பனிக்காலத்திலும் பளபளன்னு இருக்கணுமா?

* செக்கில் ஆட்டி, வாசனைத்  திரவியங்கள் கலக்காத பாதாம் எண்ணெய், அவகோடா எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் அப்ளை செய்துகொள்ளுங்கள். அரை மணிநேரம் ஊறவைத்து, பின் நலுங்கு மாவு பயன்படுத்திக் குளிக்க, சருமம் டால் அடிப்பது உறுதி.

* குளிர்காலத்தில் சருமத்தில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகள் அதிகளவு வியர்வையைச் சுரப்பதில்லை என்பதால் சருமம் அதிக வறட்சியுடன் இருக்கும். கூந்தலிலும் எண்ணெய்ப் பசை குறைந்து வறண்டு காணப்படும். குளிர்காலத்தில் தலை முதல் கால் வரை பொலிவுடன் இருக்க எளிமையான பியூட்டி டிப்ஸ் இதோ.

* உதடுகள் வெடிப்புகளுடனும் சுருக்கங்களுடனும் கறுத்துக் காணப்படுபவர்கள் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு சேர்க்காத வெண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து உறங்கச் செல்வதற்கு முன் உதடுகளில் அப்ளை செய்து கொள்ளவும். தொடர்ச்சியாக ஒரு வாரம் இதைச் செய்து வர உதடுகள் இயற்கைச் சிவப்பழகு பெறும்.

* குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படுவதால் பொடுகுத் தொல்லை அதிகரிக்கும். எனவே டீ - ட்ரீ ஆயில் 5 சொட்டுகள் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து ஷாம்பூ பயன்பாட்டுக்குப் பின் அதைக் கொண்டு தலையை அலச வறட்சியால் ஏற்படும் பொடுகுத் தொல்லை நீங்கும்.

* தேன் - ஒரு டீஸ்பூன், பால் - 2 டீஸ்பூன், வாழைப்பழம் பாதி எடுத்து மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பேக் போட்டுக்கொள்ளவும். அரை மணிநேரத்துக்குப் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ சரும வறட்சி நீங்கும். இரண்டு மணிநேரத்துக்கு சோப்பைப் பயன்படுத்த வேண்டாம்.

* குளிர்காலத்தில் உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ப மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துவது அவசியம். வறண்ட சருமம் உடையவர்கள் க்ரீம் டைப்பிலும், எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவர்கள் லோஷன் டைப்பிலும் மாய்ஸ்ச்சரைசர்களைத் தேர்வு செய்வது நல்லது. குளித்து முடித்த பின் மாய்ஸ்ச்சர்களை உடல் முழுவதும் தடவி அதன் பின் மேக் அப் போட்டுக்கொள்வதன் மூலம்  வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

* 15 கிராம் மல்லிகை இதழ் அல்லது ரோஜா இதழ்களை எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் சேர்த்து, 10 நிமிடங்கள் சூடேற்றவும். பின் ஒரு நாள் முழுவதும் இந்தத் தண்ணீரை ஆறவிடவும். பூவின் இதழ்களில் இருக்கும் சத்துகள் தண்ணீரில் இறங்கி தண்ணீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். பின் தண்ணீரை வடிகட்டி சுத்தமான ஒரு பாட்டிலில் ஊற்றி, அதைப் பயன்படுத்தி 3 மணிநேரத்துக்கு ஒரு முறை முகத்தைக் கழுவ சருமம் பிரகாசமாய் இருக்கும். நேரம் இல்லை என்பவர்கள் கடைகளில் கிடைக்கும் ஃபிளவர் ஆயில்களை உங்களுக்குப்  பிடித்த நறுமணங்களில் வாங்கிப் பயன்படுத்துங்கள்.

* கால்களில் பித்தவெடிப்பு உள்ளவர்கள் மெடிக்கல்களில் கிடைக்கும் லாவண்டர் ஆயிலை வாங்கி, இரவு தூங்குவதற்கு முன்னர் பஞ்சில் நனைத்து பாதம் முழுவதும் அப்ளை செய்து மறுநாள் காலையில் இதமாகத் தேய்த்துக் கழுவ பித்தவெடிப்பு நீங்கும்.

* முடி வறட்சியால் அதிகப்படியான முடிஉதிர்வு உடையவர்கள் நான்கு டீஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீரில் முதல் நாள் இரவு ஊறவைக்கவும். பின் தண்ணீர் வடித்து ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் கற்றாழையின் சதைப்பகுதி சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். இதை ஸ்கால்ப்பில் அப்ளை செய்து, மசாஜ் செய்து 10 நிமிடத்துக்குப் பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க, முடி உதிர்வுக்கு டாட்டா சொல்லலாம்.

* ஈவ்னிங் ப்ரீம் ரோஸ் ஆயிலை(அரோமா தெரப்பி கடைகளில் கிடைக்கும்) 15 சொட்டு எடுத்து உடல் முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்குப் பின் நலுங்கு மாவு பயன்படுத்திக் குளிக்க உடல் பட்டுப்போல் பளபளக்கும்.

* கற்றாழையின் சதைப்பகுதி ஒரு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பின் முகத்தைக் கழுவ சருமம் மென்மையாக இருக்கும்.

யுவதி

Related Stories: