×

குறைந்துவரும் பெண் குழந்தை பிறப்பு விகிதம்!

நன்றி குங்குமம் தோழி

இந்தியாவில் குழந்தைப் பிறப்பு குறைகிறது என சமீபத்திய செய்திகள் சொல்கின்றன. சீனாவுக்குப் போட்டியாக முண்டியடித்து வந்த நம் தேசத்து மக்கள் தொகை எதிர்காலத்தில் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், குழந்தைகள் பிறப்பு குறைகிறது எனப் பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும் பெண் குழந்தைகள் பிறப்பு குறைகிறது என்பதுதான் நிஜம்.

இது அதிர்ச்சியூட்டும் விஷயமும் கூட. குழந்தைகள் மரணத்துக்கான காரணிகள் தடுப்பூசிகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன. இதையடுத்து இந்தியாவில் குழந்தைகள் மரண விகிதம் 2000வது ஆண்டில் இருந்து ஏறத்தாழ பாதியாகக் குறைந்துள்ளது. ஆனாலும் பெண் குழந்தைகள் பிறப்பு குறைகிறது. ஏன்...? என்பது குறித்து சமூக செயற்பாட்டாளர் ஐ.வி.நாகராஜன் தரும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவையாக உள்ளன.

‘‘பெண் குழந்தைகளை ஆராதித்த சமூகத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம். காலப்போக்கில் இந்த நிலை மாறியது. பெண் குழந்தையைப் பாதுகாத்து வளர்ப்பதும் பெண் குழந்தையைத் திருமணம் செய்து வைப்பதற்கானச் செலவும் பெண் குழந்தை பிறந்தால் பெரியசுமை என்ற எண்ணத்தை விதைத்தது. இந்த சிந்தனையோட்டம்தான் பெண் குழந்தைகள் பிறப்பு சரிவுக்கு முக்கியக் காரணம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 2.70 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. ஐந்து வயதை எட்டுவதற்குள் 12 லட்சம் குழந்தைகள் இறந்துவிடுகின்றன என்கிறது லான்செட் என்ற மருத்துவ இதழ். 2015-ல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா தான் முதலிடத்தில் இருந்தது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மரணத்தில் பாதிபேர் உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் என மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதில் பெரும்பாலானோர் பெண் குழந்தைகள்.

இந்தியாவில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறப்பை பற்றிய பாலின விகித ஆய்வை நிதி ஆயோக் மேற்கொண்டது. இந்த ஆய்வில் நாட்டில் உள்ள 21 பெரிய மாநிலங்களில் 17-ல் பாலின பிறப்பு விகிதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதில் குஜராத்தில் மிக அதிக அளவாக ஆயிரம் ஆண்களுக்கு 907 பெண்கள் என்று இருந்த எண்ணிக்கையானது, 854 ஆக குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹரியானா 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் கர்நாடகா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்திய தலைமை பதிவாளர் மாநில அளவிலான ஆண், பெண் விகிதங்கள் குறித்து தகவல்களை அண்மையில் வெளியிட்டார். அதில் அதிர்ச்சித்தரத் தக்க வகையில் தென்மாநிலங்களிலும் பெண் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சராசரியாக ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 2007-ல் 935 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 2016-ல் அது 840 பெண் குழந்தைகளாகக் குறைந்தது. இது போல ஆந்திராவில் 974 என்பதிலிருந்து 806 ஆனது. கர்நாடகாவில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 896 ஆக சரிந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்திரகாசி மாவட்டத்துக்கு உட்பட்ட 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 216. ஆனால் அவற்றில் ஒரு பெண் குழந்தைகள் கூட இல்லை. இது இயல்பாக நடந்திருக்கும் என்று நம்புவது சிரமம். இந்தக் கிராமங்களில் பெண் குழந்தையைக் கருவிலேயே அழிப்பது நடக்கிறதா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அந்த மாவட்ட கலெக்டர்.

உலக அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்து ஐ.நாவின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் 184 நாடுகளில் ஆய்வு செய்தது. இதில் இந்தியாவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 25.4 குழந்தைகள் இறந்து விடுகின்றன. உலக அளவில் ஆயிரம் குழந்தைகளில் 19 குழந்தை பிறந்து 28 நாட்களுக்குள் உயிரிழப்பதையே பிறந்த குழந்தை உயிரிழப்பு விகிதமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. உலக அளவில் பிறக்கும் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் இந்தியா 31-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 10.16 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்பாக சமகல்வி இயக்கம் என்ற தனியார் அமைப்பு தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பத்து மாவட்டங்களில் உள்ள சுகாதாரத் துறை மற்றும் அங்கன்வாடிகளின் புள்ளிவிவரங்களைச் சேகரித்தும் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சில மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 732 ஆகவும் தருமபுரியில் 884 ஆகவும் திருவள்ளூரில் 904 ஆகவும்குறைந்திருந்தது. கடலூரில் 878 என்றும் அரியலூர் மாவட்டத்தில் 860 என்றும் கவலைதரும் அளவில் பெண்களின் விகிதம் உள்ளது.

இது குறித்து ஆய்வு செய்தபோது பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டறிந்து கலைப்பதுதான் காரணம் என 55 சதவீதம் பேர் தெரிவித்ததாகக் கூறியுள்ளது. மேலும் வரதட்சணை, பெண் பாதுகாப்பு மற்றும் திருமணச் செலவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஆண் குழந்தைகள் அதிகம் விரும்புவதாக 72 சதவீதத்தினர் தெரிவித்தனர்.

சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலையில் ஐந்தாறு ஆண்டுகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கருக்கலைப்பு நடந்திருக்கிறது என்ற தகவல் பரபரப்பானது. அதையடுத்து, சர்ச்சைக்குரிய ஸ்கேன் சென்டர்களை மாவட்ட கலெக்டர் மூடினார்.

சமீபத்தில் சென்னை போரூர் ஏரி அருகே ஒரு பெண் குழந்தையை பெண்மணி ஒருவர் தூக்கி வீசியது சி.சி.டிவி கேமரா வழியே தெரிய வந்தது. இப்படி ஏதேனும் ஒரு வகையில் பெண் குழந்தைகளின் கொலை நடந்து கொண்டேதான் இருக்கிறது.

கருவிலுள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என்ற சோதனையை நடத்தியதில் அதை வெளியே சொன்னாலும் அது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. இப்போது செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் ஆண் குழந்தைகளை உருவாக்கம் செய்வதும், ரத்தம் மூலமான மரபணு ஆய்வின் மூலம் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிவதும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியமான ஒன்றாக கருதப்படுகிறது.

பிரசவ நேரத்திலும் குறை பிரசவ நேரத்திலும் ஏற்படும் சிக்கல்கள்தான்  2017-ல் ஒரு மாத கால வயதிற்குள் குழந்தைகள் மரணத்துக்கான முக்கிய காரணங்களாக இருந்தன என்று யுனிசெப் சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது. பேறுகால மற்றும் குழந்தைகள் சுகாதார சேவைகளை மேம்படுத்தியிருந்தால் இந்த மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும் என்கிறது.

கழிப்பறை வசதிகளை குறைவாகப் பயன்படுத்தும் ஜார்கண்ட், பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் தீவிர வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.பெண் குழந்தைகள் எதிர்காலச் சுமைகள் என்ற எண்ணத்தை கிராமப்புற மக்களின் மனங்களில் இருந்து அகற்றுவதுதான் இந்த பிரச்சனைக்கான நிரந்தர தீர்வாக அமையும் .

ஸ்கேன் சென்டர்களில் இன்னும் கண்காணிப்பு அதிகமாக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, பெண் குழந்தைகள் பிறந்தால் அரசு வழங்கும் சலுகைகள் பெண்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அளிக்கும் இடஒதுக்கீடுகள் ஆகியவற்றை சாதாரண பாமர மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வை வேகப்படுத்த வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பு முதல் முனைவர் பட்ட ஆய்வு வரை அனைத்து நிலைகளிலும் கல்வி இலவசம்  என்பது உள்ளிட்ட புதிய ஊக்குவிப்புத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தவேண்டும். இப்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால் இங்கு இளைஞர்களை விட முதியவர்களே அதிகமாக இருப்பார்கள். வருங்கால இளைஞர்களுக்கு தகுந்த வாழ்க்கைத்துணை கிடைப்பதற்கு வாய்ப்பேயில்லாமல் போய்விடும்’’ என்றார் ஐ.வி.நாகராஜன்.

தி.ஜெனிபா


Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!