×

மெனோபாஸ் டயட்!

மெனோபாஸ் என்றதுமே பல பெண்கள் என்னவோ ஏதோ என்று அஞ்சுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதில் பெண்கள் பூப்பெய்துவதுபோலவே மெனோபாஸும் ஓர் இயற்கையான, இயல்பான நிகழ்வே. எல்லா பெண்களுக்கும் சராசரியாக 45 - 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில், மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவது நின்றுபோகும். இதனையே மெனோபாஸ் என்கிறோம்.

இந்த காலக்கட்டத்தில் பல பெண்கள் தலைவலி, வாந்தி, வயிற்று வலி, வயிற்று உப்புசம் என பல பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். கூடவே தனிமை உணர்வு, மற்றவர்கள் தன்னை உதாசீனப்படுத்துகிறார்களோ என்கிற எண்ணம் எல்லாம் சேர்ந்து மனதுக்கும் நிம்மதியின்மையையும் தந்துவிடும்.இனிமேல் கருமுட்டை வேண்டாம் என உடல் நிறுத்திக்கொள்ளும் இந்தப் பருவத்தில்தான் எலும்புகளின் கால்சியம் அடர்வு குறைய ஆரம்பிக்கிறது. கால் மூட்டுகளில், கழுத்து  இடுப்பு எலும்புகளில் கால்சியம் குறையும். சாதாரணமாக தினமும் 1,000 மி.கி கால்சியம் தேவைப்பட்டால், மெனோபாஸ் சமயத்தில் 1,250 மி.கி வரை அவசியம்.

*மாதவிடாய் முடியும் நேரத்தில் கால்சியம் மட்டும் போதாது; அதை கிரகிக்க வைட்டமின் டி சத்தும் தேவை.பாலில் கால்சியம் கிடைக்கும். ஆனால், அதற்கு செரிமானம் பக்கவிளைவுகள் உண்டு. எனவே, மோரே சிறந்தது. ஒரு குவளை மோரில் 250 மி.கி கால்சியம் கிடைக்கும். அதேபோல், சில வகை கீரைகள், வெண்டைக்காய், சோயாபீன்ஸ், தோலுடன்கூடிய உருளைக்கிழங்கு, அத்திப்பழம், பாதாம் பருப்பு, இவற்றிலும் கால்சியம் உண்டு.

*சூரிய ஒளியில் வளரும் காளான்கள், மீன், முட்டை, இறைச்சி, ஈரல் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிகம் உண்டு. இவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

*உணவில் 30 சதவிகிதம் பழங்களாக இருக்கட்டும். சிவந்த நிறமுள்ள மாதுளை, கொய்யா, பப்பாளி ஆகியவை கர்ப்பப்பை புற்றுநோயையும் மார்பகப் புற்றுநோயையும் தடுப்பவை.

*பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த தொலியுள்ள உளுந்து, நவதானியக் கஞ்சி, டோஃபு’ எனப்படும் சோயா கட்டி, இரும்புச்சத்து நிறைந்த கம்பு, கால்சியம் நிறைந்த கேழ்வரகு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*பால் சேர்க்காத தேநீர், அதிலும் கிரீன் டீ அருந்துவது நல்லது. தேநீரைக் கஷாயம் போடுவதுபோல் காய்ச்சி எடுக்கக் கூடாது. அது தேநீர் தரும் பலன்களைக் குறைத்துவிடும். கொதிக்கும் வெந்நீரில் தேயிலையைப் போட்டு 4  5 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு வடிகட்டி ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.

*காலை  நீராகாரம் அல்லது தேநீர் முந்தைய தினம் ஊறவைத்த பாதாம் பருப்பு இரண்டு. காலைச் சிற்றுண்டி  கம்பு, சோள, உளுந்து மாவில் சுட்ட தோசையுடன் பிரண்டை சட்னி அல்லது வெங்காயச் சட்னி. அத்திப்பழம் இரண்டு, ஒரு வாழைப்பழம்.

*மதிய உணவு  கருங்குறுவை அல்லது மாப்பிள்ளை சம்பா அல்லது கவுனி அரிசி அல்லது வரகரிசியில் சோறு. வாழைத்தண்டு பச்சடி, பீன்ஸ், அவரை, சிவப்பு கொண்டைக்கடலை சேர்ந்த தொடுகறிகள்.

*முருங்கை / பசலைக் கீரை, சுரைக்காய் கூட்டு, சுண்டைக்காய் வற்றல் மற்றும் குதிரைவாலி மோர் சோறு. மாலை  முருங்கைக்காய் சூப் உடன் ராகி பனைவெல்ல உருண்டை, நவதானியச் சுண்டலுடன் தேநீர். இரவு  கேழ்வரகு தோசை அல்லது உளுந்து கஞ்சி.

தொகுப்பு: யுவதி

Tags :
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்