பட்டிவீரன்பட்டி அருகே 2 ஆண்டிலே தார்ச்சாலை சேதம்

* அதிமுக ஆட்சியில் அமைத்தது *புதுப்பித்து தர கோரிக்கை

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே அ.பிரிவிலிருந்து  வெங்கடாஸ்திரி கோட்டை வரையுள்ள சுமார் 2 கிமீ தார்ச்சாலை வத்தலக்குண்டு  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாலையாகும். இச்சாலை கடந்த அதிமுக ஆட்சியில்  கடந்த 2017ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஒப்படைப்பு வருவாய் திட்டத்தின் கீழ்  சுமார் ரூ.27.74 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டது. தரமில்லாம்  போடப்பட்டதால் இச்சாலை அமைத்த 2 ஆண்டுகளிலே சேதமடைந்து குண்டும், குழியுமாக  மாறி விட்டது. பல இடங்களில் தார் சாலை போட்டதற்கான அடையாளமே தெரியாமல் மண்  சாலையாக மாறி கிடக்கிறது.இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த  ரோட்டை அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, அய்யங்கோட்டை,  லட்சுமிபுரம், மரியாயிபட்டி, எம்.வாடிப்பட்டி என 20க்கும் மேற்பட்ட  கிராமமக்கள் நிலக்கோட்டை, கொடைரோடு, மதுரை, உசிலம்பட்டி போன்ற ஊர்களுக்கு  செல்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் மறுமார்க்கத்தில்  உசிலம்பட்டியிலிருந்து மேலக்கோயில்பட்டி வழியாக அ பிரிவு வந்து  பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் செல்வதற்கும்,  மதுரையிலிருந்து  நிலக்கோட்டை வழியாக வரும் வாகனங்கள் வத்தலக்குண்டு நகருக்குள் செல்லாமல்  கொடைக்கானல், தேனி போன்ற ஊர்களுக்கு செல்வதற்கும் இந்த இணைப்பு ரோடு  முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்பகுதி கிராமங்களை சேர்ந்த பள்ளி- கல்லூரி  மாணவ- மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் இந்த  ரோட்டை அதிகளவில் வருகின்றனர். தரமில்லாமல் போடப்பட்ட இந்த ரோடு சில  ஆண்டுகளிலே சேதமடைந்து மோசமாகி விட்டது. இந்த ரோட்டில் செல்வதால் வாகன  பழுது, டயர் பஞ்சர் என வாகனங்களுக்கு பராமரிப்பு செலவு ஏற்படுகிறது.  இதனால்  பலர் இந்த ரோட்டில் செல்வதை தவிர்த்து வத்தலக்குண்டு சென்று  அங்கிருந்து சுமார் 7 கிமீ தூரம் சுற்றி செல்கின்றனர். எனவே மாவட்ட  நிர்வாகம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இந்த ரோட்டை  அகலப்படுத்தி நல்ல தரமான ரோடு அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: