பேரிடர் மேலாண்மை 3 மாவட்ட போலீசாருக்கு முட்டுக்காடு கடற்கரையில் பயிற்சி

திருப்போரூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பேரிடர் நேரங்களில் பொதுமக்களை காக்கும் வகையில் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாருக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

 நான்காவது நாளான நேற்று முட்டுக்காடு கடற்கரை மற்றும் முகத்துவார பகுதிகளில் 44 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கடுமையான மழை, அதனால் ஏற்படும் வெள்ளம் ஆகியவற்றில் இருந்து பொதுமக்களை மீட்டெடுத்தல், சாலையில் விழுந்த மரங்களை அகற்றுதல், கட்டிட இடுபாடுகளில் சிக்கியுள்ள வர்களை மீட்டல், மின்தடையின் போது அவசர விளக்குகளை பயன்படுத்துதல், படகு மூலம் கடலோர மக்களை கடல் வழியாக அழைத்துச் சென்று பாதுகாப்பான இடங்களில் சேர்த்தல், தண்ணீரில் விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்ட மற்றும் நினைவு இழந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தல், போக்குவரத்தை சீர் செய்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. காவல்துறை உதவி ஆய்வாளர் எட்வர்ட் தலைமையில் பயிற்சியாளர்கள் கார்த்திக், இராமச்சந்திரன், சக்திவேல், ஆனந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் போலீசாருக்கு மேற்கண்ட பயிற்சிகளை அளித்தனர். இப்பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இந்த பயிற்சி முடித்தவர்கள் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

Related Stories: