வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரபரப்பு 7 நெருப்பு கோழிகள், பெண் சிங்கம் மர்ம சாவு

சென்னை: வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு குரங்கு, சிங்கம், புலி, யானை, மான்,  நெருப்பு கோழி, பாம்பு மற்றும் பல்வேறு அரிய வகை விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக,  இப்பூங்கா மூடப்பட்டு இருந்தது. தற்போது, கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாலும், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும், தற்போது, பொதுமக்களின் பார்வைக்கு மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், பூங்காவில் இருந்த 35 நெருப்புக் கோழிகளில், கடந்த திங்களன்று ஒரு நெருப்பு கோழி மேய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென கீழே சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியானது.

மறுநாள் இதேபோல், மற்றொரு நெருப்புக்கோழி  கீழே விழுந்து பரிதாபமாக இறந்தது. மேலும், நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 நெருப்புக் கோழிகள் பராமரிப்பு பகுதியில் சுற்றி கொண்டிருந்போது, அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தன. இதுகுறித்து, அவற்றை பராமரிக்கும் ஊழியர்களிடம் பூங்கா உயரதிகாரிகள் கேட்டபோது, நெருப்புக் கோழிகள் உட்கார்ந்த நிலையில்,திடீரென சாய்ந்து, வாயிலிருந்து ரத்தம் வடிந்த நிலையில் இறந்து விடுவதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த பூங்கா கால்நடை மருத்துவர்கள்  சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த நெருப்பு கோழிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர்.

மேலும், இறந்துபோன நெருப்புக் கோழிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன. அவை பறவை காய்ச்சல் பாதிப்பினால் இறந்துள்ளனவா என கால்நடை மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இங்கு 35 நெருப்புக் கோழிகள் இருந்த நிலையில், 3 நாட்களில், அடுத்தடுத்து, 7 நெருப்புக் கோழிகள் மர்மமான முறையில் இறந்தன. இதையடுத்து, நெருப்புக்கோழி பராமரிக்கப்படும் இடத்தை சுத்தம் செய்து, நோய் தடுப்பு மருந்து அடிக்கும் பணிகளை கால்நடை மருத்துவ ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட 19 வயதான பெண் சிங்கம் கவிதா மூப்பு காரணமாக, நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது. இது,  ஏற்கெனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, தகுந்த சிகிச்சைகளால் குணமானது குறிப்பிடத்தக்கது. பெண் சிங்கம் மற்றும் 7 நெருப்பு கோழிகளின் திடீர் மரணம் பூங்கா நிர்வாகத்தினர், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: