தீபாவளியை தித்திப்பாக்க திண்டுக்கல் ஜிலேபி ரெடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் ஜிலேபி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் என்றவுடன் கனமான பூட்டு, கமகமக்கும் பிரியாணி, பழநி பஞ்சாமிர்தம், சிறுமலை வாழை, கொடைக்கானல் பூண்டு ஆகியவைதான் உடனடியாக நினைவுக்கு வரும். இதுமட்டுமின்றி மாவட்டத்தின் மணிமகுடமாக, மவுசு குறையாத பண்டமாக விளங்குவது திண்டுக்கல் ஜிலேபி ஆகும். ரயில் பயணிகள், பஸ் பயணிகள் திண்டுக்கல் வந்து இறங்கியதும் பிரியாணிக்கு பிறகு திண்டுக்கல் ஜிலேபியை விரும்பி வாங்கும் அளவிற்கு சிறப்பு பெற்றது.

மைதா, உளுந்து, அரிசி மாவு ஆகிய மூன்றும் கலந்து தித்திப்பான ஜிலேபி தயாரிக்கப்படுகிறது. இனிப்பு சுவை ஒரேவிதமாக இருப்பதால் தின்னத் தின்ன திகட்டுவதில்லை. எவ்வளவு சாப்பிட்டாலும் இன்னும் கொஞ்சம் வேணும் என்று கேட்கும் அளவுக்கு சுவை சுண்டி இழுக்கிறது. தற்போது தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிலேபி விற்பனை களை கட்டியுள்ளது. வெளியூர்களில் இருந்தும் ஆர்டர்கள் குவிகின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜிலேபி தயாரிப்பாளர் கணேஷ் கூறுகையில், ‘‘‘‘ஜிலேபி எந்த கெமிக்கல் பொருளும் கலக்காமல் இயற்கையான உளுந்து மற்றும் அரிசி மாவு கலந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சுவை அதிக அளவு கூடுவதால் தரத்தில் என்றும் நிரந்தரமாக மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பொருட்களின் விலை கூடினாலும் நாங்கள் விலையை உயர்த்தவில்லை. திருநெல்வேலி அல்வாவை போல், திண்டுக்கல் ஜிலேபியும் தனித்துவமான சுவை கொண்டது’’ என்றார்.

Related Stories: