சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான 100 நாள் கவுன்ட் டவுன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது..!!

பெய்ஜிங்: சீனாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான 100 நாள் கவுன்ட் டவுன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. பெய்ஜிங்கில் 2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான 100 நாள் கவுன்ட் டவுன் தொடங்கும் நிகழ்வு வெகு விமர்சியாக நடைபெற்றது. ஒலிம்பிக்ஸ் நடைபெறவுள்ள அரங்கு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு நடன நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதேபோன்று ஹே லாங் ஜியாங் மற்றும் ஜிலின் மாகாணத்தில் 100 நாள் கவுன்ட் டவுனை ஒட்டி ஏராளமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு சாகசங்களும் நடைபெற்றன. குறிப்பாக பனி சறுக்கு விளையாட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் குறித்தும், சீனாவின் கலாச்சாரத்தை நினைவுபடுத்தும் நோக்கிலும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டன. ஒலிம்பிக்ஸ் போட்டியை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் காகிதமற்ற கணினி மயமாக்க சேவைகளால் ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு பணிகள் துரிதமாக நடைபெறும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளதால் குளிர்கால ஒலிம்பிக் தொடரை பாதுகாப்பாக நடத்துவது அந்நாட்டிற்கு சவாலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: