×

தீபாவளி விற்பனையில் சூடுபிடிக்கும் வண்ண வண்ண பட்டாசுகள் நெருப்பை கக்கும் டைனோசர் சண்டையிடும் அணில் வெடிகள்

கொரோனா ஊரடங்கு தளர்வு, கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் வருகின்ற பண்டிகை என்பதால் தீபாவளி புதிய உற்சாகத்தை மக்களுக்கு தந்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் 1 நாளே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. கடை வீதிகளிலும், கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. புத்தாடைகள், புதிய பொருட்கள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்க மக்கள் கடைகளில் குவிந்துள்ளனர். பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும் கட்டுப்பாடு உடைய நேரத்தில் வெடிக்க பட்டாசுகளை பெட்டி பெட்டியாக வாங்கி மக்கள் குவித்து வருகின்றனர்.

அதிக வெடி சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றமும், அரசும் உத்தரவிட்டுள்ளதால் ஒளி வெள்ளத்தை பாய்ச்சுகின்ற பட்டாசுகளை வாங்கிட மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அவற்றின் விற்பனையும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சிவகாசியில் இருந்து மொத்தமாக பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்குவோர் ஒருபுறம் இருக்க சிவகாசி விலைக்கே தருகின்றோம் என்று கூவி கூவி பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் ஆகியுள்ளன.

டிவிகளில் வருகின்ற கார்ட்டூன் கதாபாத்திர ஜோடியில் 2 டிஸ்பிளே என்று பட்டாசுகள் உள்ளன. இது வானில் சென்று வெடித்த உடன் தங்க நிறத்தில் வெளிச்சத்தை வெளிப்படுத்தும். அதன் பின்னரும் மேல் எழுந்து சென்று இரண்டாவது வடித்து பல வண்ணங்களில் பந்தாக வெளிச்சத்தை வெளியிடும். மியூசிக்கல் சத்தம் வருகின்ற பட்டாசு சரவெடியாக கிடைக்கிறது. மயில் தோகையை விரிப்பது போன்று நடனமாடும் மத்தாப்பு, கவரை பற்ற வைத்ததும் பல வண்ணங்களில் குலைவாணம் வந்ததும் தெறித்து விழும் சக்கரங்களில் சுழலும் தரை சக்கரங்களுடன் குண்டு சாக்லெட் போன்றவற்றின் விற்பனையும் அதிக அளவில் நடைபெறுகிறது.

ஒன்றுக்கு ஒன்று மோதி சண்டை போடும் அணில் வெடிகள், சாக்லெட்களை போன்று இருக்கும் பட்டாசுகள், 11 தரைசக்கரங்களுடன் விசில் அடித்தவாறு சுழலும் டூடு பட்டாசு, நெருப்பை கக்கி நகரும் டைனோசர் என்று பல புதிய பரிமாணங்களை பட்டாசுகள் இந்த தீபாவளிக்கு நமக்கு தந்துள்ளன. குழந்தைகள் விளையாடும் கார் போன்ற பொம்மை வடிவ பட்டாசு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பற்றவைத்தால் மெதுவாக ஓடும் கார், பின்னர் குலைவாணமாக மாறுவது தனி ரகம் ஆகும்.

கையில் வைத்து வெடிக்க வைக்கின்ற குலைவாணம், ராட்சத பென்சில், 75 செ.மீ நீளம் கொண்ட வண்ண வண்ண கம்பி மத்தாப்பு, பல வண்ணங்களில் பொங்கி ஒளிரும் குலைவாணம், வானில் வர்ண ஜாலம் அளிக்கும் பட்டாசுகள், தரைசக்கரங்கள் என்று 400க்கும் மேற்பட்ட பட்டாசுகள் இந்த தீபவாளிக்கு புதிய வரவு ஆகும். இவை தவிர வெடித்து மேல் சென்று உடன் கீழ் வருகின்ற ட்ரோன் பட்டாசு, பீர் டின் வகை பட்டாசு, ஹெலிகாப்டர் பட்டாசு போன்றவை அந்தரத்தில் வர்ண ஜாலம் காட்டுபவை ஆகும். இதன் விலை ரூ.150 வரை உள்ளது. மேலும் சிறுவர் சிறுமியரை கவரும் துப்பாக்கிகள் பலரும் விற்பனைக்கு வந்துள்ளது.

சைலென்சர் பொருத்திய துப்பாக்கி, ரிவால்வர், பிஸ்டல் என்று பல வடிவங்களில் கிடைக்கிறது. ஏ.கே.47, மிஷின் கன் வடிவிலும் இதனை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் விலை ரூ.50ல் தொடங்கி ரூ.400 வரை கிடைக்கிறது. டிஸ்பிளே பட்டாசுகள் குழந்தகைளை கவரும் பிரதான ரகமாக மாறியள்ளது. 5 அடி உயரம் சென்ற பின்னர் 3 நிமிடங்கள் ஒளிவெள்ளத்தை பாய்ச்சுகின்ற கலர் வேல்டு, வெடித்த உடன் பல வண்ண காகிதங்கள் பறக்கின்ற லாலா பட்டாசுகள், கையில் பிடித்து வெடிக்க வைக்கும் பாம்பாம் பட்டாசு, குழந்தைகள் கையில் வைத்து வெடிக்க வாய்ப்பாக அமைந்துள்ள டைனிகன், பற்ற வைத்தவுன் வானில் சென்று 5 முறை ஒளி வெள்ளம் பாய்ச்சும் பிரேக் அவுட், ஒருமுறை பற்ற வைத்த உடன் 9 முறை தனி தனியாக வானில் வர்ணஜாலம் பாய்ச்சுகின்ற, சிறு சிறு குடைகளை விரித்து செல்கின்ற ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வடிவிலான பட்டாசு என்று புதிய வரவுகளை வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.

Tags : Diwali ,Dinosaur , Colored firecrackers on fire for Diwali Dinosaur fighting squirrels
× RELATED தீபாவளி சீட்டு நடத்தி ரூ.24 கோடி மோசடி...