×

சஞ்சு- செல்லப்பிராணிகளுக்கான பல்நோக்கு மருத்துவமனை

நன்றி குங்குமம் தோழி

வீட்டில் பலரும் செல்லப்பிராணிகளை வளர்ப்பது வழக்கம். செல்லப்பிராணி என்றாலே பொதுவாக நாய், பூனைதான் நம்முடைய நினைவுக்கு வரும்.
தற்போது மாறி வரும் பழக்க வழக்கங்களால் பலரும் புதுவிதமாக செல்லப்பிராணிகளைத் தேர்வு செய்கின்றனர். இப்போது பிராணிகள் என்றால் அதில் நாய், பூனையைத் தவிர வெளிநாட்டு கிளிகள், புறா, மைனா, லவ் பேர்ட்ஸ், முயல், ஆடு ஏன் மீன்களும் அடக்கம்.

இது போன்று வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிவிட்டிருக்கின்றன. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைக் காட்டிலும் செல்லப்பிராணிகளுக்காக ஒதுக்கப்படும் நேரமும் காட்டப்படும் அன்பும் அதிகம். அப்படி அன்பு செலுத்தும் செல்லப்பிராணிகளின் உடலுக்கு ஏதாவது சின்ன பிரச்னை வந்தாலும் நாம் பதறித்தான் போய் விடுகிறோம். மேலும் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்கள் போலவே உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படும். ஜுரம், சளி மற்றும் உடல் பருமன், பல் சார்ந்த பிரச்னைகள் ஏன் சிலவற்றுக்கு இருதயம் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும்.

மனிதர்களின் அனைத்து பிரச்னைக்கும் அதற்கான சிகிச்சைக்கு என பல் நோக்கு மருத்துவமனைகள் நிறைய உள்ளன. ஆனால் செல்லப்பிராணிகளுக்கு அது போன்ற மருத்துவமனைகள் பெரிய அளவில் இல்லை. அப்படியே இருந்தாலும், அது சிறிய அளவில் கிளினிக் போன்ற அமைப்புகள் தான் இருக்கின்றன. காரணம் செல்லப்பிராணிகளுக்கு அப்படி என்ன உடல் உபாதைகள் ஏற்பட்டுவிட போகிறது என்ற எண்ணம் தான். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நம்மில் பலர் நாட்டு நாய்களை வளர்ப்பதில்லை.

லேப்ரேடார், கோல்டன் ரெட்ரீவர், லசாப்சோ... போன்ற உயர் ரக நாய்கள் மற்றும் பெர்ஷியன் பூனைகளைதான் வளர்க்கிறார்கள். இது போன்ற உயர் ரக செல்லப்பிராணிகளுக்கு தான் எளிதில் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றை கவனத்தில் கொண்டு கெவின் கேர் நிறுவனத்தின் உரிமையாளர் சி.கே.ரங்கநாதன் ‘சஞ்சு’ என்ற பெயரில் செல்லப்பிராணிகளுக்காகவே 7200 சதுர அடி பரப்பளவில் அதிநவீன பல்நோக்கு மருத்துவமனை ஒன்றை அமைத்துள்ளார்.

சென்னை, அடையாரில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் மட்டும் இல்லாமல் செல்லப்பிராணிகளுக்கான ஸ்பா, தங்கும்
விடுதி, சூப்பர் மார்க்கெட் என சகல அமைப்புகளும் கொண்டுள்ளது. ‘‘இது போன்ற மருத்துவமனையை செல்லப்பிராணிகளுக்காகவே துவங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது’’ என்று பேசத் துவங்கினார் சி.கே.ரங்கநாதன்.
‘‘சஞ்சு எங்க வீட்டு செல்ல நாய்க்குட்டியின் பெயர். அவர்களுக்கான மருத்துவமனை என்பதால் அவனுடைய பெயரிலேயே துவங்கிட்டேன். சின்ன வயசில் இருந்தே எனக்கு செல்லப்பிராணிகளான நாய், பூனை, பறவைன்னு எல்லாமே ரொம்ப பிடிக்கும்.

நானும் வீட்டில் நாய், பூனை எல்லாம் வளர்த்தேன். பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தால் அவற்றுடன் தான் என் நேரத்தை செலவிடுவேன். ஆனால் ஒரு  கட்டத்தில் நான் செல்லப்பிராணிகள் மேல் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டேன். காரணம் படிப்பு முடிச்சிட்டு சொந்தமா ஒரு தொழில் துவங்கினேன். தொழில் நல்லபடியாக வரவேண்டும் என்பதால், நான் என்னுடைய முழு கவனத்தையும் அதில் செலுத்த துவங்கினேன். மேலும் பிசினசில் பிசியாக இருந்ததால் செல்லப்பிராணிகளை பராமரிக்கவும் என்னிடம் நேரம் இல்லை. ஆனால் என் மனதில் செல்லப்பிராணிகள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

தொழிலும் நல்ல நிலைக்கு வந்துவிட, என் மனதில் ஆழமாக பதிந்திருந்த எண்ணத்திற்கு உயிர் கொடுக்க நினைச்சேன். மறுபடியும் செல்லப்பிராணிகளை வளர்க்கலாம் என்று முடிவு செய்தேன். அதன் பிறகு நான் ஒவ்வொரு செல்லப்பிராணியாக வாங்க ஆரம்பிச்சேன். நாய் மட்டும் இல்லாமல், குதிரை, மாடு, பறவைகள்ன்னு பலதரப்பட்ட செல்லப்பிராணிகள் இப்போது நான் வளர்த்து வருகிறேன். பறவைகள் மட்டுமே 1500 உள்ளன. மாடுகளுக்கு தனி பண்ணை உள்ளது. அதில் 150 மாடுகள் உள்ளன. இவற்றை எல்லாம் என்னுடைய வீட்டில் வைத்து பராமரிக்க முடியாது. அதனால் கடலூரில் இவர்களுக்காகவே பெரிய பண்ணை அமைச்சிருக்கேன்.

அங்கு மாடு, குதிரை, பறவைகளும் உள்ளன. கடலூரில் மட்டும் இல்லாமல் சென்னையில் உள்ள என் வீடு கூட பறவைகளின் சரணாலயம் போல் தான் இருக்கும்’’ என்றவர் சஞ்சு ஆரம்பித்த காரணத்தை பற்றி விவரித்தார். ‘‘செல்லப்பிராணிகளுக்கு அவ்வப்போது உடல் நிலை சரியில்லாமல் போகும். குறிப்பாக உயர் ரக நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள். அதனால் அவற்றை நாம் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவை ஒரு நாள் சோர்ந்து படுத்துவிட்டாலும் எனக்கு மனசு பதைபதைத்துவிடும். உடனே என்ன பிரச்னைன்னு டாக்டரிடம் அழைத்து செல்வேன்.

இப்படி ஒவ்வொரு முறையும் அழைத்துசெல்வது வழக்கமாக இருந்தது. அந்த சமயத்தில் தான் இது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தேன். 12 டாக்டர் குழுவினை அமைத்து இவர்களுக்கு என்ன மாதிரியா உடல் உபாதைகள் ஏற்படும். அதற்கான தீர்வு என்ன என்று ஆய்வு செய்தேன். அதற்கான பலனையும் கண்டறிந்தேன். மேலும் இவைகளுக்கும் மனிதர்கள் போல் நல்ல முறையில் சிகிச்சைக்கான வசதியினை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நினைச்சேன். நான் செய்யும் ஆய்வு என்னுடைய செல்லப்பிராணிகளுக்கு மட்டும் இல்லாமல் மற்ற பிராணிகளுக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘சஞ்சு’ பிராணிகளுக்கான பல்நோக்கு மருத்துவமனை’’ என்றவர் மருத்துவத்தில் உள்ள வசதிகள் பற்றி விவரித்தார்.

‘‘பொதுவாக செல்லப்பிராணிகளுக்காக அமைக்கப்பட்டு இருக்கும் கிளினிக்கில் அவர்களுக்கு ஊசி போடுவார்கள், உடல் நிலை சரியில்லை என்றால், என்ன என்று பார்த்து அதற்கு மருந்து கொடுப்பார்கள். ஆனால் இது அப்படி இல்லை மனிதர்களுக்கான பல்நோக்கு மருத்துவமனையில் என்ன வசதிகள் உள்ளதோ, அதே வசதிகள் இவர்களுக்கும் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் செல்லப்பிராணிகளுக்கான அனைத்து வசதிகளும் அமைத்திருக்கிறேன். சாதாரண செக்கப், ஊசி போடுவது, கன்சல்டிங் போன்ற வசதிகள் மட்டும் இல்லாமல், அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆபரேஷன் தியேட்டர், ஐ.சியு பிரிவு, பற்களை பராமரிப்பதற்கு தனி பிரிவு, இருதயம், சிறுநீரகம் பிரச்னைக்கு தனி சிகிச்சை வசதி, எக்ஸ்ரே செய்யும் வசதி... என அனைத்து மருத்துவ வசதிகளும் இங்கு வருடம் முழுதும் இருபத்து நாலு மணிநேரமும் இயங்கப்படும். இந்த மருத்துவமனை நாய்களுக்கு மட்டும் இல்லை. பூனை மற்றும் பறவைகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். உயர் ரக நாய்களுக்கு தான் சிகிச்சை என்றில்லை.

சிலர் வீட்டில் ராஜபாளையம்,சிப்பிப் பாறை மற்றும் தெருவில் உள்ள சாதாரண நாய்களையும் வளர்ப்பார்கள். அவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். நாய்களை விட பறவைகள் மிகவும் சென்சிடிவ் என்பதால், அவைகளுக்கு சிறப்பு சிகிச்சை அறைகள் வழங்கப்பட்டுள்ளது’’ என்றவர் மருத்துவ வசதிகள் தாண்டி இவற்றின் மற்ற தேவைகளுக்கான வசதி இதில் இருப்பதாக தெரிவித்தார். ‘‘செல்லப்பிராணிகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் சிகிச்சை எடுத்தால் போதும் என்று இருந்திட முடியாது. அதன் அழகினையும் பராமரிக்க வேண்டும். சில நாய்களுக்கு உடலில் பூச்சிகள் இருக்கும்.

அதை நீக்க ஸ்பெஷல் ஸ்பா மற்றும் சலூன் வசதிகள் உள்ளன. இதில் பூச்சிகளை நீக்குவது மட்டும் இல்லாமல், நாய்களை குளிப்பாட்டுவது முதல் அதன் முடிகளை சீராக வெட்டி சீவிவிடுவது, கால் நகங்களை அகற்றுவது, மசாஜ் கொடுப்பது போன்ற வசதிகளும் உள்ளது. மேலும் இவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் வண்டி ஒன்றையும் தயார் படுத்தியுள்ளோம். சிகிச்சையின் போது செல்லப்பிராணிகளுடன் அவர்களின் எஜமானும் உடன் தங்குவதற்கு ஏற்ப மருத்துவமனையின் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க, வெளியூர் செல்லும் போது இவர்களை எங்கு விட்டுச் செல்வது என்ற கலக்கம் இனி படவேண்டியதில்லை.

அதற்கான விடுதி வசதியும் உள்ளது. அவர்களுக்கு தேவையான உணவுகளை கொடுத்துவிட்டால் போதும், அவர்கள் ஊருக்கு சென்று திரும்பி வரும் வரை இவர்கள் இங்கு அனைத்து வசதிகளுடன் தங்குவதற்கான அறைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது எல்லாவற்றையும்விட ஹைலைட்டான விஷயம் சூப்பர் மார்க்கெட். ஷாப்பிங் நமக்கு மட்டும் தானா. இவர்களுக்கும் செய்யலாமே... உணவு, கழுத்து பட்டை, அழகு சாதன பொருட்கள், பொம்மைகள் என பல உள்ளன’’ என்றவர் இவர்களுக்கான சிறப்பு ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்துள்ளார்.

‘‘முதலில் கடலூரில்தான் ஆய்வுகளுடன் மருத்துவமனையை துவங்கினேன். அங்கு என்னுடைய பண்ணையில் இருக்கும் அனைத்த பிராணிகளுக்காக ஆய்வு கூடத்துடன் மருத்துவமனையை செயல்படுத்தி வந்தேன். அது வெற்றிப்பெற்றதால், சென்னையிலும் ஒன்று துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அதன்படி உருவானது தான் சஞ்சு செல்லப்பிராணிகளுக்கான மருத்துவமனை. எனது அடுத்த கட்டம்... உயர்ரக பறவைகள், நாய்கள் மற்றும் இதர பிராணிகளின் மாதிரிகளை சேகரித்து அது குறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் அவர்களுக்கு என்ன மாதிரியான உடல் பாதிப்புகள் ஏற்படும், அதற்கான மருந்துகள் என்ன, டி.என்.ஏ ஆய்வுகள், முட்டை ஓட்டைக் கொண்டு ஆண் பறவையா அல்லது பெண் பறவைக் குஞ்சா என்று கண்டறிவது, இவர்களுக்கு விஷத்தன்மை ஏற்படுத்தும் உணவுகள் என்ன... போன்ற பல ஆய்வுகள் செய்து வருகிறோம். மேலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வப்போது சில மாற்றங்கள் மற்றும் புது யுக்திகளை கையாளும் எண்ணம் உள்ளது. 2024ம் ஆண்டுக்குள் தேசிய அளவில் 100 சஞ்சு மருத்துவமனைகள் துவங்கும் எண்ணம் உள்ளது’’ என்று தெரிவித்தார் சி.கே.ரங்கநாதன். இனி செல்லப்பிராணிகளுக்கு உடல் நிலை சரியில்லை என்ற கவலை வேண்டாம்... இருக்கவே இருக்கு சஞ்சு.

தொகுப்பு: ப்ரியா

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Sanju- Pets Multipurpose Hospital ,
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!