போதை பொருள் வழக்கில் கைதான ஷாரூக்கான் மகனுக்கு ஜாமீன்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் நிபந்தனைகள் இன்று தெரிவிக்கப்படும். இதனால் ஆர்யன் கான் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அருகே கடலில் கடந்த 3ம் தேதி  கோவா நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலை தேசிய போதை பொருள் தடுப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்து போதை பொருளை கைப்பற்றியதாக அறிவித்தனர்.

அப்போது நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கானை போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 7ம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் ஆர்யன் கான் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே ஆர்யன்கான் தாக்கல் செய்த ஜாமீன்மனுவை மாஜிஸ்திரேட் கோர்ட்டும், சிறப்பு நீதிமன்றமும் நிராகரித்தன. இதனை தொடர்ந்து ஆர்யன் கான் மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அவருடன் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட அர்பாஸ் மெர்ச்சண்ட் மற்றும் முன்மும் தமேச்சாவும் அந்த கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி நிதின் டபிள்யூ.சாம்பிரே முன்னிலையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். அப்போது ஆர்யன் கானிடம் போதை பொருள் கைப்பற்றப்படவில்லை என்றும், போதை பொருள் பயன்படுத்தவில்லை என்றும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் வாதிட்டார். அர்பாஸ் மெர்ச்சண்ட் சார்பில் அமித் தேசாயும், முன்மும் தேமேச்சா சார்பில் வக்கீல் அலி காஷிப் கான் தேஷ்முக்கும் வாதாடினார்கள். நேற்று முன்தினம் இவர்களின் வாதம் முடிவடைந்தது.

நேற்று தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில்சிங் வாதிட்டார். அப்போது ஆர்யன் கடந்த 2 ஆண்டாக போதை பொருளை பயன்படுத்தியதாகவும், அவரிடம் இருந்து போதைபொருள்  கைப்பற்றப்பட்டதாகவும் வாதிட்டார். இதனை தொடர்ந்து ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட் மற்றும் முமும் தமேச்சா ஆகிய மூவருக்கும் ஜாமீன்  வழங்கி நீதிபதி நிதின் டபிள்யூ.சாம்பிரே உத்தரவிட்டார். ஆனால் ஜாமீன் நிபந்தனை அறிவிக்கப்படவில்லை. இதனால் ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரும் நேற்று விடுவிக்கப்படவில்லை. இன்று ஜாமீன் நிபந்தனை குறித்து  நீதிபதி அறிவிப்பார். அதன் பின்னர் 3 பேரும் ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

Related Stories: