×

கொரோனா பாதிப்பு சூழ்நிலைகளை ஆராய்ந்து கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருவண்ணாமலை: கொரோனா தொற்று பாதிப்பு இருக்காது என்ற நிலை உருவானால், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான பக்தர்களின் கோரிக்கைக்கு முதல்வர் அறிவிப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் பல்வேறு பணிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். மேலும், பல்வேறு திட்டப்பணிளை தொடங்கி வைத்தார். பின்னர், அண்ணாமலையார் கோயிலில் தங்க ரதத்தை பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வந்தார். அப்போது, திருக்கோயில் உற்சவமூர்த்தியை அமைச்சர் சேகர்பாபு, தோளில் சுமந்துவந்து தங்கரதத்தில் ஏற்றினார். இதையடுத்து கோயில் அருகே பக்தர்களின் முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவமனையை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும், ஈசான்யம் அருகே கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் திருக்கோயில்கள் வளர்ச்சிப்பணிகள் மற்றும் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், அம்பேத்குமார், எஸ்பி பவன்குமார், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போது, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைந்த வருமானம் வரக்கூடிய ஒருகால பூஜை மட்டுமே நடைபெறும் 12,957 கோயில்களை, வருமானம் வரக்கூடிய கோயில்களின் நிதியில் இருந்து நிர்வகிக்கிறோம். இக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாதம் 1000 வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் உள்ளாட்சி அமைப்புகள் தீபத்திருவிழாவுக்காக 2.10 கோடி செலவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த செலவை அறநிலையத்துறை ஏற்றுக்கொள்ளும். அதேபோல், கோயிலைச் சுற்றியுள்ள வட ஒத்தவடை, தென்ஒத்தவாடை சாலையை தரமாக அமைக்கும் பணியையும். கிரிவலப்பாதையில் மின்விளக்குகளுக்கான கட்டணத்தையும் அறநிலையத்துறை ஏற்கும்.

திருக்கோயில்களுக்கு சொந்தமான கடைகளின் வாடகை கடந்த 2012ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவின் முடிவுபடி வசூலிக்கப்படுகிறது. அதை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, நியாய வாடகை நிர்ணய குழு ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் உத்தரவு கிடைத்ததும், உடனடியாக வாடகை குறைக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில், 84 கோடியில் 48 பணிகளுக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் தேர்களை பாதுகாக்க கட்டிடம் கட்ட 10 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறோம் என்றார்.அதைத்தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:பக்தர்களின் மகிழ்ச்சி என்பது இந்த ஆட்சியில், முதல்வரின் மகிழ்ச்சியாகும். திருவண்ணாமலை தீபத்திருவிழாக்கு கடந்த 25 ஆண்டுகளாக வருகிறேன். ஆனால், கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் சூழ்நிலைகளை ஆராய்ந்த பிறகுதான் தீபத்திருவிழா தொடர்பான ஒரு முடிவுக்கு வர முடியும்.

கேரளாவில் பக்ரீத், ஓணம் பண்டிகைகளுக்கு முழு அனுமதி அளித்தால், அங்கு இப்போதும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்ததை, முதல்வரின் தொடர் நடவடிக்கையால் 1,100ஆக குறைந்திருக்கிறது. ஆனாலும், திருவண்ணாமலையில் தினமும் சுமார் 25 பேர் பாதிக்கப்படுகின்றனர்.கோயில்களில் தரிசனம் செய்ய 4 நாட்கள் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் 65 தங்கத்தேர்கள், 49 வெள்ளித்தேர்களை பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக உலா வர தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, தீபத்திருவிழா தொடங்குவதற்கு இன்னும் ஒருவார காலம் இருக்கிறது. தொற்று பரவல் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். மேலும், கொரோனா ெதாற்று பாதிப்பு இருக்காது என்ற நிலை இருக்குமானால், தீபத்திருவிழாவுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பக்தர்களின் கோரிக்கைக்கு முதல்வர் நிச்சயம் செவிசாய்ப்பார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையை பொதுப்பணித்துறை சார்பில் ₹15 கோடியில் மேம்படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

அமைச்சர் தெரிவித்துள்ள கோரிக்கைள் அனைத்தும் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும். திருவண்ணாமலை கோயில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படும். கிரிவலப்பாதையில் உள்ள கோயில் குளங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.கூட்டத்தில், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், எ.வ.வே.கம்பன், எம்.எஸ்.தரணிவேந்தன், கார்த்திவேல்மாறன், அருணை வெங்கட், இரா.ஜீவானந்தம், பிரியா விஜயரங்கன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி, மாவட்ட கவுன்சிலர் இல.சரவணன், கோயில் இணை ஆணையர் அசோக்குமார், மண்டல இணை ஆணையர் கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

6 ஆண்டுகளுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்த தங்கத்தேர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்கத் தேர், 87 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்டு கடந்த 2006ம் ஆண்டு தனது முதல் பவனியை தொடங்கியது. இந்நிலையில், கும்பாபிஷேக திருப்பணி காரணமாக, கடந்த 2015ம் ஆண்டு முதல் தங்கத்தேர் பவனி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்ததும் 2017ம் ஆண்டு தங்கத்தேர் பவனிக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையில் நிறுத்தியிருந்ததால், தங்கத்தேர் பழுதாகி இருந்தது. எனவே, தங்கத்தேர் சீரமைக்கப்பட்டு, 2019ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது.

அதைத்தொடர்ந்து, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேர்த்திக்கடனாக பக்தர்கள் தங்கத்தேர் இழுந்துச் சென்றபோது, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் திடீரென தங்கத்தேரின் மேல் பகுதியில் பொருத்தியிருந்த கலசம் பீடத்துடன் உடைந்து விழுந்தது. அதைத்தொடர்ந்து, தேர் பவனி பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் சீரமைப்பு பணி நடந்தது.இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது. இதுபோன்ற காரணங்களால், 2015ம் ஆண்டுக்கு பிறகு தங்கத்தேரை பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலையே நீடித்தது. தற்போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், நேற்று தங்கத்தேர் பவனியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.



Tags : Principal ,Cardai Fetetti-Festival ,Corona ,Minister ,Morality Segerbabu , Chief Minister to announce permission for Karthika Fire Festival after examining corona vulnerabilities
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி