ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி: தொழிலதிபர் தலைமறைவு

ஈரோடு: ஈரோடு சூளை, சி.எஸ்.நகரை சேர்ந்தவர் வள்ளல் பாபு என்கிற பாபு (56). இவர், ஈரோடு கங்காபுரத்தில் சோப்பு தயாரிப்பு நிறுவனம் உள்பட பல்வேறு சிறு நிறுவனங்களை நடத்தி வந்தார். தென்னிந்திய நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு குழுவில் துணை செயலாளராகவும் இருந்து வந்தார். மேலும், ஈரோடு அசோகபுரம் மெயின் ரோட்டில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். தினசரி வசூல், வார வசூல், மாத வசூல் என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தார். 250க்கும் மேற்பட்டோர் இவர் நடத்தி வந்த ஏலச்சீட்டில் பணம் செலுத்தி வந்தனர்.

ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு உரிய பணம் கொடுக்காமல் கால அவகாசம் கூறி வந்த நிலையில், நேற்று திடீரென அலுவலகம் பூட்டிக்கிடந்தது. பணம் செலுத்தியவர்கள் விசாரித்தபோது, தொழிலதிபர் பாபு தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து, பணம் செலுத்தியவர்களில் 30க்கும் மேற்பட்டோர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பின்னர், அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த பல ஆண்டுகளாக பாபு ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவர், ரூ.10 கோடி வரை மோசடி செய்திருக்கலாம்’’ என்றனர்.

Related Stories: