ஆசியான் நாடுகளுடன் 30 ஆண்டு நட்பு 2022 முழுவதும் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: ‘தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள 30 ஆண்டு நெருங்கிய நட்பை குறிக்கும் வகையில், 2022ம் ஆண்டு முழுவதும் ஆசியான் - இந்தியா நட்பு ஆண்டாக கொண்டாடப்படும்,’ என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். புருனே சுல்தானின் அழைப்பை ஏற்று, இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:  ஆசியானின் ஒற்றுமைக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்கும். இந்தியா-ஆசியான் நாடுகள் கொண்டுள்ள நெருங்கிய நட்புறவு, அடுத்தாண்டு 30 ஆண்டுகளை கடக்கிறது. அதேபோல், இந்தியா சுதந்திரம அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்த மைல்கற்களை குறிக்கும் வகையில், 2022ம் ஆண்டு ஆசியான்-இந்தியா நட்பு ஆண்டாக கொண்டாடப்படும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்களிப்பும், ஆசியான் கூட்டமைப்பின் பரஸ்பர ஒத்துழைப்பும் தொடர்கிறது. கொரோனா சவாலான தருணம் இந்தியா-ஆசியான் நட்புறவுக்கு பரிசோதனையாகவும் இருந்தது. கொரோனா காலத்தில் நமது பரஸ்பர ஒத்துழைப்பு, அனுதாபங்கள் ஆகியன நமது உறவை வலுப்படுத்தின. இது, எதிர்காலத்திலும் தொடரும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவும், ஆசியான் நாடுகளும் துடிப்பான நடபுறவை கொண்டுள்ளன என்பதற்கு வரலாறே சாட்சி. இவ்வாறு அவர் பேசினார்.  

* இன்று வெளிநாடு பயணம்

பிரதமர் மோடி 5 நாள் பயணமாக இன்று வெளிநாடு புறப்பட்டு செல்கிறார். இன்று முதல் அக்.31 வரை இத்தாலியின் ரோம், வாடிகன் நகரில் இருக்கிறார். அக்.31ம் தேதி கிளாஸ்கோ மாநாட்டில் பங்கேற்கிறார். நவ.1 மற்றும் 2ம் தேதி இங்கிலாந்து பிரதமரை சந்தித்து பேசுகிறார்.

Related Stories:

More
>