தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட், காரம் தயாரிப்பில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே வண்ணம் சேர்க்க வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

சென்னை: ஒவ்வொரு  ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு ஸ்வீட், பேக்கரி கடை உரிமையாளர்கள், பலகார  சீட்டு நடத்துவோர் உள்பட பல்ேவறு தரப்பினர் ஸ்வீட், காரம் தயாரித்து  சம்பந்தப் பட்டவர்களுக்கு வழங்குவார்கள். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை  நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஸ்வீட், காரம் தயாரிக்க  தேவையான பொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் களுக்கான  விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் ஸ்வீட், காரம்  சுத்தமாகவும், சுகாதாரமாகவும் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று அதிகாரிகள்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இக்கூட்டத்திற்கு பின்னர் உணவு  பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட அலுவலர் கதிரவன் கூறுகையில், `சேலம் மாநகர்,  மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட ஸ்வீட், காரம் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட், காரத்திற்கு பயன்படுத்தப்படும்  எண்ணெயை அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே சூடாக்க வேண்டும். டின்னில்  அடைக்கப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். டின்னில்  திறந்தவெளியில் இருக்கும் எண்ணெயை வாங்கி பயன்படுத்தக்கூடாது.  நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட வண்ணம் கலக்கக்கூடாது. நெய், டால்டா  சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்படும் ஸ்வீட், காரம்  பண்டங்களில் தயாரிக்கப்பட்ட தேதி, உணவின் பெயர், காலாவதி தேதி குறிப்பிட  வேண்டும். கூடுதலாக வண்ணம் கலந்தால், அதனால் கல்லீரலுக்கு பாதிப்பு  ஏற்படும். தீபாவளி பண்டிகை வரை தயாரிக்கப்படும் ஸ்வீட், காரம் சோதனை  செய்யப்படும். இந்த சோதனையில் ரசாயனம், அதிகம் வண்ணம் கலந்து இருப்பது  தெரிய வந்தால், அந்த உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி  நடவடிக்கை எடுக்கப்படும்.  ஸ்வீட், காரம் தயாரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள்  நகங்களை வெட்டி இருக்க வேண்டும். சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும்  ஸ்வீட், காரம் இனிப்பு தயாரிக்க வேண்டும்` என்றார்.

பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

* உணவு பொருள் தயாரிப்பு அளவை பொறுத்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

* இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.

*  தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான பாத்திரங்கள், இருப்பு கலன்கள் தூய்மையாக  கழுவி உபயோகப்படுத்தும் முன்பு நன்றாக உலர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

* தயாரிப்பு பகுதி மற்றும் சமையலறையில் போதிய வௌிச்சம் இருக்க வேண்டும்.

* சமையலறையில் போதுமான உறிஞ்சும் அமைப்புடன் கூடிய புகை போக்கி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

* உணவு சமைக்கும், கையாளும் பணியாளர்கள் தன் சுத்தம் பராமரிக்க வேண்டும். தூய்மையான ஆடைகள் அணிய வேண்டும்.

* பணியின்போது, பணியாளர்கள் கையுறை, தலையுறை, மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.

* பணியாளர்கள் அனைவரும் மருத்துவ தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.

* இனிப்பு, காரவகைகள் தயாரிப்பில் சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

* சமையலுக்கு பொட்டலமிட்டப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* உணவு தயாரிப்பின்போது சமையல் எண்ணெய் அதிகபட்சமாக மும்முறை மட்டுமே சூடாக்கப்பட வேண்டும்.

* இயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படலாம். அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் 100 பிபிஎம் அளவில் சேர்க்கலாம்.

*  பேக்கிங் செய்யப்படும் உணவு பொட்டலங்கள் மற்றும் பாக்கெட்டுகள் மீது உணவு  பொருளின் விபரங்கள் அச்சிடப்பட வேண்டும். விபர சீட்டு பார்வைக்கு தெரியும்  வகையில் உள்ளே வைக்கப்பட வேண்டும்.

* விபரச்சீட்டில் உள்ள விபரங்கள் தெளிவாக படிக்கும் வகையில் அச்சிடப்பட வேண்டும்.

* தயாரிப்பாளர் பேக்கிங் செய்து நுகர்வோருக்கு நேரடியாக தரும்போது உணவு தரத்திலான கொள்கலன்களை பயன்படுத்த வேண்டும்.

Related Stories: