முன்னாள் சிஏஜி தலைவர் ராய் பகிரங்க மன்னிப்பு

புதுடெல்லி: ஒன்றிய கணக்கு தணிக்கை குழுவின் (சிஏஜி) தலைவராக இருந்தவர் வினோத் ராய். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான கணக்கு தணிக்கையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரை சேர்க்க வேண்டாம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் தன்னை வலியுறுத்தியதாக, கடந்த 2014ல் தான் எழுதிய புத்தகத்தில் ராய் தெரிவித்தார். அது பற்றி பல்வேறு பேட்டிகளிலும் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார். இது தொடர்பாக, வினோத் ராய் மீது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நிருபம் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், தனது கருத்துக்காக வினோத் ராய் நிபந்தனையற்ற, பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ‘தவறுதலாகவும், கவனக்குறைவாலும்  எனது புத்தகத்தில் சஞ்சய் நிருபம் பெயரை குறிப்பிட்டு விட்டேன். இதனால், அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட மனவலியை என்னால் உணர முடிகிறது,’ என்று அவர் தெரிவித்தார். வினோத் ராயின் இந்த பகிரங்க மன்னிப்பை ஏற்று கொண்டதாக நீதிமன்றத்தில் சஞ்சய் நிருபம் மனு தாக்கல் செய்தார். இதை நேற்று ஏற்று கொண்ட நீதிபதி, வினோத் ராயை இந்த வழக்கில் இருந்து விடுவித்து, வழக்கையும் தள்ளுபடி செய்தார்.

Related Stories:

More
>