மூன்றாவது தலை யார்? மம்தா, கெஜ்ரிவால் போட்டா போட்டி

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருந்த போதிலும் கூட, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்க மாநிலத்துக்கு உள்ளேயே இத்தனை ஆண்டுகள் முடங்கி கிடந்தது. நாட்டின் மற்ற மாநிலங்களிலும் கட்சியை வளர்க்க வேண்டும் என்று இப்போதுதான் அதன் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி விழித்துக் கொண்டுள்ளார். திரிணாமுல்லின் இந்த சுறுசுறுப்புக்கு காரணம் மேற்கு வங்கத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 3வது முறையாக பெற்ற மகத்தான வெற்றிதான். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போன்று, மேற்கு வங்கத்தில் மம்தாவை அடியோடு வீழ்த்த பாஜ வகுத்த வியூகங்கள், திரிணாமுல்லை வீழ்த்த கொடுத்த குடைச்சல்கள் ஆகியவற்றை மம்தா பானர்ஜி எதிர்கொண்டு சவாலை சமாளித்த அனுபவம் அவருக்குள் புதிய நம்பிக்கை, புதிய உறுதி, புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தாவை தோற்கடிக்க அக்கட்சி முக்கிய தலைவர்களை பாஜவினர் தங்கள் கட்சிக்குள் இழுத்தனர். நந்திகிராம் தொகுதியில் அவரது கட்சியில் இருந்து பாஜவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியை மம்தாவுக்கு எதிராக வேட்பாளராக தேர்தலில் பாஜ களமிறக்கியது. தேர்தலுக்கு முன்பே பல்வேறு வன்முறைகளை அரங்கேற்றியது. மோடி, அமித்ஷா போன்ற முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் நேரிடையாக ஈடுபட்டனர். இது போன்ற ராஜதந்திரங்களை பாஜ கையாண்டும் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை. மம்தா பானர்ஜி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றார்.

இதனால் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்த பாஜ, சுவேந்து அதிகாரியிடம் மிக குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றியை தவறவிட்ட மம்தாவின் தோல்வியை கொண்டாடினர். ஆனால், அதற்கும் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கொடி நாட்டினார். பாஜவின் இத்தனை இடையூறுகளையும் கடந்து மேற்கு வங்க சிங்கப் பெண்ணாக உருவெடுத்த மம்தா முதல்வராக வலம் வருகிறார். மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் எதிர்கொண்டது போன்றே தேசிய அளவில் சவால்களை சந்திக்க மனதைரியத்துடன் விஸ்வரூபம் எடுக்க முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில், விரைவில் நடக்கவுள்ள கோவா, திரிபுரா சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்தார். அதன்படி, கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். இதற்கிடையே மேற்கு வங்கம், திரிபுரா மாநில பாஜ எம்எல்ஏக்கள் கணிசமாக திரிணாமுல் காங்கிரசில் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளனர். இதனால் பாஜவுக்கு அம்மாநிலங்களில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசியலில் தனக்கு கிடைத்துள்ள முக்கியத்துவத்தை அனைத்து மாநிலங்களிலும் விதைத்து தன்னை தேசிய தலைவராக வார்த்தெடுக்கும் ஆசை மம்தா பானர்ஜிக்கு வந்து விட்டது. இதனால், பாஜ.வுக்கு மாற்றாகவும், எதிர்க்கட்சியாகவும் உள்ள காங்கிரசையும் அடிக்கடி விமர்சித்து வருகிறார்.

கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்ற மம்தா, ‘காங்கிரஸ் பாஜவுக்கு எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக் கொள்ளாமல் டிவிட்டருக்குள்ளேயே முடங்கி விட்டது’ என்று விமர்சித்துள்ளார். ்காங்கிரஸ் பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க இதுவரை முன்வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். அதே நேரம், திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டும். காங்கிரஸ் இல்லாமல் பலமான கூட்டணி உருவாக முடியாது. எனவே, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கதவுகள் திறந்தே இருக்கிறது’. ஆனால் அதுவரை எங்கள் நேரத்தை வீணாக்கிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்க முடியாது என்று மம்தா குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கட்சியாக அறிவித்துக் கொள்ளும் திரிணாமுல் காங்கிரஸ், இதர மாநிலங்களில் வெற்றி முத்திரை பதிப்பதற்கு முன்னதாகவே, கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிக்கு பல மாநிலங்களில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. டெல்லியில் மட்டும் செல்வாக்குடன் இருந்த ஆம்ஆத்மி கட்சி அமைதியாக மற்ற மாநிலங்களில் வேரூன்றி வருகிறது. இதற்கு அக்கட்சியின் கொள்கையும், வெளிப்படைதன்மையுமே காரணம். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி மின்சார கட்டணத்தை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்து ‘பஞ்சாப்பில் தங்கள் கட்சியை பிரதானப்படுத்தியுள்ளது ஆம்ஆத்மி’. தற்போது அம்மாநிலத்தில் 20 எம்எல்ஏக்கள் ஆம்ஆத்மி கட்சிக்கு உள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியாகவும் ஆம்ஆத்மி திகழ்கிறது. உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை களமிறக்கி பாஜவுக்கு நெருக்கடி கொடுக்கவும் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். இப்படி சத்தமே இல்லாமல் கெஜ்ரிவால் தேசிய தலைவராக உருவாகி வருகிறார் என்பதை, பிரதான தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜ.வும் கூட உணர்ந்துள்ளன. இக்கட்சி தலைவர்களுக்கு அடுத்தப்படியாக 3வது தேசிய தலைவர் அந்தஸ்தை பிடிக்க மம்தாவும், கெஜ்ரிவாலும் போடும் போட்டிக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்பது அடுத்தாண்டு 5 மாநிலங்களில் நடக்கும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்.

Related Stories: