மாநில நிதியில்தான் இல்லம் தேடி கல்வி திட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை மேற்கு சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அரசியல் தலைவர் தெரிவித்த கருத்துகளை மனதில் வைத்து, பிரச்னை இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.  இந்த திட்டத்தில் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பாடம் நடத்த பதிவு செய்துள்ள தன்னார்வலர்களில் அதிகம் பெண்கள் தான் இடம்பெற்றுள்ளனர்.

அதன் அடிப்படையில் பாடம் நடத்தும் போது பெண்களுக்கு அதிக அளவில் முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தைகள் வசிக்கின்ற பகுதிகளில்  தான் பாடம் நடத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது இந்த திட்டத்துக்கான பயிற்சி தொடங்க உள்ளது. இந்த திட்டம் தற்போது 6 மாதத்துக்கு நடத்தப்படும். இதன் மூலம் கிடைக்கும் வெற்றியை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கான நிதி  முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியில்  இருந்து தான் செலவிடப்படுகிறது. பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் அல்லது பள்ளி தொடங்குவதற்கு முன்பாக ஒரு மணி நேரம் இந்த வகுப்புகள் நடத்தப்படும். நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனால் பள்ளிக்கு வராத மாணவ, மாணவர் கற்றல் குறையை தீர்க்கவும், பள்ளியில் இருந்து குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்கவுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் மூலம் குழந்தைகளை பள்ளியை நோக்கி வரவழைக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் என்றார்.

Related Stories: