சினிமா எனக்கான தளம் கிடையாது

நன்றி குங்குமம் தோழி

‘‘பெண்கள் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கம். அதுவும் மணப்பெண் என்றால், தன் மணநாள் அன்று மற்ற எல்லா பெண்களை விடவும் ராணி மாதிரி ஜொலிக்க வேண்டும் என்று நினைப்பாள். இவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வதுதான் என் வேலையே’’ என்கிறார் ஒலிவியா. கடந்த ஐந்து வருடமாக மணப்பெண் அலங்காரம் செய்து வரும் இவர் பல மணப்பெண்களின் மோஸ்ட் வாண்டட் மேக்கப் நிபுணர்.

‘‘பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு கல்லூரி முடிச்சிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். எல்லா பெண்களை போல் எனக்கும் திருமணம் ஆச்சு. என்னுடைய கல்யாணத்துக்கு நான் தனியா எந்த ஒரு மேக்கப் நிபுணரையும் நியமிக்கவில்லை. எனக்கான அலங்காரத்தை நானே செய்து ெகாண்டேன்.

பலர் என்னிடம் யார் ேமக்கப் போட்டது நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அவங்களிடம் நானே தான் மேக்கப் செய்து கொண்டேன்னு சொன்னதும் பலர் ஆச்சரியமா பார்த்தாங்க. அதன் பிறகு என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நானே மேக்கப் போட ஆரம்பிச்சேன். அவர்களுக்கு மட்டும் இல்லாமல் அவர்களின் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கும் என்னை பரிந்துரை செய்தாங்க.

சில சமயம் மணப்பெண் அலங்காரமும் வரும். அப்போது நான் வேலைப் பார்த்து வந்தேன். கிடைக்கும் நேரத்தில் ஃபிரீலான்சரா தான் இதை செய்து வந்தேன். ஒரு கட்டத்தில் ஆர்டர்கள் நிறைய குவிய ஆரம்பிச்சது. என்னால் வேலை மற்றும் அலங்காரம் இரண்டையும் சமாளிக்க முடியவில்லை. மேலும் அவ்வப்போது விடுமுறை எடுக்க வேண்டி இருந்தது. இதனால் வேலையை ராஜினாமா செய்து முழுமையா இதில் கவனம் செய்ய ஆரம்பிச்சேன்’’ என்றவருக்கு மேக்கப் மேல் இன்ஸ்பிரேஷன் வர அவரின் அம்மா தான் காரணமாம்.

‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே மேக்கப் போட பிடிக்கும். மூணு வயசு இருக்கும் போதே நானே எனக்கு ஐலைனர் ேபாட்டுக் கொள்வேன். அதற்கு என் அம்மா தான் காரணம். அவங்க ரொம்ப அழகா இருப்பாங்க. அவங்களின் அழகை மேலும் மேம்படுத்த மேக்கப் போடுவாங்க. அதுவும் ரொம்ப சிம்பிளா தான் போடுவாங்க. முகத்துக்கு பவுடர், கண்களுக்கு மை, ஐலைனர், லிப்ஸ்டிக் அவ்வளவு தான்.

அதுவே அவ்வளவு ேநர்த்தியா இருக்கும். அவங்க மேக்கப் போடும் போது நான் பார்ப்பேன். அவங்க போடுவதை போல் நானும் போட்டு பார்ப்பேன். இப்படித்தான் நான் மேக்கப் போடவே கற்றுக் கொண்டேன். அது தான் எனக்கு மேக்கப் மேல ஒரு ஈடுபாட்டினை ஏற்படுத்திச்சு. அதனால் நானே எனக்கு மேக்கப் போட ஆரம்பிச்சேன். இதற்காக நான் எங்கும் பயிற்சி எல்லாம் போகல.

இணையதளத்தில் தான் இப்ப எல்லாமே இருக்கே. அதைப் பார்த்தும் கற்றுக் கொண்டேன். தற்போது இதை என்னுடைய தொழிலாக மாற்றிய பிறகு மலேசியாவில் ராஜமாணிக்கம் என்பவரிடமும் மற்றும் பூனாவில் ஜாஸ்மின் ப்யூட்டி கேர் நடத்திய வர்க்‌ஷாப்பில் பங்கு பெற்று மேக்கப் குறித்து மேலும் என்னை அப்டேட் செய்து கொண்டேன்’’ என்றவர் மேக்கப் என்பது கலை. அதை அவ்வப்போது அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்றார்

‘‘மேக்கப் கணினி சாஃப்ட்வேர் போல. ஆறு மாசத்துக்கு ஒரு முறை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

 நான் சுயமா பயிற்சி எடுத்துக் கொண்டதால், உலகின் பிரபல மேக்கப் நிபுணர்கள் எல்லாரையும் சமூக வலைத்தளமான யுடியூப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் எல்லாவற்றிலும் பின்பற்றி வருகிறேன். அவர்கள் லேட்டஸ்ட் டிரண்ட் குறித்து அதில் வீடியோ வெளியிடுவாங்க. அைத பார்த்து இப்ப என்ன லேட்டஸ்ட் மேக்கப்ன்னு தெரிந்து கொள்வேன். அதை நடைமுறைப்படுத்தியும் பார்ப்பேன். மணப்பெண் அலங்காரம் செய்வது மட்டுமில்லை விரும்பும் பெண்களுக்கும் பயிற்சியும் அளித்து வருகிறேன்.

ஒரு பேட்சில் ஆறு பேர். அப்பத்தான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் முழு கவனம் செலுத்த முடியும். இதில் பேஸிக் மற்றும் அட்வான்ஸ்ட் என இரண்டு பயிற்சியும் உண்டு. மேக்கப் மட்டும் இல்லாமல் சிகை அலங்காரம், புடவை கட்டுவதுன்னு எல்லாமே ஒரு பேக்கேஜா தான் சொல்லித் தரேன். பயிற்சி முடியும் ேபாது அவர்கள் முழுமையான மேக்கப் நிபுணரா மாறி இருப்பாங்க. இங்கு வருபவர்களுக்கு மேக்கப் பற்றி தெரிந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேக்கப் குறித்து அடிப்படை தெரியாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான பயிற்சி அளிக்கிறேன்’’ என்றவர் அனுபவம் மூலம் நிறைய பாடம் கற்றுள்ளார்.

‘‘என்னதான் நான் எனக்கு நல்லா மேக்கப் போட்டாலும், மற்றவருக்கு போடும் போது அது அனுபவம் மூலம் தான் கற்றுக் கொள்ள முடியும். அப்படித்தான் எந்த சருமத்திற்கு என்ன மேக்கப் போடலாம்ன்னு தெரிந்து கொள்ள முடியும். நானும் அப்படித்தான் கற்றுக் கொண்டேன். பலர் ஒருவரின் முக சருமத்திற்கு ஏற்ப தான் மேக்கப் போடுவாங்க.

அப்படிப் போடக்கூடாது. கழுத்து சரும நிறத்திற்கு ஏற்ப தான் முகத்திற்கு மேட்ச் செய்யணும். அப்பதான் ஃபர்பெக்டா இருக்கும். சில சமயம் இரண்டு நிற ஃபவுண்டேஷன் கொண்டும் மேட்ச் செய்ய வேண்டி இருக்கும். நான் மேக்கப் ஆர்டிஸ்ட் மட்டும் தான். சிகை அலங்காரம் மற்றும் புடவை அலங்காரத்திற்கு தனி ஆட்கள் உள்ளனர். ஒரு ஆர்டர் வந்தா நாங்க எல்லாரும் சேர்ந்து தான் போவோம்’’ என்றவர் பிரபலங்களுக்கும் பிடித்தமானவராக வலம் வருகிறார்.

‘‘என்னைப் பற்றி கேள்விப்பட்டு விஜய் டி.வி காம்பயர் பிரியங்கா தான் என்னை ஒரு ஷூட்டிங்காக புக் செய்தாங்க. முதல்ல அவங்க தான்னு தெரியாது. போன போது தான் அவங்கன்னே தெரியும். அவங்க மூலமா நிறைய பேருக்கு ஷூட்டிங்கிற்கான மேக்கப் செய்து வருகிறேன். யாஷிகா ஆனந்த், ஜனனி ஐயர், அக்‌ஷரா ஹாசன், ரம்யா நம்பீசன்னு நிறைய பேருக்கு செய்து இருக்கேன். சினிமா என்னுடைய கப் ஆப் டீ கிடையாது. சினிமாவுக்கு மேக்கப் போடணும்னா சங்கத்தில் உறுப்பினரா இருக்கணும். மேலும் எனக்கு சினிமா மேக்கப் போட விருப்பமில்லை. மணப்பெண் அலங்காரம் தான் என்னுடைய தளம்.

மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்கும் ஷூட் போது போடும் மேக்கப்பிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. கல்யாண பொண்ணு பார்த்தீங்கன்னா மேக்கப் போட்டு இருக்கணும், ஆனால் போடாத மாதிரி நேச்சுரலா இருக்கணும். அப்படித்தான் எல்லாரும் விரும்புறாங்க. சிலருக்கு கண்கள் அழகா இருக்கும். சிலருக்கு மூக்கு, சிரிப்பு நல்லா இருக்கும். அதற்கு ஏற்ப ஹைலைட் செய்வோம். ஆனால் பெரும்பாலான மணப்பெண் மேக்கப்பில் கண்களுக்கு அதிக முக்கியத்துவம் செய்வோம். மற்ற மேக்கப் மிதமா இருக்கும்.

 காரணம் மேக்கப் இல்லாமல் இருந்தாலும் அவங்களின் தோற்றம் மாறாமல் இருக்கணும்ன்னு விரும்புவாங்க. ஆனால் ஷூட் போது போடப்படும் மேக்கப் கொஞ்சம் அடர்த்தியா இருக்கணும். இதில் நிறைய ஆய்வுகள் செய்யலாம். காரணம் ஷூட்டிங் கான்செப்ட்டுக்கு ஏற்ப மேக்கப்பும் மாறுபடும். அதுமட்டும் இல்லை. புகைப்படம் பிடிக்கும் போது நிறைய பிளாஷ் விளக்குகள் பயன்படுத்துவாங்க. அதில் மிதமான மேக்கப் போட்டு இருந்தா, புகைப்படம் பார்க்கும் போது பளிச்சென்று இருக்கும். கொஞ்சம் அடர்த்தியா போட்டா தான் எடுப்பா எடுத்துக் காட்டும்’’ என்றவர் பிரைடல் மேக்கப்பில் உள்ள டெக்னிக் பற்றி விவரித்தார்.

‘‘மணப்பெண் மேக்கப் போடும் போது மணப்பெண் கொஞ்சம் கவனமா இருக்கணும். கல்யாணத்திற்கு ஆறு மாசம் இடைவேளை இருந்தால், அவர்கள் மாதம் ஒரு முறை ஃபேஷியல் செய்ய வேண்டும். குறைந்த நாட்களே இருந்தால் ஃபேஷியல் செய்ய கூடாது. காரணம் சிலரின் சருமத்திற்கு ஃபேஷியல் ஒத்துக் கொள்ளாது. கல்யாணத்திற்கு இடைவேளை இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்து சரி செய்துவிடலாம். ஆனால் நேரம் இல்லாத போது, இது போல் ஏற்பட்டால், மேக்கப் போட்டாலும் நன்றாக இருக்காது. அதே சமயம் எக்காரணம் கொண்டும் பிளீச் செய்யக்கூடாது.

மேக்கப்பில் இப்போது பாப்புலரா இருக்கிறது ஹை டெபினிஷன் மற்றும் ஏர் பிரஷ் மேக்கப். ஹை டெபினிஷன் ஷூட் போட்டோகிராபுக்கு நல்லா இருக்கும். 3டி எபெக்ட் கொடுக்கும். ஏர்பிரஷ் மேக்கப் மணப்பெண்ணுக்கு உகந்தது. சின்ன ஸ்ப்ரே போல் இருக்கும். அதில் ஃபவுண்டேஷனை நிரம்பி முகத்தில் ஸ்ப்ரே செய்வோம். இது வாட்டர் ப்ரூப் மற்றும் ஒன்பது மணி நேரம் வரை தாங்கும் என்பதால் மணப்பெண்கள் இதைத் தான் விரும்புறாங்க’’ என்றவர் சில மேக்கப் டிப்ஸ்களை அள்ளித் தெளித்தார்.

‘‘எல்லா பெண்களும் CTM என்ற மூன்று எழுத்தை நினைவில் கொள்ள வேண்டும். கிளன்சிங், டோனிக் மற்றும் மாய்சரைசிங். நிறைய தண்ணீர், பழச்சாறு குடிக்கவேண்டும். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வது அவசியம். ABC (ஆப்பிள், பீட்ரூட், கேரட்) சாறு குடித்து வந்தால் சருமத்திற்கு இயற்கை முறையில் பளபளப்பு கிடைக்கும்.

இரவு எந்நேரம் ஆனாலும் மேக்கப்பை கலைத்து விட வேண்டும். இல்லை என்றால் சருமத்தில் உள்ள துவாரங்களில் அடைப்பு ஏற்பட்டு பரு மற்றும் கரும்புள்ளி ஏற்பட காரணமாகும். தினமும் மணப்பெண் போல் மேக்கப் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேலைக்கு செல்லும் பெண்கள் அவங்க சருமத்திற்கு ஏற்ற ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம்.

ஃபவுண்டேஷன் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது, பருக்கள் ஏற்படும். அவர்கள் பிபி கிரீம் பயன்படுத்தலாம். எண்ணை சருமம் உள்ளவர்கள் காம்பேக்ட் பவுடர் உபேயாகிக்கலாம். கண்களுக்கு மை, ஐலைனர் மற்றும் லிப்ஸ்டிக் போட்டால் போதும். வேலைக்கோ அல்லது வெளியே போகும் போது இதைக் கடைப்பிடித்தாலே போதும், பளிச்சென்று தோற்றம் அளிக்கும். கையில் எப்போதும் பேஸ்வாஷ் வைத்துக் கொள்வது அவசியம்’’ என்று கூறும் ஒலிவியாவிற்கு மேக்கப் குறித்து சர்வதேச அளவில் ஒரு அகாடமி திறக்க வேண்டும் என்பது தான் எதிர்கால திட்டமாம்.

ப்ரியா

Related Stories: