அறங்காவலர்களை நியமித்த பிறகே கோயில் நகைகளை உருக்கும் பணி தொடங்கும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழக கோயில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்த பிறகே, கோயில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கும் நடவடிக்கை தொடங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்துள்ளது. தமிழக  கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி  தங்கக்கட்டிகளாக மாற்றி  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய  இந்து சமய அறநிலையத் துறை  முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  இது சம்பந்தமாக செப்டம்பர்  22ம் தேதி பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து  செய்யக் கோரியும் இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் மற்றும் சிலர் உயர் நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய  அறநிலைய சட்டத்தில்  கோயிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும்  வழங்கவில்லை. கோயில்  நிர்வாகத்தில் மட்டுமே அறநிலையத்துறை தலையிட முடியுமே  தவிர மத வழிபாட்டு  விவகாரங்களில்  தலையிட முடியாது.

வருவாய் ஈட்டுவதற்காக  நகைகளை உருக்கி  டெபாசிட் செய்வதற்கு பதில் ஆக்கிரமிப்பில் உள்ள  ஆயிரக்கணக்கான ஏக்கர்  கோயில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம். கோயில்  நகைகள் தொடர்பாக முறையாக  எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படாத நிலையில்,  நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்வது கேள்வியை எழுப்பியுள்ளது.   பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய  நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த  அதிகாரமும் இல்லை. இந்துக்களின் மத  உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால்  நகைகளை உருக்குவது தொடர்பான  சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அதை  ரத்து செய்ய வேண்டும் என்று  கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை  நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள்  அறநிலையத்துறை விதிகளுக்கு முரணாக துறையின் ஆணையர்சுற்றறிக்கை  வெளியிட்டுள்ளார் என்று வாதிட்டனர்.

அப்போது, அரசு தரப்பில் அட்வகேட்  ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, கோயில்களில் பக்தர்கள் தரும் காணிக்கை  நகைகளை உருக்கி 24 கேரட் தங்கமாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்ய முடிவு  செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்  கிடைக்கும் ₹11.5 கோடி வட்டியை கோயில்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக காணிக்கை நகைகளை கண்டறியும்  பணி நடைபெறவில்லை. எனவே, கோயில்களுக்கு வரும் காணிக்கை தங்க பொருட்களை  கண்டறிய உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழு  அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் நடவடிக்கைக்கு எந்த தடையும்  விதித்துவிட கூடாது. கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க தேவையான நடைமுறைகள் தொடங்கியுள்ளது. அறங்காவலர்கள் நியமனத்திற்கு பிறகு தங்க நகைகளை  உருக்கும் நடவடிக்கை தொடங்கும் என்றார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்க நகைகள் மற்றும்  மதிப்புள்ள பொருட்களை மதிப்புமிக்க தங்க கட்டிகளாக மாற்றம் செய்து  வங்கிகளில் டெபாசிட் செய்வதன் மூலம் ₹11.5 கோடி வட்டி கிடைக்கும். அந்த  தொகையை கோயில்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும்  என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்களுக்கான அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக அரசு நடவ டிக்கை எடுத்து வருகிறது. தமிழக  அரசு பல்வேறு பணிகளை வேகமாக செய்து வருகிறது. கோயில் நகைகளை பொறுத்தவரை  உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு  அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கோயில்களுக்கு  பக்தர்கள் அளித்த காணிக்கை நகைகளை கண்டறியலாம்.  அறநிலையத்துறை சட்டப் பிரிவின்படி  கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக கோயில்களின் அறங்காவலர்  குழுதான் முடிவு செய்ய வேண்டும். எனவே, அறங்காவலர்களை நியமிப்பதற்கு முன்பு  காணிக்கை நகைகளை உருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக எந்த முடிவையும் அரசு  செய்ய கூடாது. இந்த வழக்கில் அரசு பொதுவான பதில் மனுவை 4 வாரங்களில்  தாக்கல் செய்ய வேண்டும். வழக்குகள் டிசம்பர் 15ம் தேதிக்கு  தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

Related Stories: