மாற்றம் நல்லது! மோகினியாட்ட கலைஞர் ரேகா ராஜு

நன்றி குங்குமம் தோழி

‘‘அம்மா நல்லா பாடுவாங்க, அப்பா நடன கலைஞர். சின்ன வயசில் இருந்தே நடனம், பாட்டு என்று வளர்ந்த எனக்கும் தன்னாலே கலை மேல் ஆர்வம் ஏற்பட்டது’’ என்று பேசத் துவங்கினார் மோகினியாட்ட கலைஞரான ரேகா ராஜு. மார்கழி மாசம் என்றாலே வருடா வருடம் சென்னை எங்கும் கோலாகலமாக இருக்கும்.

இந்த வருடமும் கோலாகலத்திற்கு பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அதில் பல நிகழ்ச்சிக்கு நடுவே மக்களின் வரவேற்பை மோகினியாட்டம் பெற்றது. அழகான முகபாவங்கள் மற்றும் நளின நடன அசைவுகளால் எல்லாரையும் தன் வசம் இழுத்திருந்தார் பெங்களூரை சேர்ந்த மோகினியாட்ட கலைஞரான ரேகா ராஜு.

‘‘என்னோட பூர்வீகம் தமிழ்நாடு மற்றும் கேரளா என்றாலும் நான் தற்போது பெங்களூரில் தான் வசித்து வருகிறேன். அப்பா சொந்தமா தொழில் செய்தாலும், அவ்வப்போது மேடை நாடகத்திலும் நடித்து வந்தார். அம்மாவுக்கு கலை மேல் தனி ஆர்வம் உண்டு. அப்ப எனக்கு மூன்றரை வயசு இருக்கும். அம்மா என்னை பரதநாட்டிய பள்ளியில் சேர்த்துவிட்டாங்க.

நான் அங்கு நடனம் பயிலும் போது, அம்மாவும் உடன் இருப்பாங்க. அவங்க அங்க நான் என்ன கற்றுக் கொள்கிறேன்னு பார்த்துக் கொண்டு அதை எனக்கு வீட்டில் பயிற்சி அளிப்பாங்க. எட்டு வயசு வரை நடனம் பயின்றேன். அந்த சமயத்தில் அப்பாவின் தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. எல்லாமே எங்க கைகளை விட்டு நழுவியது. அதள பாதாளத்தில் தள்ளப்பட்டோம்.

குறிப்பாக நிதி பிரச்னையால் நாங்க ரொம்பவே பாதிக்கப்பட்டோம். இந்த சூழலில் என்னால் தொடர்ந்து நடனம் பயில முடியாமல் போனது. காரணம் கட்டணம் கட்டினால் தான் சொல்லித் தரமுடியும்னு என் குரு சொல்லிட்டார். மூன்று வருஷம் நடன பயிற்சி எடுக்கவில்லை. இதற்கிடையில் அப்பாவின் தொழிலும் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிச்சது. நாங்களும் மெல்ல மெல்ல தலை உயர ஆரம்பிச்சோம். தடைப்பட்டு போன நடன பயிற்சியை மீண்டும் தொடர ஆரம்பிச்சேன்’’ என்றவர் மோகினியாட்டம் மேல் ஈடுபாடு ஏற்பட காரணத்தை விவரித்தார்.

‘‘என்னோட நடன பயிற்சி பள்ளியில் பரதம் மட்டும் இல்லை, மோகினியாட்டம், குச்சுப்புடி, கதகளின்னு எல்லா விதமான நடனப் பயிற்சியும் இருந்தது. ஒரு முறை மோகினியாட்டம் நடனத்தை பயிற்சி எடுக்கும் ேபாது பார்த்தேன். அந்த நடனத்தின் நளினம் மற்றும் அசைவுகள் ரொம்பவே பிடிச்சு இருந்தது. அப்படித்தான் அதை பயில ஆரம்பிச்சேன்.

இதற்கிடையில் கல்லூரி படிப்பும் முடிஞ்சது. நான் கல்லூரி படிக்கும் போதே சி.ஏ படிச்சிட்டு இருந்தேன். ஆனால் நடனம் மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால் சி.ஏவை பாதியிலே விட்டுவிட்டு மாஸ்டர் ஆப் பர்பார்மிங் ஆர்ட்ஸ் (Master Of Performing Arts) படிச்சேன். எனக்கு அக்கவுன்ட்ஸ் பிடிக்கும். அதில் நல்ல மதிப்பெண் எடுத்ததால், எம்.பி.ஏ அக்கவுன்ட்சும் (M.B.A. Accounts) படிச்சேன். இதற்கிடையில் மோகினியாட்ட பயிற்சியும் தொடர்ந்து கொண்டு இருந்தேன். அதில் பி.எச்.டி மற்றும் டாக்டரேட் பட்டமும் பெற்றேன்’’ என்றவர் வசதியில்லாத குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறார்.  

‘‘எனக்கு தெரிந்த கலையை மற்றவர்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என்று நினைச்சேன். நடன பயிற்சி பள்ளியை ஆரம்பிச்சேன். இதில் மோகினியாட்டம் மற்றும் பரதம் இரண்டும் கத்துக் கொடுக்கறேன். மோகினியாட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறேன். குறிப்பா வசதியற்ற குழந்தைகளுக்கு. காரணம் நான் பட்ட கஷ்டம் இந்த குழந்தைகள் படக்கூடாது என்பது தான். ஆர்வம் இருந்தும் வசதி இல்லாத ஒரே காரணத்தால், இவர்களுக்கு இந்த கலை கிடைக்காமல் போக வேண்டுமான்னு என் மனதில் தோன்றியது. நடனத்திற்கான மதிப்பு எல்லாருக்கும் கிடைக்கணும். கலை எல்லாருக்கும் ஒன்று தானே. அதை நான் காசுக்காக பாகுபாடு பார்க்க விரும்பல’’ என்றவர் பரதம் போல மோகினியாட்டம் எல்லா இடங்களிலும் போய் சேரவேண்டும் என்றார்.

‘‘மோகினியாட்டம் கேரளாவின் பாரம்பரிய நடனம். இதோட வரலாறு என்னென்னு சரியாக தெரியாது. மோகினி விஷ்ணுவோட அவதாரம். அவர் மோகினியாக அவதாரம் எடுத்த போது அந்த  உருவத்தில் மிகவும் அழகாக இருந்தார். அந்த சமயத்தில் அசுரர்களும் தேவர்களும் பார்க்கடலை கடைந்து யாருக்கு அமிர்தம் என்று போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் கவனத்தை தன் அழகால் திசை திருப்பி அவர்கள் முன் தோன்றி நடனமாடியதாகவும், அதனால் தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்ததாக புராணத்தில் கூறப்படுகிறது.

மேலும் இந்த நடனம் காற்றில் செடி கொடி மற்றும் தண்ணீரில் அலை போல மிகவும் நளினமானது. பரதத்தை பொறுத்தவரை அவர்களின் நடனம் நேர்கோடாகத்தான் இருக்கும். அபிநயம் பிடிக்கும் போது கூட கைகள் நேராகத்தான் இருக்கும். மோகினியாட்டத்தில் உடல் முழுதும் வளைந்து, மிகவும் நளினமாக இருக்கும்’’ என்றவர் மோகினியாட்டம் கேரளாவை தாண்டி பரவவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

‘‘நான் பரதம், குச்சுப்பிடி, மோகினியாட்டம் நடனப் பயிற்சி எடுக்கிறேன். அதே சமயத்தில் மோகினியாட்டம் குறித்த விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். இந்த நடனம் தற்போது கேரளாவில் மட்டுமே பிரபலமாகியுள்ளது. அதை தாண்டி மற்ற மாநிலங்களில் அதற்கான அடையாளம் இன்னும் கிடைக்கல. இந்த நடனம் பற்றி வெளியே சொல்ல ஆட்களும் இல்லை.

நான் தன்னார்வ தொண்டு அமைப்பில் உறுப்பினரா இருக்கேன். இந்த அமைப்பின் மூலமா, ஒவ்வொரு சின்ன கிராமத்திற்கு சென்று அங்கு மோகினியாட்ட கலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதுமட்டும் இல்லாமல் கடந்த ஐந்து வருஷமாக எல்லா நடன விழா மற்றும் சபாக்களில் சென்று மோகினியாட்டம் நடனத்தை நிகழ்த்தி வருகிறேன். கல்லூரி மற்றும் பள்ளிகளில் இது குறித்தும் ேபசி வருகிறேன்.

முதலில் இது நம்முடைய இந்திய கலாச்சார நடனம். நம்ம நாட்டின் பெருமையை சேர்க்கும் பாரம்பரிய நடனத்தில் இதுவும் ஒன்று. பரதம் எல்லாருக்கும் தெரியும். மோகினி ஆட்டம் இன்னும் அந்த அளவுக்கு பிரபலமாகல. மேற்கத்திய நடனத்திற்கு ெகாடுக்கப்பட்டு இருக்கும் முக்கியத்துவம் இதற்கு கொடுப்பதில்லை. மேலும் இந்த நடனத்தில் நம்முடைய பாரம்பரிய கதைகள் மட்டும் இல்லாமல் சமூக சிந்தனையை தூண்டும் விஷயங்கள் குறித்தும் மக்களுக்கு கொண்டு போகலாம். அப்பா நிறைய சமூகம் சார்ந்த விஷயங்கள் செய்வார்.

அதைப்பார்த்து தான் எனக்கும் அதே போல் ஏதாவது செய்யணும்னு விருப்பம் ஏற்பட்டது. மனித இனம் தான் கொஞ்சம் மனிதாபிமானம் கொண்ட இனம். கடவுள் கொடுத்துள்ள அந்த குணத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். மாற்றங்கள் ஏற்பட்டா நல்லது தானே!’’ என்றவர் மோகினியாட்டத்தை மலையாளத்தில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தமிழ், பெங்காலி போன்ற மொழிகளிலும் இயற்றி வருகிறார்.

‘‘நான் தற்போது பெங்களூரில் வசித்து வருவதால், அங்கு மட்டுமே சொல்லித் தருகிறேன். என்னுடைய அடுத்த இலக்கு, சென்னை, கேரளாவிலும் என் பயிற்சி பள்ளியை துவங்கி அங்குள்ளவர்களுக்கும் மோகினியாட்டம் குறித்து பயிற்சி அளிக்க இருக்கிறேன்’’ என்ற ரேகா மோகினியாட்டத்தை இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் பிரபலமாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார்.

ப்ரியா

Related Stories: