சசிகலாவை கட்சியில் சேர்ப்பதில்லை என்பதே அதிமுக-வின் நிலைப்பாடு!: அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடமில்லை..ஜெயக்குமார் திட்டவட்டம்..!!

சென்னை: சசிகலாவை கட்சியில் சேர்ப்பதில்லை என்பதே அதிமுக நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சசிகலாவை ஆதரிப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது அதிமுகவின் நிலைப்பாடு; அது ஏற்கனவே எடுத்த முடிவு என்றும் அவர் கூறினார். டி.டி.வி. தினகரன் இல்ல திருமணத்துக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அனைத்தையும் கட்சி கவனித்துக் கொள்ளும் என்று கூறியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசும் போது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று  ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே சசிகலா விவகாரத்தில் அதிமுகவுக்குள் சர்ச்சையை கிடையாது என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார். சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொன்ன பிறகு எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். கூறியதில் என்ன தவறு உள்ளது என்றும் செல்லூர் ராஜூ குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு மாற்றாகவே தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதனால் அதிமுகவில் மோதல் அதிகரித்துள்ளது.

Related Stories: