் புத்தகத்திலும் பரவிக்கிடக்கின்றன. இதற்காக சில நேரங்களில் இரவு பகல் பாராது பணியாற்றி வருகிறேன். இது தவிர அறிவியலில் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தும் மாணவர்களின் படைப்புகளை வெளியிட இந்த வளரும் அறிவியல் ஊக்கம் தருகிறது.

இதில் சந்திராயன் 1 திட்டத்தின் போது இஸ்ரோ இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரையின் கட்டுரை, பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது எப்படி என்பது போன்ற பல்வேறு தகவல் இடம் பெறுகிறது. நான் வெளியீட்டாளராக பணியாற்றி அறிவியல் இதழ் தொடங்கப்பட்டு தற்போது 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதை கொண்டாடும் விதமாக ஜனவரி 4வது வாரம் சிறப்பு விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் அறிவியல் ஆலோசகர், அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்’’ என்று கூறும் ராஜேஸ்வரி ESRO என்ற அறக்கட்டளை ஒன்றை நடத்திய வருகிறார். 2007ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அறக்கட்டளை மூலம் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில் சிறப்பான இடம்பிடிக்கும் மாணவர்கள் மேல்படிப்பு படிக்க உதவி செய்து வருகிறார். மேலும் ஆண்டுக்கு 100 பேர் இலவசமாக மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறார் ராஜேஸ்வரி.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!