சென்னை கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட தரமற்ற மணல், சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது அம்பலம்: ஆய்வறிக்கையில் தகவல்

சென்னை: சென்னை புலியந்தோப்பு கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்த ஐஐடி நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை புளியந்தோப்பில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 1,920 வீடுகளை உள்ளடக்கிய 10 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், தரமற்ற பொருட்கள் காரணமாக பல இடங்களில் பெயர்ந்து விழுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அரசியல் கட்சியினரும், துறை சார் அதிகாரிகளும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகளை கட்டிக்கொடுக்கும் நோக்கில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதல்முறையாக கடந்த 1970-ம் ஆண்டு திமுக அரசு இந்த வாரியத்தை உருவாக்கியது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை நான்கு லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் மாநிலத்தில் பூதகராமாகியதால் கட்டடத்தின் தரத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி ஐஐடி நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வந்த நிலையில் க்யூப் நிறுவனம் மேற்கொண்ட சோதனையில் கட்டடத்துக்கு பயன்படுத்திய சிமென்டின் தேவையான அளவு அதிகபட்சமாக 70% குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கேபி பார்க் கட்டடத்தில் பம்ப் மோட்டார்கள், மீட்டர் போர்டுகள் மற்றும் மின்சார இணைப்பு சார்ந்த சாதனங்களில் குறைபாடு உள்ளது. கட்டுமான பணிக்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பூச்சு வேலை மிக மோசமாக உள்ளதாகவும் டைல்ஸ் கற்கள் சரியாக பொறுத்தப்படாததால் சுவர்கள் எளிதில் தண்ணீரை உறிஞ்சி வலுவிழந்துவிடும் அபாயம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சரியான இடைவெளியில் கட்டடத்திற்கு தேவையான பராமரிப்பு வேலைகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என்றும் கட்டடத்தை எப்படி பராமரிப்பது என்பது பற்றி அங்கு வசிக்கும் மக்களுக்கு கற்றுத்தரவும் ஐஐடி அந்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

Related Stories: