×

இலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்

நன்றி குங்குமம் தோழி

மைதானத்தில் ஒரு போர்டு வைக்கப்பட்டு அதில் வட்டவடிவில் இருந்த ஒரு பலகையில் 10 வண்ணத்தில் வட்டங்கள் உள்ளன. எந்த வட்டத்தில் அம்பு நிலை கொள்கிறதோ அதற்கு ஏற்பட 1 முதல் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். உள்விளையாட்டு அரங்க பிரிவில் 18 முதல் 25 மீட்டர் தொலைவிலும், வெளி அரங்கில் 37 மீட்டர் முதல் 91 மீட்டர் தொலைவில் இந்த பலகை வைக்கப்படும். இதில் நடுமையத்தை நோக்கி குறி பார்த்துக் கொண்டிருந்தான் அந்த மாணவன். வில்லில் இருந்து சீறிப்பாய்ந்த அம்பு குறி தப்பாமல் அந்த வட்டப்பலகையில் மையத்தில் இருந்த மஞ்சள் பகுதியில் குத்தி நின்றது. சபாஷ் என தட்டிகொடுத்தார் பயிற்சியாளர் மதன்குமார்.

அந்த பாராட்டு பெற்ற சிறுவன் சதீஷ்குமார். 9ம் வகுப்பு மாணவன். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சதீஷ்குமார், தற்போது நாமக்கல் நகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். அவனை பற்றி முழுவிவரங்களை அறியும் முன் வில்வித்தை பற்றி சில குறிப்புகளை பார்ப்போம். ஆரம்பகாலத்தில் வேட்டையாட மட்டும் பயன்படுத்திய இந்த கலையில் சிறந்தவன் பாண்டவரில் ஒருவரான விஜயன் என்கிற அர்ஜூனன். விஜயன் அம்பை எடுப்பதையும், வில்லில் பூட்டுவதையும் அது இலக்கை நோக்கி பாய்வதையும் காண இயலாது. கண் இமைக்கும் நேரத்தில் நடக்கும் அவனது வேகம் அனைவரையும் வியக்க வைக்கும்.

அத்தகைய வில்வித்தை போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவில் சாம்பியன் பட்டத்தை பெற்ற சதீஷ்குமார் பயிற்சியை தொடங்கி 2 ஆண்டுகள் தான் ஆகிறது. கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியில் நடைபெற்ற அனைத்து இந்திய ஆர்சரி சாம்பியன் இன்டோர் பிரிவில் recurve bow வகை வில்வித்தை போட்டியில் முதல் இடம் பிடித்தார். கடந்த  டிசம்பர் 13 முதல் 21ம் தேதி வரை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்க சென்ற அவர் அதிலும் சிறப்பான இடம் பிடித்துள்ளார்.  

இதேபோல் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் கவினேஷ்.  மேட்டூரில் படித்து வரும் இவர் சதீஷ்குமாரின் சித்தி மகன். கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான வில்வித்தை போட்டியில் முதல் இடம் பிடித்துள்ளார். அக்கா,தங்கைகளின் குழந்தைகள் இருவர் வில்வித்தையில் அசத்துவது தமிழகத்தில் இதுவே முதல்முறை. இன்டோர் பிரிவில் 8 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போட்டியில் INTECH பிரிவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ள கவினேஷ், கோலாலம்பூரில் நடைபெற்ற சிறுவர்களுக்கான வில்வித்தை போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags : Brothers ,
× RELATED வழிப்பறி சகோதரர்கள் கைது