முல்லை பெரியாறு நீர்மட்டம் பற்றி கண்காணிப்பு குழு முடிவு எடுக்கும்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்குவது குறித்து கண்காணிப்பு குழு முடிவு எடுக்கும்,’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக் குழுவை கலைக்க கோரியும், அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியும் ஜாய் ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அணை முழு பாதுகாப்பாக இருப்பதால், அதன் நீர்மட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை,’ கூறியது.

நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “142 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்தினால், அதை முல்லைப் பெரியாறு அணையால் தாங்க முடியாது. அதிக மழை பெய்தால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதுதான் தற்போதைய பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த அணையின் கீழ்மட்ட இடங்கள் கேரளாவிலும், மேல்மட்ட இடங்கள் தமிழகத்திலும் உள்ளன. எனவே, அணையில் பாதிப்பு ஏற்பட்டால்  கேரளாதான் அதிகம் பாதிக்கிறது.

இதை கருத்தில் கொண்டு, இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில் அணையில் 139.5 அடி மட்டுமே தண்ணீரை தேக்க வேண்டும் அல்லது அடுத்த 2 வாரங்களுக்காவது இந்நிலை நீடிக்க உத்தரவிட வேண்டும்,’ என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், இதற்கு இடைப்பட்ட காலத்தில் கேரள அரசு வரும் 8ம் தேதிக்குள் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 139.5 அடியாக வைத்திருப்பது குறித்து, அதற்காக  உருவாக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவே முடிவை எடுக்கும்,’ என்றும் உத்தரவிட்டனர்.

* இன்று காலை திறப்பு

முல்லைபெரியாறு அணை இன்று காலை 7 மணிக்கு திறக்கப்படும் என தமிழகம் அறிவித்துள்ளது.  அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 138.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 5800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2,300 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அணை திறக்கப்படுவதால், கரையோரங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

More
>