×

பனிப்போர்!

எனக்கு வயது 32. பனிக்காலம் வந்தாலே எனக்கு அலர்ஜியாகிவிடும். காரணம் என்னுடைய சருமம் வறண்டு போய் வெள்ளையாக தென்பட ஆரம்பிச்சிடும். சில சமயம் தோல் எல்லாம் சுருக்கம் ஏற்பட்டு, பார்ப்பதற்கு வயதான தோற்றம் போல் காட்சியளிக்கும். நானும் தேங்காய் எண்ணெய் தடவி பார்த்தேன், ஆனாலும் சில மணி நேரத்தில் மறுபடியும் தோல் வறண்டது போல் காணப்படுகிறது. எனக்கு 10 வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். அவளுக்கு இந்த பனிக்காலத்தில் சில சமயம் சரியாக சாப்பிடமாட்டாள். காரணம் கேட்டால் பசிக்கவில்லை என்கிறாள். பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம் மற்றும் சரும பாதுகாப்பது எப்படி என்று ஆலோசனை கூறுங்கள்.

- விஜி, வேலூர்

பனிக்காலம் துவங்கியாச்சு. இந்த காலம் உடலுக்கு போர்வையாக செயல்படுவது தோல்தான். இதை பாதுகாக்க, பராமரிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். பனிக்காலத்தில் சருமத்தில் வெடிப்பு ஏற்படுவது இயல்பான விஷயம். அதே போல் குளித்து முடித்ததும் சுருமத்தில் வெள்ளை போல படர்ந்து விடும். சருமத்தில் இந்த காலத்தில் ஈரப்பதம் குறைவதால், அரிப்பு ஏற்படும். சில சமயம் அரிப்பின் காரணத்தால், பல்வேறு தோல் சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த தொந்தரவில் இருந்து விடுபட நாம் வீட்டில் இருந்தபடியே சில ஆலோசனைகளை கடைப்பிடிக்கலாம் என்கிறார்,

- அழகு கலை நிபுணரான சுமதி.

* எண்ணெய் மற்றும் நீர்பசையுள்ள சோப்புகளை உபயோகிக்கலாம்.

* வாஸலின், லோஷன் உள்ளிட்ட, லோஷன்களை தடவுவதால், தோலுக்கு நீண்ட நேரம் ஈரப்பதம் கிடைக்கும்.

* பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால், வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, காலை பத்து நிமிடங்கள் வரை, ஊற வைக்க வேண்டும். பின், ஸ்கிரப்பர் உள்ளிட்டவை வாயிலாக, தேய்த்து, அழுக்குகளை வெளியேற்றலாம். வெடிப்புகளில் மண், தூசி உள்ளிட்டவை தேங்கினால், பாத அரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

* தலையில் பொடுகு தொல்லை இருப்பவர்கள், குளிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். இக்காலத்தில், தலை குளித்து, வெயிலில் நடந்தால், வெப்பத்தின் காரணமாக அரிப்பு ஏற்பட்டு, வெள்ளை போல படர்ந்திருக்கும். சொரியாசிஸ் மற்றும் அரிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள், உடனடியாக தோல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

* பனிக்காலத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் தோலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி, கொசு தடுப்பு கிரீம்களை தடவலாம்.

* இந்த நாட்களில் பனியின் தாக்கத்தால் குழந்தையின் சருமம் வறண்டுபோகும். எனவே அவர்களுக்கு அவ்வப்போது தேங்காய் எண்ணெயை உடலில் தேய்த்துவிடுங்கள். அல்லது குழந்தைக்கு பயன்படுத்தும் மாய்ஸ்சரைசர் க்ரீம்களை மருத்துவரின் பரிந்துரைப்படி தடவலாம்.

* கீரை சூப்: கீரை உடலுக்கு பல விட்டமின்களை தரவல்லது. வாரம் இருமுறையாவது கீரை சாப்பிட்டால், மருத்துவ செலவுகளை குறைக்கலாம். கீரைத்தண்டை உணவில் சேர்ப்பதால், முடி உதிர்வதை தடுக்க முடியும். தண்டுக் கீரை, முளைக் கீரை, முருங்கைக் கீரை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றுடன், சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு இரண்டு பல், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, சூப் தயாரிக்கலாம். இந்த சூப் மாலை நேரத்துக்கு ஏற்றது.

* ஸ்பெஷல் தயிர்சாதம்: பனியால் ஏற்படும் தோல் வறட்சியைத் தடுக்க பால், தயிர் மற்றும் மோரை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். வழக்கமான தயிர் சாதத்தை குழந்தைகள் சாப்பிட மறுப்பர். இதற்கு பதிலாக, மாதுளை, ஆப்பிள், அன்னாசிப்பழ துண்டுகள், கருப்பு திராட்சை, முந்திரி ஆகியவற்றை, தயிர் சாதத்தில் கலந்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். தோலுக்குத் தேவையான பளபளப்பும் கிடைக்கும். பழங்களின் சத்துகளும் சேர்வது கூடுதல் சிறப்பு.

* எலுமிச்சை ரசமும் பனிக்காலத்துக்கு மிகவும் நல்லது.

* பனிக்காலத்தில், அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் சேர்ப்பதும் மிக முக்கியம்.

*  முடி உதிர்வு மற்றும் கூந்தல் பொலிவிழப்பதைத் தடுக்க, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பார்லி கஞ்சியும் பனிக் காலத்துக்கு சிறந்தது.

* முளைக்கட்டிய பயறு வகைகள் சிறந்த உணவாக அமையும். பச்சைப்பயறு, சுண்டல், ராகி போன்றவற்றை, முளைக்கட்டிய பின் சாப்பிடலாம் இதனால் சருமம் பொலிவுடன் இருக்கும் என்று ஆலோசனை வழங்கினார்.

காலை நேரத்தில் எழுந்திருக்கவே முடியாது. அவ்வளவு குளிர், அவ்வளவு பனியாக இருக்கும். நமக்கே இப்படி இருக்கும்போது குழந்தைகளை நினைத்துப்பாருங்கள். கோழி தன் குஞ்சுகளை அடைக் காப்பதுபோலக் குழந்தைகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும். பனிக்காலத்தில் கதகதப்பு அவசியம். அதை உங்களின் அன்பான அரவணைப்பால் குழந்தைக்குத் தந்துவிட முடியும்.

காலையின் பனி, மதியம் வெயில், மாலையும் இரவும் பனி… இப்படி வானிலை மாறிக்கொண்டே இருப்பதால் அதற்கேற்ப உடலின் பயாலஜிக்கல் கிளாக்கும் சரியாக வேலை செய்ய வேண்டும். அதற்கு சரியான உணவு, பராமரிப்பு, உடற்பயிற்சியும் அவசியம். குழந்தைகளுக்கு உடற்பயிற்சி தவிர சரியான உணவும் பராமரிப்பும் தரவேண்டும் என்றார் உணவியல் நிபுணர் அம்பிகா சேகர்.

பனிக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்:

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது உடல் பலவீனமாகும். அதற்கு மிளகு, துளசி, கறிவேப்பிலை, மஞ்சள், கொத்தமல்லி, தனியா, இஞ்சி, பூண்டு, சீரகம், தை மாதத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், பயறு வகைகள் ஆகியவற்றைப் பாலூட்டும் தாய் சாப்பிட, குழந்தைகளுக்கும் பால் மூலமாக நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.

*பால் குடிக்காத குழந்தைகளுக்குத் தை மாதத்தில் அதிகமாக விற்கப்படும் பயறு வகைகளை நன்கு வேக வைத்து மசித்துக் கொடுங்கள்.

*மிளகு ரசம், சூப் என இதில் நம் இந்திய மசாலாக்களைச் சேர்த்துக் கொடுக்க நல்ல ஆகாரமாக இருக்கும்.

*பனிக்காலத்தில், வானிலை ஒத்துக் கொள்ளாமல் காய்ச்சல் ஏற்படும்போது மிகவும் ஸ்பைசியான உணவுகளைத் தரவேண்டாம். அதாவது எண்ணெய், தேவையில்லாத மசாலா கலந்த உணவுகளைக் கொடுக்க வேண்டாம். இட்லி, இடியாப்பம், சம்பா கோதுமையில் செய்த உப்புமா, அரிசி கஞ்சி, பிரெட், புதினா துவையல், கறிவேப்பிலை துவையல் போன்றவற்றைச் சாப்பிட கொடுங்கள்.

*இந்த சீசனில் விளைகின்ற மாதுளை, ஆப்பிள், சப்போட்டா போன்றவற்றைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

*சாத்துக்குடி, ஆரஞ்சு, ஸ்டாபெர்ரி கிடைத்தால் அதைப் பழமாகத் தராமல் இளஞ்சூடான நீரில் கலந்த ஜூஸாக அளவுடன் தரலாம்.

*புளிப்பு சுவையுள்ள சிட்ரஸ் பழங்களில்தான் விட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. நோய் எதிர்ப்பாற்றலை அள்ளித் தரும் பழங்கள் இவை.

*பச்சை திராட்சையும், பச்சை வாழைப்பழத்தையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

*பனிக் காலத்தில் சில குழந்தைகளுக்கு தொண்டையில் பிரச்னை ஏற்படும். எனவே அவர்களுக்கு எப்போதும் வெது வெதுப்பான தண்ணீரைக் குடிக்கக் கொடுங்கள்.

* துளசி  4 இலைகள், கிராம்பு  1, மிளகு  1, ஏலக்காய்  1, சீரகம்  அரை டீஸ்பூன் இவற்றை எல்லாம் போட்டு கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி, அந்தத் தண்ணீரைக் குடித்தால் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் வராது. தொண்டை வலி வராமல் தடுக்கப்படும்.

*துளசி கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். கற்பூரவல்லி இலை  1, தூதுவளை கீரை  2 டீஸ்பூன் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து வடிகட்டி, இரண்டு டீஸ்பூன் அளவுக்குக் குழந்தைக்கு கொடுங்கள்.

*பஞ்சில் ஒரு சொட்டு யூக்கலிப்டிக்ஸ் தைலம் சேர்த்து, குழந்தைகள் இரவில் தூங்குவதற்கு முன்பாக அவர்களுடைய காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தடவுங்கள்.

*எந்த உணவாக இருந்தாலும் அதைக் குளிர்ச்சியாகத் தர வேண்டாம். குறிப்பாக ப்ரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே எடுத்துக் குழந்தைகளுக்கு சாப்பிட தராதீர்கள்.

*உணவுகளைச் சூடாக குழந்தைக்கு சாப்பிடத் தர வேண்டும். குளிர்ச்சியான திரவ உணவுக்குப் பதிலாகச் சூடான சூப் போன்ற பொருட்களைச் செய்துக் கொடுங்கள்.

*இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது சிறிது பஞ்சைக் காதில் வைத்துக் கொண்டு சென்றால் குளிர் காற்றிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.

*குழந்தைகளுக்கு மப்ளர், ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும்.

*எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்.

தொகுப்பு: ப்ரியா

Tags :
× RELATED அம்மாச்சி கழிவறைகள்!