முன்னாள் கவுன்சிலர் குடும்பத்தினர் மீது தாக்குதல்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 50 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு

சென்னை: சென்னை பெரியமேடு சுப்பையா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. திமுக 58வது வட்ட செயலாளரான இவர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலராகவும் பதவி வகித்தார். கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் தனது நண்பர் ரகுவுடன், அதே பகுதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் அருகே ஆட்டோவில் சென்றபோது, பாரூக் என்பவரின் பைக் மீது மோதியதாக கூறப்படுகிறது.இதனால், கிருஷ்ணமூர்த்திக்கும், பாரூக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களுடன், கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவலறிந்து திரண்ட கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி தரப்பினர் அளித்த புகாரின் பேரில், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை ேசர்ந்த 50 பேர் மீது ஐபிசி 147 (சட்டவிரோதமாக கூடுதல்), 148 (ஆயுதங்களுடன் கூடுதல்), 294(பி) (ஆபாசமாக பேசுதல்), 323 (சிறுகாயம் ஏற்படுத்துதல்), 451 (வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல்), 506 (2) (கொலை மிரட்டல்) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் என 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல், பாரூக் கொடுத்த புகாரின்பேரில், கிருஷ்ணமூர்த்தி உட்பட 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: