வாலாஜாபாத்தில் பரபரப்பு 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது; வேன் பறிமுதல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலாஜாபாத் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக, காஞ்சிபுரம் நோக்கி சென்ற மினி வேனை மடக்கிப்பிடித்து, சோதனையிட்டனர். மேலும், வேனில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். இதனையடுத்து, வேனை ஆய்வு செய்தபோது, மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. பின்னர், அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தமிழ்நாடு குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை ஆய்வாளர் விநாயகத்திடம், கடத்தப்பட்ட அரிசி மற்றும் 2 பேரை  ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள், காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தை சேர்ந்த சந்துரு (42), ராஜமாணிக்கம் (18) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, விற்பனை செய்வதற்காக, கடத்தி சென்றது  தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் மீது, வழக்குபதிவு செய்து,  இக்கடத்தலின் பின்னணியில் யார், யார் உள்ளனர்?, இவை மொத்தமாக எங்கு கொண்டு செல்லப்படுகின்றன? என பிடிபட்ட 2 பேரிடமும் குடிமைபொருள் குற்ற புலனாய்வு துறை தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>