கிராம சபை கூட்டத்தை நடத்தியதாக பதிவுசெய்த ஊராட்சி செயலாளரை கண்டித்து பிடிஒ அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்: அடிப்படை பிரச்னைகள் தீர்க்க வலியுறுத்தல்

பள்ளிப்பட்டு: அம்மனேரி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்தியதாக பதிவுசெய்த ஊராட்சி செயலாளரை கண்டித்து பிடிஒ அலுவலகம் முன் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ஆர்.கே. பேட்டை அடுத்த அம்மனேரி கிராமத்தில் கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்றால் மட்டுமே கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் வெளியேறினர். இந்நிலையில், கிராம சபை கூட்டம் நடந்ததாக போலியாக பதிவுசெய்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கிராமத்தில் குடிநீர், சாலை, பள்ளி கட்டிடம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி கிராம மக்கள் 100ககும் மேற்பட்டோர் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  காலை முதல் மாலை வரை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போலியாக கிராமசபை கூட்டம் நடந்ததாகப் பதிவு செய்த ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஒரு வாரத்திற்குள் செய்து தரப்படும் என்று உறுதியளித்தார். அதனையேற்று, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: